search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs disqualification case"

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
    சென்னை:

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதற்கு மாறாக எதிர்த்து ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். இதில் எங்களுக்கு ஒரு நீதி அவருக்கு ஒரு நீதியா? இதை தெளிவுபடுத்ததான் கோர்ட்டுக்கு சென்றோம்.

    ஆனாலும் எங்கள் மீதான வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரிதான் என்று கோர்ட்டு தீர்ப்பு கொடுத்து விட்டது.


    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போகலாம் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் இதை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்தாமல் விட்டுவிடுவார்கள் என்பதால் நாங்கள் இதுவரை அப்பீல் செய்யாமல் இருந்தோம்.

    ஆனால் இப்போது சில அதிகாரிகளிடம் நாங்கள் விசாரித்த போது வேறுவிதமான தகவல்களை சொல்கிறார்கள்.

    18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அப்போது எங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி மூலம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காரணம் கேட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாவிட்டால் மாற்று வேட்பாளர்தான் தேர்தலில் நிற்க முடியும். இதனால் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று எடப்பாடி அணியினர் மனக்கணக்கு போடுகிறார்கள்.

    இதையும் மீறி தேர்தல் நடந்தால் 10 தொகுதி தேர்தலை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தி விடுவார்கள். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

    எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் இடைத்தேர்தலில் நின்றால் எங்கள் மனு தள்ளுபடி ஆகுமா? ஆகாதா? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

    இது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அவரும் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதற்காக நாங்கள் அனைவரும் சென்னையில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போக வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளனர். அப்பீல் செய்யாவிட்டால் வேறு கட்சிக்கு சிலர் சென்று விடுவார்கள் என்ற பயமும் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பீல் முடிவை தினகரன் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு நகலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டசபை செயலாளர் அனுப்பிவைத்தார். #18MLAsdisqualificationcase #TNElectionCommission
    சென்னை:

    அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் ப.தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நீதிபதிகள் 2 பேரும் வழங்கிய தீர்ப்பு மாறுபட்டதாக அமைந்ததால், 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி தனது தீர்ப்பை வழங்கினார்.

    அந்தத் தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். அந்த தீர்ப்பின் சாராம்சம் 475 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்ப்பின் நகல் சமீபத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த நகலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு நேற்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அனுப்பிவைத்தார்.



    இனி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தீர்ப்பு நகலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். விரைவில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsdisqualificationcase #TNElectionCommission
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த கருத்து மோதலும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    மதுரை:

    அ.தி.மு.க.வில் இருந்து தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதையடுத்து நேற்று மதுரையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் வெற்றிவேல், பார்த்திபன் தவிர 16 பேர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தங்க தமிழ்செல்வன், எங்களை தகுதி நீக்கம் செய்த சபாநயகரின் முடிவு தவறானது என்பதை நிரூபிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அங்கு எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

    சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட ஆலோசனையின் முடிவில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    இன்று காலை மதுரை ரிங்ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இருந்து மருது சகோதரர்கள் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த புறப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


    எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முடிவில் 18 பேரும் ஒற்றுமையாக கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களிடம் எந்தவிதமான கருத்து மோதல்களும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் என்னிடம்தான் உள்ளனர். அவர்கள் யாரும் பலனை எதிர்பார்த்து இருக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எந்த சலசலப்புக்கும் இடமில்லை. அப்படி சலசலப்பு ஏற்படும் என்று நினைப்பவர்களின் ஆசை நிராசையாகிவிடும்.

    எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்களைப்பற்றி துரோகிகள் பேசுகிற பேச்சுக்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் மன்றம் சரியான பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran  #MLAsDisqualificationCase
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டி.டி.வி. தினகரன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். #TTVDhinakaran #DisqualificationMLAs
    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் பதவி நீக்கத்துக்குள்ளான எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் இருந்து நேற்று இரவு மதுரை வந்தனர். மாட்டுத்தாவணி, ரிங்ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர்களை, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார்.

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது, ‘மீண்டும் மேல்முறையீட்டுக்கு சென்றால் அதில் தீர்ப்பு வர தாமதமாகும். அது எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாகவே இருக்கும்.

    அதனால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம்’ என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.

    மற்றொரு தரப்பினரோ இடைத்தேர்தலை சந்தித்தால் பெரும் செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.

    அவர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட தினகரன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, சசிகலாவை சந்தித்து விட்டு அவர் என்ன சொல்கிறார்? என்பதை கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    முன்னதாக டி.டி.வி. தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-


    தகுதி நீக்க தீர்ப்பு வழக்கில் முடிவெடுக்க பொதுச்செயலாளர் சசிகலா எனக்கு அதிகாரம் வழங்கியுள்ளார். அவரிடம் ஏற்கனவே இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

    எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க.வை காப்பாற்றவே 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை தியாகம் செய்துள்ளனர்.

