search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர்: ஐந்து மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு- வன்முறை தொடர்வதாக காங்கிரஸ் விமர்சனம்
    X

    மணிப்பூர்: ஐந்து மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு- வன்முறை தொடர்வதாக காங்கிரஸ் விமர்சனம்

    • ராணுவ தடுப்பு இருப்பதால் சொந்த வீட்டிற்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் குற்றச்சாட்டு
    • ராணுவ தடுப்புகளை முற்றுகையிட அழைப்பு விடுத்த நிலையில், முழு ஊரடங்கு அமல்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பாராளுமன்ற மக்களவையிலும், சுதந்திர தின விழா உரையின்போதும் மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அங்கு அமைதி நிலவி வருவதாக தெரிவித்தார். அம்மாநில முதல்வரும் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு (COCOMI), பெண்கள் பிரிவு ஆகியவை சார்பில் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிஷ்னுபுர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சாயோ இகாயில் உள்ள ராணுவ தடுப்புகளை அகற்ற வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காலை ஐந்து மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு இருந்து வந்தது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்படடுள்ளது.

    இன்று முற்றுகையிடும் திட்டத்தை COCOMI திரும்ப பெற வேண்டும் என அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    ஆனால், COCOMI மீடியா ஒருங்கிணைப்பாளர், ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    ராணுவ தடுப்பால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியவில்லை என பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர். மே 3-ந்தேதி ஏற்பட்ட வன்முறையின்போது, பலர் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, மணிப்பூரில் சகஜமான நிலைதான் இருந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், வன்முறை தொடர்கிறது என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில் (X) "4 மாதங்களுக்கு பிறகும் வன்முறை தொடரத்தான் செய்கிறது. ஆனால், டபுள் என்ஜின் எனக் கூறும் மோடி அரசு, மணிப்பூரில் சூழ்நிலை சகஜமான நிலையில்தான் இருக்கிறது என்று கூறுகிறது. ஜி20 மாநாடு டெல்லியில் நடந்து கொண்டிருக்கும்போது, மணிப்பூரில் ஐந்து மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஊரடங்கில் இருக்கப் போகிறது" என்றார்.

    Next Story
    ×