search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் கலவரம்"

    • மணிப்பூர் கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர்
    • தற்போது வரை மணிப்பூருக்கு பிரதமர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று இரு பிரிவினருக்கிடையே வெடித்த மோதல் கலவரமாக மாறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. கலவரத்தில் இரு பிரிவினருக்கும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சுமார் 180 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பல குடும்பங்கள் வன்முறைக்கு பயந்து மணிப்பூரை விட்டு அண்டை மாநிலங்களுக்குள் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது.

    கலவரத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அழுகின்ற ஒரு கைக்குழந்தையை வைத்து கொண்டு, கணவனை இழந்த பெண் ஒருவர் கணவரின் உடலை கண்டு கதறியழும் காட்சிகள் காண்போரின் இதயத்தை கனக்க செய்கிறது.

    சுமார் 4 மாத காலமாக ஒரு மாநிலத்தில் உயிர்பலி தொடரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பாராளுமன்றத்திலோ பொதுவெளியிலோ கருத்து ஏதும் தெரிவிக்காததும், அம்மாநில மக்களை வந்து சந்திக்காததும், வீடுகளையும், உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற கூட வராததும், அவர்களுக்கு நஷ்ட ஈடாகவும் ஏதும் அறிவிக்காததும் அகில இந்திய அளவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவின் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வில் மோடிக்கு அடுத்து நம்பர் 2. இடத்தில் உள்ளவருமான அமித் ஷா இதுவரை பாதிக்கப்பட்ட இரு இனத்தை சேர்ந்த மக்களையும் சந்திக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அம்மாநிலத்தின் ஆளும் பா.ஜ.க. முதல்வர் பிரேன் சிங் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால்தான் நிலைமை கை மீறி போனதாக விமர்சிக்கும் மக்கள், உணர்வுபூர்வமான ஒரு பிரச்சனையை அலட்சியமாக கையாளத்தான் அவர் முதல்வாரானாரா என கேட்கின்றனர்.

    • சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.
    • இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    கடந்த ஜூலை மாதம் அந்த மாநிலத்தில் காணாமல் போன மாணவன்-மாணவி 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அந்த மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.

    அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர் குகி இன மக்கள் வாழும் பகுதிகளில் ரகளையில் ஈடுபட்டனர். போக்குவரத்தையும் துண்டித்தனர்.

    இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது. அவரது வீட்டை தகர்க்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு படையினர் உரிய நேரத்தில் தலையிட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஜூன் மாதமும் அவரது வீட்டை தகர்க்க முயற்சி நடந்தது.

    மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த சமூக வலை தளங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. என்றாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

    • மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது.
    • மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    மணிப்பூர்:

    மணிப்பூரில் 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று மாணவர்கள் பேரணியாக சென்றபோது மாணவர் களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் மணிப்பூரில் உள்ள கவுபால் மாவட்டத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் மண்டல அலுவலகத்துக்கு சிலர் தீ வைத்தனர். இதில் பா.ஜனதா கட்சி அலுவலகம் எரிந்தது. மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும், வாகனங்களையும் சிலர் அடித்து நொறுக்கினார்கள். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பிரேன்சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 2 மாணவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. "குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை மணிப்பூர் மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இவர் தற்போது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மூத்த போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். அவர் மணிப்பூரில் வன்முறையை தடுக்க அந்த மாநிலத்தில் பணியாற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஜூலை மாதம் இரு மாணவர்கள் காணாமல் போனார்கள்
    • காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசை விமர்சித்து வருகிறார்கள்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கு நடைபெற்ற கலவரத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. காவல்துறையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது.

    கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு, இவர்கள் இருவரின் உடல்கள் காணப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

    அனைவரையும் அதிர்ச்சியுற செய்திருக்கும் இந்த படுகொலை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:

    இனப்படுகொலைகளில் குழந்தைகள்தான் பலிகடா ஆகிறார்கள். அவர்களை காக்க நம்மால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டியது நமது கடமை. கொடூர கொலை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், "வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு விட்டது. மணிப்பூர் காவல்துறை முழு ஒத்துழைப்பையும் தந்து வருகிறது. குற்றவாளிகளை தேடும் வேட்டை துவங்கி விட்டது" என தெரிவித்தார். 

    • 2 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது.
    • பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இம்பால்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

    கடந்த மே மாதம் 3-ந் தேதி மணிப்பூரில் உச்சக்கட்ட கலவரம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஆயுதக்குழுக்கள் போல மாறி மோதல்களில் ஈடுபட்டனர்.

    இந்த மோதல்களில் இது வரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் குகி இன மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் வனப்பகுதிகளில் ஏராளமான சிறு சிறு முகாம்கள் அமைத்து தங்கி உள்ளனர். அதுபோல மெய்தி இன மக்களும் ஏராளமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை திரும்பினாலும் மக்கள் மத்தியில் அங்கு பதட்டம் காணப்படுகிறது.

