search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shootings"

    • 2 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது.
    • பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இம்பால்:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

    கடந்த மே மாதம் 3-ந் தேதி மணிப்பூரில் உச்சக்கட்ட கலவரம் நடந்தது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஆயுதக்குழுக்கள் போல மாறி மோதல்களில் ஈடுபட்டனர்.

    இந்த மோதல்களில் இது வரை 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் குகி இன மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் வனப்பகுதிகளில் ஏராளமான சிறு சிறு முகாம்கள் அமைத்து தங்கி உள்ளனர். அதுபோல மெய்தி இன மக்களும் ஏராளமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை திரும்பினாலும் மக்கள் மத்தியில் அங்கு பதட்டம் காணப்படுகிறது.

    இதற்கிடையே கடந்த மே மாதம் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது மெய்தி இன மக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போய்விட்டனர். அவர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கலவரத்தில் காணாமல் போனவர்களில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 2 மாணவர்களும் அடங்குவார்கள். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இருந்தன. அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் பற்றிய பரபரப்பு செய்திகள் சமூகவலை தளங்களில் பரவின.

    காணாமல் போன மாணவர், மாணவிகளில் ஒருவர் ஹிஜம் (வயது17) மற்றும் பிஜம் (20) என்று தெரிய வந்தது. இவர்கள் இருவரும் முகாம் ஒன்றில் புல்வெளி தரையில் உட்கார வைத்து இருப்பது போன்ற காட்சியும், அவர்களுக்கு பின்னால் ஆயுதம் ஏந்தி சிலர் நிற்பது போன்ற காட்சியும் வீடியோ மூலம் நேற்று பரபரப்பாக பரவியது.

    அதே வீடியோவில் அடுத்த சில நிமிடங்களில் அந்த 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதனால் மணிப்பூரில் மீண்டும் பதட்டம் உருவாகி இருக்கிறது.

    2 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி பற்றி அரசு விசாரணை தொடங்கி உள்ளது. அந்த 2 பேரையும் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுக்கள் சுட்டு கொன்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஜூலை மாதம் அந்த 2 மாணவர்-மாணவி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்தி வந்தோம். ஏற்கனவே அவர்கள் தொடர்பான வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப் படும்" என்று கூறினார்.

    மற்றொரு அரசு உயர் அதிகாரி கூறுகையில், " மாணவர்-மாணவியை கொன்றவர்கள் மீது உறுதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    ×