என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
    • துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல என்று கூறினார்.

    மேலும் டி.டி.வி. தினகரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

    * கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.

    * கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.

    * அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல. சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    * ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

    * அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை.

    * எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.

    * பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.

    * துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை.

    * நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார்.

    * டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.

    * அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.

    * 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம்.

    * தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்?

    * எடப்பாடி பழனிசாமியை தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது என்று கூறினார். 

    • வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
    • மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வைரமுத்து மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில், இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார் வைரமுத்து வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர், இருவருக்கும் சில மாதங்களில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பெண் தான் பணிபுரிந்து வரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு வழக்கம்போல் வைரமுத்து வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வைரமுத்துவை ஓட ஓட விரட்டி சென்று, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்பு டையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதலியின் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் அடியமங்கலம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

    கிஸ் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். படத்தின் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. மக்கல் பாடலை ரசித்து வருகின்றனர். குறிப்பாக என்னலே என்னலே இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கிஸ் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.

    • திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது.
    • தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் கடந்த 13-ந்தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு வெளிப்பட்டது.

    திருச்சியை குலுங்கும் அளவுக்கு மக்கள் கடலில் விஜய் நீந்தி சென்றார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவரின் பிரசார வாகனம் மரக்கடை பகுதிக்குச் செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உத்தேசித்து, திட்டமிட்டே மரக்கடையில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.

    காரணம், ஏற்கனவே எடுத்த பல சர்வே முடிவுகள் திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிதும் சாதகமாக இருப்பதை தெரிவித்துள்ளது.

    இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த யார் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால் தாமே களம் இறங்கினால் எளிதில் வெற்றி வாகை சூடலாம் என கருதுகிறார்.

    இந்த சட்டமன்ற தொகுதியில் 20 சதவீதம் இஸ்லாமியர் வாக்குகளும், 18 சதவீத கிறிஸ்தவர் வாக்குகளும், 18 சதவீத பிள்ளைமார் வாக்குகளும், 10 சதவீத தாழ்த்தப்பட்டோர் வாக்குகளும், 8சதவீத நாயுடு வாக்குகளும், 6சதவீத செட்டியார் வாக்குகளும், 6 சதவீத கோனார் வாக்குகளும், 5 சதவீத முக்குலத்தோர் வாக்குகளும் மற்றும் ஆசாரி, உடையார் ,வன்னியர், பிராமின், முத்தரையர் , ரெட்டியார், சௌராஷ்டிரா, நாடார், முதலியார், தேவேந்திரர் உள்ளிட்ட இதர வாக்கு வங்கிகள் 27 சதவீதம் இருப்பதும் கணக்கிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களில் விஜய்க்கு முதல் தர மாநகரங்களான சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

    அதேபோன்று வட தமிழகம், கொங்கு பகுதிகளிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி தவிர்த்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தான் நிற்கும் பட்சத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் வாக்கு வங்கியை உயரச் செய்யும் என விஜய் நம்புகிறார்.

    திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது. தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள நட்சத்திர வேட்பாளரை களமிறக்கவும் தி.மு.க. தயாராகி வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் தகவல் பிற கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
    • நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

    நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
    • பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் இளம்வயதில் இருந்தே போராடிய பெருமைக்குரிய பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.

    பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், நமது சமூகநீதிக்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக வெற்றிக் கொடி நாட்ட உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
    • 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி:

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.

    பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது, ஒரு பிரிவினர் பசுமையான இடத்திற்குள் நுழைந்து துருப்பிடிக்காத எக்கு கைப்பிடிகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.

    மேலும் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் தெரியாத தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களால் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.

    புகார்தாரர், தனது கடையின் மேல் நின்று கொண்டு, கீழே இறங்கச் சொன்னபோது, கட்சி உறுப்பினர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னைத் திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

    • யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் நவம்பர் 11ஆம் தேதி புதிய வாகனம் வெளியிடுவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி யமஹா நிறுவனம் தனது XSR 155 அல்லது Nmax 155 மாடலை நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யும் என்று நம்பலாம்.

    இரண்டில் ஒன்று அல்லது இரண்டு மாடல்களையும் கூட யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம். XSR 155 மற்றும் Nmax 155 என இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் மேக்ஸி-ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டதால், யமஹா Nmax 155 மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.



    மேலும், யமஹா ஏற்கனவே ஏரோக்ஸ் 155 மற்றும் ஆர்15 ஆகியவற்றை இந்தியாவில் தயாரித்து வருகிறது. எனவே, என்மேக்ஸ் 155 மற்றும் எக்ஸ்எஸ்ஆர் 155 ஆகியவற்றை இந்தியாவில் உள்ளூர்மயமாக்குவதற்கு அதிக செலவு ஏற்படாது. ஏனெனில் இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15 போன்ற அதே தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.

    புதிய ஜிஎஸ்டி விகிதங்களுடன், இந்த இரண்டு தயாரிப்புகளும் 18 சதவீத ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதால் அவற்றை எளிதாக அணுக முடியும். அறிமுகப்படுத்தப்பட்டால், இவை ஏரோக்ஸ் மற்றும் ஆர்15-ஐ விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    • ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
    • தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

    கரூர்:

    தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறுகிறது.

    விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி வரவேற்று பேசுகிறார்.

    பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆ ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழாவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர், மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவுக்காக கோடங்கிபட்டி அருகில் 50 ஏக்கர் நிலத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்தன. 200 அடி அகலம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஒரே மாதிரியான டீ சர்ட் சீருடையுலும், இளம்பெண்கள் ஒரே மாதிரியான சுடிதார் உடையிலும், பெண்கள் ஒரே மாதிரியான புடவையிலும், ஆண்கள் ஒரே மாதிரியான கட்சி வேட்டி சட்டையிலும் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவில் பங்கேற்கும் முதல்வர் நாளை காலை 10:30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கரூர் வருகை தருகிறார். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு புறப்பட்டு முப்பெரும் விழா நடைபெறும் மேடைக்கு வருகை தர உள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கரூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழை தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல்வரின் வருகையொட்டி கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
    • இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

    ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

    ×