    இதற்கிடையே கடந்த மே மாதம் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது மெய்தி இன மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலவரத்தில் காணாமல் போனவர்களில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 2 மாணவர்களும் அடங்குவார்கள். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருந்தன. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் பற்றிய பரபரப்பு செய்திகள் சமூகவலை தளங்களில் பரவின.

    காணாமல் போன மாணவர், மாணவிகளில் ஒருவர் ஹிஜம் (வயது17) மற்றும் பிஜம் (20) என்று தெரிய வந்தது. இவர்கள் இருவரும் முகாம் ஒன்றில் புல்வெளி தரையில் உட்கார வைத்து இருப்பது போன்ற காட்சியும், அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்பது போன்ற காட்சியும் வீடியோ மூலம் நேற்று பரபரப்பாக பரவியது.

    அதே வீடியோவில் அடுத்த சில நிமிடங்களில் அந்த 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதனால் மணிப்பூரில் மீண்டும் பதட்டம் உருவாகி இருக்கிறது.

    2 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது. அந்த 2 பேரையும் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள் சுட்டு கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஜூலை மாதம் அந்த 2 மாணவர்-மாணவி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தி வந்தோம். ஏற்கனவே அவர்கள் தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப் படும்" என்று கூறினார்.

    மற்றொரு அரசு உயர் அதிகாரி கூறுகையில், " மாணவர்-மாணவியை கொன்றவர்கள் மீது உறுதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல்
    • குகி-சோ பரிவினர் அதிக அளவில் வசித்து வரும் கிராமம்

    மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குசி-சோ பிரிவினரை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

    இம்பால், கங்போப்கி மாவட்டங்களின் எல்லையான ஐரேங்- கரன் பகுதிகளில் வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள், கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடைபெற்ற கிராமம், பழங்குடியினர் அதிக அளவில் வாழ்ந்து வரும் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

    மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் வன்முறையால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • ராணுவ தடுப்பு இருப்பதால் சொந்த வீட்டிற்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் குற்றச்சாட்டு
    • ராணுவ தடுப்புகளை முற்றுகையிட அழைப்பு விடுத்த நிலையில், முழு ஊரடங்கு அமல்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு (COCOMI), பெண்கள் பிரிவு ஆகியவை சார்பில் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சாயோ இகாயில் உள்ள ராணுவ தடுப்புகளை அகற்ற வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காலை ஐந்து மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படடுள்ளது.

    இன்று முற்றுகையிடும் திட்டத்தை COCOMI திரும்ப பெற வேண்டும் என அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    ஆனால், COCOMI மீடியா ஒருங்கிணைப்பாளர், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    ராணுவ தடுப்பால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். மே 3-ந்தேதி ஏற்பட்ட வன்முறையின்போது, பலர் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, மணிப்பூரில் சகஜமான நிலைதான் இருந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், வன்முறை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் (X) "4 மாதங்களுக்கு பிறகும் வன்முறை தொடரத்தான் செய்கிறது. ஆனால், டபுள் என்ஜின் எனக் கூறும் மோடி அரசு, மணிப்பூரில் சூழ்நிலை சகஜமான நிலையில்தான் இருக்கிறது என்று கூறுகிறது. ஜி20 மாநாடு டெல்லியில் நடந்து கொண்டிருக்கும்போது, மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஊரடங்கில் இருக்கப் போகிறது" என்றார்.

    • பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் மைதேயி இன மக்களுக்கும் குகி இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த வாரம் 3 குகி இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் மீண்டும் அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் குகி இன அமைப்புகள் இன்று (திங்கட்கிழமை) சாலை முடக்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

    இதன்படி இன்று திமாபூர்-இம்பால் இடையேயான தேசிய நெடுஞ்சாலை குகி இன அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு துணைநிலை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த 2 வாரங்களாக வன்முறைகள் ஓய்ந்து அமைதி திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கலவரம் மூண்டது. உக்ருல் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வசிக்கும் குகிதேவாய் கிராமத்தில் இரவு தொடர்ந்து துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

    3 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பழங்குடி சமூக மக்கள் வசித்து வரும் மலை மாவட்டங்களில் மீண்டும் அசாம் ரைபிள் படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக்கோரியும் காங்போக்பி மாவட்ட பழங்குடி இன பெண்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

    இந்த போராட்டத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
    • உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது.

    மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவரும், எம்.பியுமான கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் மாநிலத்தின் சாமானிய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

    எனவே, இரு சமூகத்திற்கும் இடையில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசாதபோது எப்படி அமைதி மற்றும் சகஜநிலை ஏற்படும்.

    மாநில முதல்வர் பிரேன் சிங்கின் செயல்பாட்டால் மெய்டீஸ் மற்றும் குகிஸ் ஆகிய இரு சமூகமும் மகிழ்ச்சியடையவில்லை.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்றத்தில் முதல்வரை முழுமையாக ஆதரித்தது துரதிர்ஷ்டவசமானது. அமைதிக் குழுக்களில் முதல்வர் இருப்பதுதான் அமைதி பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுத்தது.

    பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டை தவறாக வழிநடத்துகிறார். இதனால், நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் 60,000 பேரின் நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வு இல்லாமலும், 6000 ஆயுதங்கள் மீட்கப்படும் வரையிலும் அமைதி திரும்பாது" என்றார்.

    • பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது.
    • நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது-

    காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கிடக்கின்றன. தி.மு.க. அரசு தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறதாம். இப்படியே எத்தனை நாள் தான் மக்களை ஏற்றுவீர்கள்?

    கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீர் பெற முடியாத நிலையில் தானே தி.மு.க. உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கட்சியை தலை மீதும், தோள் மீதும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

    தமிழகத்தை பா.ஜனதா வஞ்சிப்பதாக கூறும் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவாரா?

    நாங்கள் எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை. மணிப்பூரை பா.ஜனதா கண்டு கொள்ளவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்தியா கூட்டணி. ஆனால் இப்போது வாடும் பயிரை காப்பாற்ற இந்தியா கூட்டணி முன்வரவில்லையே. தமிழகம் இந்தியாவில் ஒரு மாநிலம் தானே. இந்த மாநிலத்தின் விவசாயம் அழிவதை இந்தியா கூட்டணி கண்டு கொள்ளவில்லையே. இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?

    பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது. நாங்குனேரி சம்பவம் அதற்கு ஒரு சாட்சி. குழந்தைகள் மனதில் சாதிய உணர்வை தூண்டி விடுகிறார்கள். அரசு பள்ளிகளில் மட்டும் தான் இப்படிப்பட்ட சம்வங்கள் நடக்கிறது. இதை தடுக்க தவறியது அரசின் இயலாமைதான்.

    நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதை பாராட்ட மனம் வரவில்லை. அதிலும் மொழி பிரச்சனையை சொல்லி தங்கள் குறுகிய மனதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    எதிர்க் கட்சிகள் என்ன சொன்னாலும் சரி. அதை கண்டு கொள்ளாமல் மக்களுக்கு என்ன தேவையோ அதை பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும்.

    மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. நடக்கும் விஷயங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் புரிய வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியின் கால்களை தொட்டு வணங்கியவர் மில்பென்
    • நாட்டின் மதிப்பை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமைக்கான பண்பில்லை

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மேரி ஜே. மில்பென் (Mary J. Millben).

    இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இவர் ஒரு நடிகையாகவும், ஊடக பிரபலமாகவும் திகழ்கிறார். கடந்த ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்று பயணம் செய்தபோது, மோடி பங்கேற்ற பயண நிறைவு நிகழ்ச்சியில் அவர் முன்னிலையில் இந்திய தேசிய கீதத்தை பாடியவர் மில்பென்.

    அந்நிகழ்ச்சியில் அவர் மோடியின் கால்களை தொட்டு வணங்கினார். இது குறித்த வீடியோ அப்போது வைரலானது.

    கடந்த மே மாதம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே துவங்கிய ஒரு மோதல் இனக்கலவரமாக மாறி வன்முறை வெடித்தது.

    கடந்த ஜூலை மாதம், ஒரு இனத்தை சேர்ந்த இரு பெண்களை மே மாதம் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் மற்றொரு இனத்தை சேர்ந்தவர்கள் மானபங்கப்படுத்திய அரை நிமிடத்திற்கும் குறைவான ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலானது.

    இந்த சம்பவத்திற்காக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மோடிக்கு ஆதரவாக மில்பென் குரல் கொடுத்திருக்கிறார்.

    மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற பாலியல் வன்முறைகளை மோடி வெளிப்படையாக பேசியதை ஜூலை மாதமே பாராட்டிய மில்பென் மணிப்பூர் வன்முறை, மோடியின் தலைமை மற்றும் இந்திய எதிர்கட்சிகள் குறித்து சமூக வலைதளமான எக்ஸ்ஸில் (டுவிட்டர்) பதிவு ஒன்றை செய்திருக்கிறார்.

    இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் கடவுளின் குழந்தைகள். மணிப்பூரில் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக என் மனம் மிகவும் வருந்துகிறது. உண்மை என்னவென்றால் மோடியின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளது. மணிப்பூரின் பெண்களுக்கான நீதியை மோடி பெற்று தருவார். பிரதமர் மோடி மணிப்பூர் பெண்களின் விடுதலைக்காக போராடுவார்.

    கலாசார மரபுகளை அவமரியாதை செய்து, தன் நாட்டின் மதிப்பினை அயல்நாட்டில் குறைவாக பேசுவது நல்ல தலைமை பண்பாகாது. பொய் கதைகளை நேர்மையற்ற ஊடகங்கள் உரக்க சொன்னாலும் அவற்றில் வலு இருக்காது. உண்மைதான் எப்போதும் மக்களை சுதந்திரமாக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்காவில் மக்கள் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைவரான மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் முழக்கமான "சுதந்திரம் ஒலிக்கட்டும்" எனும் வார்த்தைகளை குறிப்பிட்டு "என் இனிய இந்தியாவே, உண்மை ஒலிக்கட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ×