search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்- தங்க தமிழ்ச்செல்வன்
    X

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்- தங்க தமிழ்ச்செல்வன்

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
    சென்னை:

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதற்கு மாறாக எதிர்த்து ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். இதில் எங்களுக்கு ஒரு நீதி அவருக்கு ஒரு நீதியா? இதை தெளிவுபடுத்ததான் கோர்ட்டுக்கு சென்றோம்.

    ஆனாலும் எங்கள் மீதான வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரிதான் என்று கோர்ட்டு தீர்ப்பு கொடுத்து விட்டது.


    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போகலாம் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் இதை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்தாமல் விட்டுவிடுவார்கள் என்பதால் நாங்கள் இதுவரை அப்பீல் செய்யாமல் இருந்தோம்.

    ஆனால் இப்போது சில அதிகாரிகளிடம் நாங்கள் விசாரித்த போது வேறுவிதமான தகவல்களை சொல்கிறார்கள்.

    18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அப்போது எங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி மூலம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காரணம் கேட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாவிட்டால் மாற்று வேட்பாளர்தான் தேர்தலில் நிற்க முடியும். இதனால் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று எடப்பாடி அணியினர் மனக்கணக்கு போடுகிறார்கள்.

    இதையும் மீறி தேர்தல் நடந்தால் 10 தொகுதி தேர்தலை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தி விடுவார்கள். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

    எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் இடைத்தேர்தலில் நின்றால் எங்கள் மனு தள்ளுபடி ஆகுமா? ஆகாதா? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

    இது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அவரும் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதற்காக நாங்கள் அனைவரும் சென்னையில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போக வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளனர். அப்பீல் செய்யாவிட்டால் வேறு கட்சிக்கு சிலர் சென்று விடுவார்கள் என்ற பயமும் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பீல் முடிவை தினகரன் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
    Next Story
    ×