    அ.தி.மு.க.வை எங்களால் தான் பாதுகாக்க முடியும். என்னுடைய ஆதரவாளர்கள் தெரிவித்தால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம். அதே நேரத்தில் இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராக உள்ளோம்.

    தமிழகத்தில் 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் அதை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

    அ.தி.மு.க.வினர் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நினைக்கிறார்கள். அதை எப்படி கையாளுவது? கீழே இழுப்பது என்பது எனக்கு எல்லா வேலைகளும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #DisqualificationMLAs
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்துவிட்டது என்று மன்னார்குடியில் திவாகரன் தெரிவித்தார். #18MLAsCaseVerdict #Dhivakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல் ஏக்கள் நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பையொட்டியே வந்திருக்கிறது. சபாநாயகருடைய செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிடாது என்பது உண்மை என்றாலும் சபாநாயகருடைய தீர்ப்பு பாரபட்சம் கொண்டதாகும்.

    ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தும் அவர்கள் பணியில் தொடர்கிறார்கள். ஆனால் முதல்வரை மாற்ற வேண்டுமென கேட்டதால் 18 எம்.எல்.ஏ.க்களும் நீக்கப்பட்டது பாரபட்சமான தீர்ப்பு என்பது என் கருத்தாகும்.


    மேலும் இதை பேசி தீர்வு கண்டிருந்தால் ஜெயலலிதாவின் உழைப்பால் வெற்றி பெற்ற 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்திருக்காது. இந்த தீர்ப்பால் இழப்பு அ.தி.மு.க.வுக்கு தான். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதப்பட்ட சங்கு.

    மீண்டும் தேர்தல் வந்தாலும் இழந்த தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம். அது எதிர்கட்சிகளுக்கே சாதகமாய் அமையும்

    சொந்த காரணங்களுக்காக, ஆசைகளுக்காக பொதுச்செயலாளர் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு தான்தான் எல்லாம் என்ற மாயையை தோற்றுவித்து 18 எம்.எல்.ஏக்களையும் ஏமாற்றி பலிகடாவாக்கியவர் தினகரன் தான்.

    தற்போது தினகரன் மேல்முறையீடு செய்வதால் பலன் ஒன்றுமில்லை. ஏற்கனவே 18 தொகுதிகளிலும் மக்கள் பணி நடைபெறவில்லை. மேலும் தாமதப்படுத்துவது நல்லதல்ல. உடனே தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #Dhivakaran
    தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகம் வந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இறைவன் அருளால் இன்றைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

    கேள்வி:- தீர்ப்பினால் 18 தொகுதியும் காலியாக இருப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- இரண்டு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறை சிக்கலால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது, அப்பொழுதே தயாராக இருந்தோம். இப்பொழுது 18 சட்டமன்ற உறுப்பினர்களுடைய தேர்தல் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த இடம் காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன், சட்டப்படி, அ.தி.மு.க. இந்த தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- 18 தொகுதியிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை நீங்கள் வலியுறுத்துவீர்களா?

    பதில்:- இது எல்லாமே சட்டப் பிரச்சனை, தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும், அதில் நாங்கள் எந்தக் கருத்தும் சொல்ல இயலாது. ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தலாம், அ.தி.மு.க. அதிலே போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- தேர்தலுக்கு இந்தத் தீர்ப்பு எந்த அளவிற்கு உதவும்?

    பதில்:- இந்தத் தீர்ப்பு வேறு, பாராளுமன்றத் தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தல் எப்பொழுது வந்தாலும் எம்.ஜி.ஆர், அம்மா இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு, அந்த இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த அந்த திட்டத்தை முழுமையாக நாங்கள் நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கின்றோம். இன்றைக்கு மக்களிடத்திலே அபரிமிதமான செல்வாக்கை அம்மாவினுடைய அரசு பெற்றிருக்கிறது.


    ஆகவே, அம்மா இருக்கின்றபொழுது பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலே 37 இடங்களை வென்று இந்தியாவிலேயே பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி அ.தி.மு.க. என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நிலை இப்பொழுதும் பாராளுமன்றத்தில் தொடரும்.

    கேள்வி:- நீங்கள் கேவியட் மனு தாக்கல் செய்வீர்களா?

    பதில்: கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. மேல்முறையீடு செய்தால்தான் அதைப் பற்றி சிந்திக்க முடியும்.

    கேள்வி:- இந்த தீர்ப்பு பின்னடைவு இல்லை, இது ஒரு அனுபவம் தான் என்று டி.டி.வி.தினகரன் சொல்கிறாரே?

