என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
- ஏஐ வீடியோவை பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அசாமில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று ஒரு ஏஐ வீடியோவை அம்மாநில பாஜக கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் தொடபுடைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும். டீ எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் இருப்பார்கள். கவுகாத்தி விமான நிலையம் கிரிக்கெட் மைதானத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருப்பார்கள். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் நம் மாநிலத்தின் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள். அசாம் 90% இஸ்லாமிய மக்கள் கொண்ட மாநிலமாக மாறிவிடும்" என்று முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிதளவும் தயக்கமின்றி மக்களை மத ரீதியில் பிளவுபடுத்தும் செயலில் பாஜக ஈடுபடுவதாக அசாம் மாநில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டனங்களை பாஜக சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக அசாம் மாநில பாஜக அமைச்சர் அந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
- பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.
பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு அக்கட்சி தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20 மற்றும் 21-ந்தேதிகளில் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
22-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 20-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம்.
- இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது.
பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம். இதில் 3-வது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தநிலையில் போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11-ந்தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25-ந் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன்.
அப்போது மோதல் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.
இந்தியா எந்த 3-ம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது. பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையில் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து மூலம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பது மேலும் உறுதியாகி உள்ளது.
- எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும்.
- அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.
சென்னை:
பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பாரதம் என்ற பெயரில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு என்பது கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து பேசுவது நல்ல விஷயம் தான். எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும். அ.தி.மு.க.வை 4 ஆண்டுகள் காப்பாற்றியது பா.ஜ.க. தான் என்பதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மூலம் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தந்தார். டி.டி.வி. தினகரன் எதற்காக பா.ஜ.க.வையும், என்னையும் விமர்சனம் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் என்னை நண்பர் என்று சொன்னார். 30 ஆண்டு காலம் எனக்கு டி.டி.வி. தினகரன் நண்பர். அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,பா.ஜ.க. என்றைக்கும் அடுத்த கட்சி பிரச்சனையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. நல்லதுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம். பா.ம.க., அ.தி.மு.க. கட்சிகளில் பிரச்சனைகள் உள்ளன. புயலுக்குப் பிறகுதான் அமுத மழை பொழியும். அதுபோல பிரச்சனைக்கு பிறகு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார்.
- டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டேராடூனில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டித் தீர்த்த நிலையில், மீண்டும் அங்கே அதிக மழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன 2 பெரிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரத்தை சுற்றியுள்ள பிற பகுதிகளுடன் இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றம் உணவு கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மீண்டும் அங்கு கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது.
- சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் காந்திகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த். இவரது மகள் ஜானவி (வயது 7). இந்த சிறுமி கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டின் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாக கூறப்பட்டது. அதாவது மாடியில் விளையாடியபோது கால் தவறி விழுந்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பேரில் காந்திகஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சிறுமி பலியான வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை சித்தாந்தின் 2-வது மனைவி ராதா கீழே தள்ளி விட்டு கொலை செய்தது தெரியவந்தது.
சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி. இந்த சிறுமியின் தாய் கடந்த 2023-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பிறகு, சித்தாந்த் ராதாவை 2-வதாக திருமணம் செய்திருந்தார்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளில் ஜானவி 3-வது மாடியில் இருந்து விழுந்தபோது ராதா அருகில் நிற்பது தெளிவாக பதிவாகி இருந்தது. அதாவது 3-வது மாடியில் இருக்கையை மாற்றி போட்டு, அதன்மீது ஜானவியை ராதா ஏற வைத்ததால் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சியை பக்கத்து வீட்டுக்காரர் சித்தாந்திற்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த காட்சிகள் மூலமாக காந்திகஞ்ச் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தாய் ராதாவை கைது செய்தனர்.
- தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆட்சேபனை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
நாய்க்கடி தொடர்பாக புதிய விதிகளை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல்முறை ஒரு நாய் மனிதரை கடிக்கும்போது, அது 10 நாட்களுக்கு விலங்குகள் மையத்தில் அடைக்கப்படும். பின் கருத்தடை செய்யப்பட்டு விடுவிக்கப்படும் என்றும் இரண்டாவது முறையாக அதே நாய் யாரையாவது கடித்தால், அது ஆயுட்காலம் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
நாய் தூண்டுதலின் அடிப்படையில் மனிதர்களை கடித்ததா? அல்ல எந்தவித தூண்டுதலும் இல்லாமல் கடித்ததா? என்பதை கண்டறிய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அக்குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு விலங்கு நடத்தை நிபுணர் மற்றும் ஒரு நகராட்சி பிரதிநிதி ஆகியோர் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாராவது நாயைத் தாக்கத் தூண்டுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நாயை தத்தெடுப்பவர்கள், அதை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வதாக ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
- மாலை 6 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.
