என் மலர்
இந்தியா

மேக வெடிப்பு ஏற்பட்ட டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
- டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு சஹஸ்த்ரதாராவில் மிக கனமழை கொட்டியது.
இதனால் சாலைகளில் கடும் வெள்ளம் ஓடியது. அப்போது சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. அங்குள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து அடித்துச் செல்லப்பட்டன. சிறிய கட்டிடங்கள் பல மண்ணோடு புதைந்தன.
டேராடூன் நகரையே புரட்டிப்போட்ட மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காணாமல் போன 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உத்தரகாண்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டேராடூனில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டித் தீர்த்த நிலையில், மீண்டும் அங்கே அதிக மழைக்கான ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன 2 பெரிய பாலங்கள் இடிந்து விழுந்ததால், நகரத்தை சுற்றியுள்ள பிற பகுதிகளுடன் இணைக்கும் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றம் உணவு கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் மீண்டும் அங்கு கன மழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.