    பதில்:- என்ன அனுபவம் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இருக்கின்றபொழுது அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அண்ணா திமுக உறுப்பினரே இல்லை, அவருடைய கருத்து எப்படி அ.தி.மு.க.விற்குப் பொருந்தும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection
    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #TamilMaanilaCongress #GKVasan #MLAsDisqualificationCase
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். பிறகு இந்த வழக்கு 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு வெளிவந்திருக்கும் 3-வது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும்.

    தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan  #MLAsDisqualificationCase
    தமிழகத்தில் டிடிவி ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #MLAsDisqualificationCase
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

    அவருக்கு டி.டி.வி. தினகரன் அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி அப்போதைய கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் செயல்பட நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியிருந்தனர்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி 19 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான எஸ்.டி.கே.ஜக்கையன் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்துவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாளராக மாறினார்.

    இதையடுத்து செப்டம்பர் மாதம் 18-ந்தேதி மீதமுள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதை எதிர்த்து அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது.

    கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பு அளித்தனர்.

    நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. 3-வது நீதிபதியாக சத்திய நாராயணன் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்கி 12 நாட்களுக்கு விசாரணை நடத்தினார்.

    ஆகஸ்டு 31-ந்தேதி இந்த வழக்கின் இறுதி கட்ட வக்கீல்கள் வாதம் நடந்தது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை 3-வது நீதிபதி சத்திய நாராயணன் ஒத்திவைத்தார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. இந்த நிலையில் 54 நாட்களுக்கு பிறகு இன்று தீர்ப்பை சத்திய நாராயணன் வழங்கினார்.



    இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வக்கீல் வைத்தியநாதன், 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம், கொறடா சார்பில் முகுல்ரோத்தகி ஆகியோர் ஆஜரானார்கள். 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் எந்தவிதத்திலும் சட்ட விரோதமானது அல்ல.

    இந்த வி‌ஷயத்தில் சபாநாயகர் முடிவில் எந்த தவறும் இல்லை. எனவே 18 எம்.எல்.ஏ.க்களின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

    சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடையும் நீக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையும் விலக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    கடந்த ஜூன் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி வழங்கி இருந்த தீர்ப்பை இன்று 3-வது நீதிபதி சத்திய நாராயணன் உறுதிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கூறப்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. மாறாக தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பெரும்பான்மை பலத்துடன் திகழ்கிறது.

    தமிழக சட்டசபை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 ஆகும். இந்த எண்ணிக்கையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

    கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் தொகுதியும் ஏ.கே.போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன.

    இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று ஐகோர்ட்டு உறுதி செய்து இருப்பதால் சட்டசபையில் காலியாக இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் தற்போது சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 214 ஆக குறைந்துள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் 108 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு இருந்தால் போதுமானதாகும். ஆனால் தற்போது அ.தி.மு.க.வுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அரசுக்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக சட்டசபையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

    மொத்த இடம் - 234
    அ.தி.மு.க. 109
    கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி - 3
    தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் - 3 (பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி)
    திமுக - 88
    காங்கிரஸ் - 8
    தினகரன் - 1
    முஸ்லிம் லீக் - 1
    சபாநாயகர் - 1
    காலி இடங்கள் - 20

    காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும், தேர்தலை நடத்தலாம் என்றும் கோர்ட்டு அறிவித்துள்ளது. #MLAsDisqualificationCase
     
    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் முதலமைச்சரை மாற்றி விட்டு ஆட்சியை தொடருவோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase #ThangaTamilselvan
    தென்காசி:

    தமிழக சட்டமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் திடீரென அங்கிருந்து ஐந்தருவியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கிசுப்பையாவின் மற்றொரு சொகுசு விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஐந்தருவியில் உள்ள விடுதியில் தங்கியுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இங்கு தான் இருப்போம். தீர்ப்பு வந்த பின்னர் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனை சந்திப்போம். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை.

    இதனை கண்டித்து வருகிற 10-ந்தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதை தொடர்ந்து மற்ற 16 தொகுதிகளிலும் நடக்கும். இறுதியாக ஆர்.கே. நகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு ஆதரவாக மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள். வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் சில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றிவிட்டு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுத்து ஆட்சியை தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase #ThangaTamilselvan
    பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு இடம்பெயர்ந்தனர். #MLAsDisqualificationCase
    தென்காசி:

    அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரியும் கவர்னரிடம் புகார் மனு கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட 2 நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சத்ய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தினார்.

    கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியே விசாரணை முடிவடைந்துவிட்டது. ஆனால் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்படும். இதனால் ஐகோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும், அவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் நேற்று முன்தினம் குற்றாலத்தில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதிக்கு வந்து தங்கினர். அவர்களை அ.தி.மு.க. பிரமுகர்களோ மற்ற அதிகாரிகளோ தொடர்பு கொள்ள முடியாத படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான ஏற்பாடுகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய தலைவர்கள் செய்துள்ளனர். நேற்று விடுதியில் தங்கிய எம்.எல்.ஏ.க்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மகா புஷ்கர இறுதி நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினர். அப்போது அவர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவும் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்தினர்.

