search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது பற்றி பரிசீலிக்கும் தங்க தமிழ்செல்வன்
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது பற்றி பரிசீலிக்கும் தங்க தமிழ்செல்வன்

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்த வழக்கை வாபஸ் பெறுவது பற்றி தங்க தமிழ்செல்வன் பரிசீலனை செய்து வருகிறார்.
    சென்னை:

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சபாநாயகரின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தார். நீதிபதி சுந்தர் செல்லாது என்றும் தீர்ப்பு கூறினார். இதனால் 3-வது நீதிபதி விமலா விசாரணைக்கு வழக்கு சென்றுள்ளது.

    இதுபற்றி தங்க தமிழ் செல்வன் கூறியதாவது:-

    நான் நீதிபதிகளின் தீர்ப்பை மதிப்பவன். ஆனால் எங்கள் வழக்கில் எந்த காலக்கெடுவும் சொல்லாமல் தீர்ப்பு கூறியதால் தான் அதை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    3-வது நீதிபதியை நியமித்து 10 நாளில் வழக்கை முடிக்குமாறு கூறி இருந்தால் மதித்திருப்பேன். எங்களுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். அதை ஏன் சொல்லவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.

    நாங்கள் எம்.எல்.ஏ.வாக இருக்கிறோமா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள 9 மாதம் காத்து இருந்திருக்கிறோம். இன்னும் எங்களுக்கு தெளிவாக விடை கிடைக்கவில்லை.

    அதன்படி நியாயத்தை எதிர்பார்த்து நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் அங்கும் மாத கணக்கில் வழக்கு நடந்தால் என்ன பிரயோஜனம்? எங்கள் பதவி காலமே முடிந்து விடும்.

    அதனால்தான் வழக்கை வாபஸ் பெறப்போவதாக கூறி இருந்தேன். ஆனால் இப்போது அதுவும் முடியுமா? முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.

    ஏனென்றால் வழக்கை வாபஸ் பெற எந்த நீதிபதியிடம் மனு கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மனுவை ஏற்க மறுத்தால் யாரை அணுகுவது என்ற நிலை ஏற்படும்.

    அப்படியே மனு ஏற்கப்பட்டாலும் உடனே இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வரை தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தி விடுவார்கள்.

    அப்படியே தேர்தல் நடந்தாலும் நான் இடைத்தேர்தலில் நிற்க முடியுமா? முடியாதா? என்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடுவார்கள்.

    தேர்தலில் நின்றாலும் தேர்தல் அதிகாரி மூலம் எனது மனுவை நிராகரிக்க செய்து விடுவார்கள்.

    இந்த அளவுக்கு எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்க சட்டத்தில் இடம் உள்ளதால் யோசிக்க வேண்டி உள்ளது.

    சட்ட நிபுணர்களும் 3 விதமான கருத்தை கூறி உள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

    அடுத்த வாரம் பெங்களூர் செல்கிறேன். அப்போது கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சிறைக்கு சென்று சந்தித்து பேச உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×