search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலட்சுமி விரதம்"

    • திருமணமான பெண்களால் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
    • வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள்.

    வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிப்பது அமைதி, செழிப்பு மற்றும் நிதி ஆசீர்வாதங்களை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. திருமணமான பெண்களால் வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் 2023 தேதி ஆகஸ்ட் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள்.

    தமிழ் மாதமான ஆடியின் பவுர்ணமி அல்லது பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரத நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது செல்வம், பூமி, கற்றல், அன்பு, புகழ், அமைதி, இன்பம், வலிமை ஆகிய எட்டு தெய்வங்களான அஷ்டலட்சுமியை வழிபடுவதற்கு சமம். வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவம் கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவத்தை சிவபெருமான், பார்வதி தேவிக்கு எடுத்துரைத்ததாக நம்பப்படுகிறது.

    விரதம் இருக்கும் முறை:

    விரதம் அன்று வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு மாவிலை தோரணங்கள் மற்றும் கோலங்களால் அலங்கரிக்க வேண்டும். லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்லோகங்கள் வாசிக்க வேண்டும். லட்சுமி தேவியின் சிலையை அலங்கரிக்க வேண்டும். அரிசி மற்றும் பானையின் கழுத்தில் பாதி நிரப்பப்பட்ட கலசம் புதிய மாம்பழம் மற்றும் வெற்றிலைகளால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவை தடவப்பட்ட தேங்காயை பூஜையறையில் வைத்து அதில் லட்சுமி தேவி அழைப்பார்கள். பூஜை முடியும் வரை பெண்கள் விரதம் இருப்பார்கள்.

    அன்றைய தினம் வடை, மாங்காய் சாதம், பருப்பு வடை போன்ற சிறப்பு உணவுகளும், பாயசம் போன்ற இனிப்புகளும் தயாரிக்கப்படும். பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் கூடி மாலையில் சமூக ஆரத்தியில் பங்கேற்பர். வளையல், குங்குமம், வெற்றிலை, பழங்கள், பூக்கள் போன்ற பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். வர மஹாலட்சுமி தொழில் தொடங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், வாஸ்து செய்வதற்கும் உகந்த நாள்.

    வரலட்சுமி விரதம் கதை:

    விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக, சிவன் சாருமதியின் கதையை விவரிக்கிறார். சாருமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பக்தியை கண்டு மகிழ்ந்த லட்சுமி தேவி அவரது கனவில் தோன்றி, வரலட்சுமி விரதத்தை செய்யச் சொன்னார். பக்தியுள்ள சாருமதி தனது அண்டை வீட்டாரையும், நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து, லட்சுமி தேவியின் கட்டளைப்படி வரலட்சுமி பூஜையை நடத்தினாள். பூஜை முடிந்த உடனேயே, பூஜையில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் அருள் பாலித்தார்கள்.

    மற்றொரு கதை, ஒருமுறை சிவனும் பார்வதியும் பரமபதம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் சிவ பெருமான் வெற்றி பெற்றார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத பார்வதி தேவி, சித்ரமணியை அழைத்து இந்த விவகாரத்திற்கு தீர்ப்பு சொல்லும்படி கேட்டார். சித்ரமணியும், சிவ பெருமானே வெற்றி பெற்றதாக தெரிவித்தது. இதனால் கோபமடைந்த பார்வதி தேவி, சித்ரமணியை தொழு நோயால் பாதிக்கும்படி சாபம் அளித்தார். பிறகு பார்வதியை சமாதானம் செய்த சிவ பெருமான், உண்மையை உரிய வைத்தார். சித்தரமணி மீது இரக்கம் கொண்ட பார்வதி, வரலட்சுமி விரதம் கடைபிடித்தால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என அருளினாள். சித்ரமணியும் வரலட்சுமி விரதம் இருந்து, சாப விமோசனம் பெற்றார்.

    வரலட்சுமி விரத பலன்

    வரலட்சுமி விரதம் இருப்பதால் நல்ல ஆரோக்கியம், ஐஸ்வர்யம், செல்வ வளம் ஆகியவை கிடைக்கும். தீமைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் செழிக்கும். தொழில் முடக்கம், பணப் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். மன அமைதி கிடைப்பதுடன் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

    • வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.

    திருப்பதி:

    திருப்பதி, திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் வரும் 25-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 25-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தன மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வருகிறார்.

    வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    இதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள குங்கும அர்ச்சனை கவுண்டரில் வரும் 24-ந்தேதி நேரடியாக 150 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். ஒரு தரிசன டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரும் 26-ந் தேதி முதல் 90 நாட்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வரலட்சுமி விரதம் நடைபெறும். நாளில் அபிஷேகம், கல்யாண உற்சவம், வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக தரிசனம், லட்சுமி பூஜை, ஊஞ்சல் சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீர்வசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • கல்வி ஞானம் பெருகும்.
    • பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.

    என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பென் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியே செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.

    லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் பதினைந்து பெறுகள்:

    1.உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.

    2.பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.

    3.பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    4.கல்வி ஞானம் பெருகும்.

    5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    6.நிலைத்த செல்வம் அமையும்.

    7.வறுமை நிலை மாறும்.

    8.மகான்களின் ஆசி கிடைக்கும்.

    9.தானிய விருத்தி ஏற்படும்.

    10.வாக்கு சாதுரியம் உண்டாகும்.

    11.வம்ச விருத்தி ஏற்படும்.

    12.உயர் பதவி கிடைக்கும்.

    13.வாகன வசதிகள் அமையும்.

    14.ஆட்சிப்பொறுப்பெற்கும் யோகம் கிடைக்கும்.

    15.பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

    வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?

    வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.

    விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

    அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.

    இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம்.

    இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம். `மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்' என்று மனம் உருக வணங்க வேண்டும்.

    பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

    • ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
    • ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

    சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

    மழைக் காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் கூழும் அம்மனுக்கு விருப்பமானவைகளே. இவை உடல் நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

    ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப்பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

    ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடிச்சீர் செய்து மாப்பிள்ளை - பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப்பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு, பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.

    ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர். (ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத் தான் இவை). இதை இன்னமும் பின்பற்றுகின்றனர். இதனால் 'ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.

    ஆடி மாதப் பழமொழிகள் பல. 'ஆடிப் பட்டம் தேடி விதை', 'ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்', 'ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்', 'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி', 'ஆடிக் கூழ் அமிர்தமாகும்'.

    ஆடிச் செவ்வாய்

    ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய் ஒளவையாருக்குச் செய்யும் விரத பூஜையாகும். ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும் குழந்தை வரமும் கிடைக்கும்.

    பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும். இதைப் பெண்கள் மட்டும்தான் செய்வார்கள். அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள். அதற்கு முன் ஆண்கள் - சிற ஆண்பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

    பின் பூஜை நடைபெறும். ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார். சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள். பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப்படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும். இதுதான் ஒளவை நோன்பு.

    ஆடி வெள்ளி

    அன்றைய தினம் வாசலில் கோலமிட்டு பூஜையறையில் குத்து விளக்கேற்றி, நிவேதனமாக பால்பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, லலிதா சகஸ்ரநாமம், அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

    ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும். சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும். இவ்வாண்டு ஆவணி முதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறது.

    பொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜை நடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.

    • பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.
    • பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

    வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வரலட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும்.

    மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும்.

    அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.

    கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.

    அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.

    மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும். பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.

    சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.

    எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

    அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

    பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

    இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.

    தர்ப்பண பூஜை

    தர்ப்பண பூஜை என்பது இறந்த நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் பூஜைகள் ஆகும். நம் மூதாதையர்கள் எல்லாருமே பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. மனிதனாக, புல், பூண்டாக, விலங்குகளாக, தாவரங்களாகப் பலர் பிறப்பெடுக்கலாம். அவரவர் தீவினைக் கர்மங்களுக்கு ஏற்ப ஆவி ரூப பிறவிகளும் கொண்டிருக்கலாம்.

    நம் மூதாதையர்களான பித்ருக்கள் அனைவரும் நினைத்தபடியெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, இறந்த திதி, மாதப்பிறப்பு, மாளய பட்ச நாட்கள் போன்ற புனித தினங்களில் மட்டும் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்கள் சூட்சும தேகத்தில் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் தர்ப்பண பூஜைகளைத் செய்தால் அவர்கள் அவற்றை இங்கு நேரடியாகப் பெற்று ஆசி அளிப்பார்கள்.

    தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு. அதைப்போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.

    ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்க இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு.

    ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.

    நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.

    தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.

    சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.

    ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

    • வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை உருமாண்டம்பா–ளையம் பண்ணாரியம்மன் கோவிலில் 3-வது ஆடி–வெள்ளியை முன்னிட்டு வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் காலை 10 மணியளவில்கல்யாண விநாயகர் மற்றும் பண்ணாரியம்மனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடைபெற்றன.

    அதற்கு பிறகு மதியம் 1 மணியளவில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், விரளி மஞ்சள், மஞ்சள் அரிசி, தாலி மஞ்சள் சரடு, வளையல், மிட்டாய், பூக்கள், துணிப்பைகள் வைத்து அணிக்கூடையில் கு–ழந்தைகள் எடுத்துச்செல்ல சிறப்பு பூஜை–கள் செய்யப்பட்டன.

    அதில் விநாயகர், வில்வ–மரம், சுற்றுப்பூஜைகள் நடைபெற்றன. அப்போது அம்மனுக்கு உகந்த கொம்பு ஊதுதல் மற்றும் மத்தளம் அடிக்கப்பட்டன. பூசாரி வாய்க்கட்டு பூட்டு போட்டு சிறப்பு வரலட்சுமி நோன்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பிரசா–தங்கள் வழங்கப்பட்டன.

    மேலும் ஊரில் உள்ள பேரன், பேத்தி எடுத்த 70 வயதுக்கு மேல் உள்ள தம்பதிகளுக்கு பொட்டு போட்டு மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் வரலட்சுமி பூஜையின்போது, அணிக்கூடையில் கொண்டு–வரப்பட்ட எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகளை மஞ்சள் பையில் போட்டு வழங்கப்ட்டன. மேலும் வயதான தம்பதிகள் வந்திருந்த சுமங்கலி பெண்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள் பச்சரிசி மற்றும் பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 

    • 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும்.
    • சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.

    திருப்பூர் :

    வரலட்சுமி விரதம், வர மகாலட்சுமி நோன்பு என குறிப்பிடப்படும் இந்த விரதம் ஒவ்வொரு ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான மகாலட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் கடைப்பிடிக்கப்படக்கூடிய முக்கிய விரதமாகும். ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி பெரும்பாலும் கொண்டாடப்படும். ஆனால் இந்த 2022ல் கடைசி ஆடி வெள்ளி அன்று பௌர்ணமி திதி வந்துவிடுவதால், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இன்று 5-ந்தேதி (ஆடி 20) அன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க, செல்வ வளம், உடல் ஆரோக்கியம், தாலி பாக்கியம் நிலைக்க விரதத்தை கடைபிடித்தனர்.இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து மகாலட்சுமியிடம் பூஜித்து, அதை சுமங்கலி பெண்கள் அணிந்து கொண்டனர். நல்ல வரன் அமைய கன்னிப் பெண்கள் இந்த விரதமிருந்து பூஜையில் கலந்து கொண்டனர். வரலட்சுமி விரதத்தையொட்டி வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தினர். வாசனை புகையை இல்லம் முழுவதும் நிறைத்து, கலசம் வைத்து அதை மகாலட்சுமியாக நினைத்து வணங்கினர்.கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு இவற்றை இட்டு, கலசத்தை பட்டாடையால் அலங்கரித்து, அதன் மீது மாவிலைகளை வைத்தனர். ஒரு தேங்காய் மீது மஞ்சளால் தேவியின் முகத்தை வடித்து பூஜை செய்து வழிபட்டனர். தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமி தேவியின் உருவச்சிலையை வைத்தும் வழிபட்டனர்.

    தீபாராதனை செய்து, மகாலட்சுமிக்கு உகந்த இனிப்பு உள்ளிட்ட நைவேத்தியம் வைத்து படைத்தனர்.பூஜைகள், மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டு, கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டப்பட்டது.பின்னர் படைக்கப்பட்ட நைவேத்திய பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுத்து ஆசி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு வீடுகளில் இந்த வரலட்சுமி விரத வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

    ×