    பின்னர் அனைவரும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். அங்கிருந்து அகஸ்தியர் அருவிக்கு சென்று அங்கும் குளித்து மகிழ்ந்த எம்.எல்.ஏ.க்கள் இரவு தங்கள் சொகுசு விடுதிக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் குற்றாலம் ஐந்தருவி ரோட்டில் உள்ள மற்றொரு சொகுசு விடுதிக்கு இடம்பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் அவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ள முடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    3-வது நாளாக சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை அந்த சொகுசு விடுதி அருகே தங்களது ஆதரவாளர்களுடன் நடை பயிற்சி மேற்கொண்டனர். இன்று பகல் அவர்கள் குற்றாலம் ஐந்தருவியில் குளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    குற்றாலத்தில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்களில் சிலர் நேற்று திருக்குறுங்குடியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அங்கிருந்து நம்பி கோவிலுக்கும் சென்று வழிபட்டு ஆற்றில் குளித்து திரும்பியுள்ளனர். குற்றாலம் மற்றும் திருக்குறுங்குடியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களை தென் மாவட்ட அ.ம.மு.க. பொறுப்பாளர் மாணிக்கராஜ் நேரில் பார்த்து தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார்.

    அவருடன் கழக அமைப்பு செயலாளர் ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் கல்லூர் வேலாயுதம் (நெல்லை மாநகர்), பாப்புலர் முத்தையா (நெல்லை வடக்கு), சொக்கலிங்கம் (நெல்லை தெற்கு) மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து பேசி வருகிறார்கள்.

    அ.ம.மு.க. தொண்டர்கள் சார்பாக எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #ThambiDurai
    கரூர்:

    கரூர் குள்ளம்பட்டியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்கள் தரப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என கூறியிருக்கிறார்.

    இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாவின் ஆட்சி. ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும். தீர்ப்பு எப்படி வந்தாலும் அது அ.தி.மு.க. ஆட்சிக்கு உறுதி சேர்க்கும் வகையிலும், வலிமை சேர்க்கும் வகையிலும்தான் இருக்கும்.

    புகார்கள் காரணமாக சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இதன் மூலம் சி.பி.ஐ. மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து விட்டது. சி.பி.ஐ. எந்த நிலையில் இருக்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

    2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை விடுதலை செய்தபோது சி.பி.ஐ. எங்களுக்கு உரிய ஆதாரங்கள் தரவில்லை, அதனால்தான் விடுதலை செய்தோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை.


    இதன் மூலம் சி.பி.ஐ. அவர்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்.

    தமிழகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக டெல்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்பு என்று தேசிய கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் இந்தி படித்தவர்களே இங்கு வந்துதான் வேலை பார்க்கிறார்கள். தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க. அரசு அதிகாரமில்லாத அரசாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், நாங்களும் எதிர்த்தோம். ஆனால் அதனை அமல்படுத்தி விட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலிகளை கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டர் போன்று அ.தி.மு.க.வை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.

    எங்களுக்கு மோடி ரிங் மாஸ்டர் என்றால் தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக இருந்துகொண்டு வருகிறார். இதுதான் உண்மை. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #ThambiDurai #MLAsDisqualificationCase
    தன் பக்கம் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். #NanjilSampath #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 18 பேரையும் தற்காத்து கொள்ளும் கடமை தினகரனுக்கு உள்ளது.

    ஏனெனில் அவர்களில் 7 பேர் தங்கள் பக்கம் இருப்பதாக பொறுப்பில் இருக்கும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியது பதிவாகியிருக்கிறது. எனவே கோடிக்கணக்கில் பேரம் பேசும் செயல்களை செய்வதற்கு ஆளும் கட்சியினர் தயங்க மாட்டார்கள்.

    இந்த காரணத்தால் தன் பக்கம் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்து கொள்ள தினகரன் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளது தவறில்லை. இந்த முயற்சியில் தினகரன் வெற்றி பெறுவார்.


    தமிழக முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டவுடனேயே அவர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    சபரிமலை போராட்டம் திணிக்கப்பட்ட போராட்டம். இதை வைத்துக் கொண்டு கரைசேர முடியாத சில கட்சிகள் மலிவான அரசியலை நடத்துவது தான் கேரள அரசியலில் நடக்கிற தப்பாட்டம்.

    இவ்வாறு அவர் கூறினார். #NanjilSampath #TTVDhinakaran #MLAsDisqualificationCase
    ×