சென்னை:
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பா.ஜ.க.வினரும், அவரது தீவிர ஆதரவாளர்களும் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மெயின் ரோட்டில் டீ கடை நடத்தி வரும் ஏழுமலை என்பவர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஆவார். மோடி பிரதமரான 2-வது ஆண்டு முதல் அவரது பிறந்தநாள் அன்று ஏழுமலை தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கி வருகிறார்.
12-வது ஆண்டாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று காலை 6 மணி முதல் ஏழுமலை இலவசமாக டீ வழங்கி வருகிறார். மாலை 6 மணி வரை அவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீயை வழங்குகிறார்.
இதற்கிடையே ஏழுமலையின் கடைக்கு இன்று காலை பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், கராத்தே தியாகராஜன், ஏ.என்.எஸ். பிரசாத், மாவட்ட தலைவர் குமார் உள்ளிட்ட பா.ஜ.க.தா நிர்வாகிகள் சென்றனர். அவர்கள் ஏழுமலைக்கு பாராட்டு தெரிவித்து டீ குடித்தனர்.
மேலும் தமிழிசை சவுந்தரராஜன், டீ போட்டு கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
- தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார்.
- எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ) தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார். சுபர்கோ, பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ்.சரத் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தேர்வு குழுவில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா நியமிக்கப்படுகிறார்கள்.
கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் ஆர்.பி.சிங், ஓஜா ஆகியோர் பெயர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும்.
இடது கை வேகப்பந்து வீரரான ஆர்.பி.சிங் 2007 -ம் ஆண்டு டோனி தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று இருந்தார். 39 வயதான அவர் 82 சர்வதேச போட்டிகளில் 124 விக்கெட் கைப்பற்றியுள்ளார். மத்திய மண்டலத்தில் இருந்து அவர் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிறார்.
இடது கை சுழற்பந்து வீரரான ஓஜா தெற்கு மண்டலத்தில் இருந்து தேர்வுக்குழு உறுப்பினரா கிறார். அவர் 24 டெஸ்டில் 113 விக்கெட் கைப்பற்றியுள் ளார். ஒருநாள் போட்டியில் 21 விக்கெட்டும் (18 போட்டி), 20 ஓவர் ஆட்டத்தில் 10 விக்கெட்டும் (6 போட்டி) எடுத்தவர்.
- வருகிற 1-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
- பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற 1-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் 'என் பாட்டன் சாமி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது. பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
- சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான்.
- சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், தனது தாயின் செல்போன் மூலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அதில் சில நபர்கள், அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரம் அவரது தாய் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது வெளியே சென்றிருந்த அவனது தாய் திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் சம்பந்தமில்லாத ஒரு நபர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அது யார்? என்று கேட்டபோது சிறுவன் சரியாக பதில் கூறவில்லை.
இதையடுத்து அவன் பயன்படுத்திய தனது செல்போனை சிறுவனின் தாய் சோதனை செய்தார். அப்போது சில வித்தியாசமான செயலிகள் தனது செல்போனில் இருப்பதை அவர் பார்த்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவர்களிடம் தான், சிறுவன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்திருக்கிறான். சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சிறுவன் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், சிறுவனை தவறாக பயன்படுத்திய நபர்களை பற்றிய தகவல்களும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.
அவர்களில் படன்னக்காடு சைனுதீன்(வயது52), வெள்ளச்சல் சுகேஷ்(30), வடக்கக்கொவ்வல் ரைஸ்(40), கலோலாடு அப்துல் ரகுமான்(55), சந்தேரா பகுதியை சேர்ந்த அப்சல்(23), சித்தராஜ்(48) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சைனுதீன் என்பவர் பேக்கல் பகுதியில் உள்ள கல்வி அலுவலகத்தில் மாவட்ட துணைக்கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள சிராஜ் என்பவர் உள்பட மேலும் 7 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. அவர்கள் தலைமறைவு நபர்களை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கல்வி அதிகாரி சைனுதீன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.
சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






