search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
    X

    இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

    தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகம் வந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இறைவன் அருளால் இன்றைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

    கேள்வி:- தீர்ப்பினால் 18 தொகுதியும் காலியாக இருப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- இரண்டு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறை சிக்கலால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது, அப்பொழுதே தயாராக இருந்தோம். இப்பொழுது 18 சட்டமன்ற உறுப்பினர்களுடைய தேர்தல் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த இடம் காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன், சட்டப்படி, அ.தி.மு.க. இந்த தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- 18 தொகுதியிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை நீங்கள் வலியுறுத்துவீர்களா?

    பதில்:- இது எல்லாமே சட்டப் பிரச்சனை, தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும், அதில் நாங்கள் எந்தக் கருத்தும் சொல்ல இயலாது. ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தலாம், அ.தி.மு.க. அதிலே போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- தேர்தலுக்கு இந்தத் தீர்ப்பு எந்த அளவிற்கு உதவும்?

    பதில்:- இந்தத் தீர்ப்பு வேறு, பாராளுமன்றத் தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தல் எப்பொழுது வந்தாலும் எம்.ஜி.ஆர், அம்மா இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு, அந்த இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த அந்த திட்டத்தை முழுமையாக நாங்கள் நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கின்றோம். இன்றைக்கு மக்களிடத்திலே அபரிமிதமான செல்வாக்கை அம்மாவினுடைய அரசு பெற்றிருக்கிறது.


    ஆகவே, அம்மா இருக்கின்றபொழுது பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலே 37 இடங்களை வென்று இந்தியாவிலேயே பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி அ.தி.மு.க. என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நிலை இப்பொழுதும் பாராளுமன்றத்தில் தொடரும்.

    கேள்வி:- நீங்கள் கேவியட் மனு தாக்கல் செய்வீர்களா?

    பதில்: கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. மேல்முறையீடு செய்தால்தான் அதைப் பற்றி சிந்திக்க முடியும்.

    கேள்வி:- இந்த தீர்ப்பு பின்னடைவு இல்லை, இது ஒரு அனுபவம் தான் என்று டி.டி.வி.தினகரன் சொல்கிறாரே?

    பதில்:- என்ன அனுபவம் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இருக்கின்றபொழுது அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அண்ணா திமுக உறுப்பினரே இல்லை, அவருடைய கருத்து எப்படி அ.தி.மு.க.விற்குப் பொருந்தும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection
    Next Story
    ×