search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் பரிசு"

    • ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.
    • 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, அயன் வடமலாபுரம், வேடப்பட்டி, விருசம்பட்டி, புளியங்குளம், சித்தவநாயக்கன்பட்டி, குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை (பனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.

    அதன்படி, தற்போது பனங்கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பனை மரத்திலிருந்து பனங்கொட்டைகளை வெட்டி மண்ணில் புதைத்து பனங்கிழங்கு அறுவடை செய்து வருகின்றனர்.

    ஆனால் விளாத்திகுளம் பகுதிகளில் பனை மரத்திலிருந்து விழும் பனங்கொட்டைகளை எடுத்து மண்ணில் புதைத்து அதன் மூலம் பனங்கிழங்கு அறுவடை செய்வதால், அதிக ருசித்தன்மையுடனும், மருத்துவகுணத்துடனும் இருப்பதாக இப்பகுதி பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு பனங்கிழங்கு அறுவடை கூலி, ஏற்றுமதி - இறக்குமதி கூலி என அனைத்திற்கும் கூலி கொடுப்பதால், தங்களுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதைப் போல இந்தாண்டு பனங்கிழங்குகளை அரசே பனைத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், பனைத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    அதேபோல் பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பொங்கல் பரிசுத் தொகையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
    • தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கோவை:

    பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது:-

    தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். தமிழகத்தில் உள்ள அனைவரும் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தது ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பெரும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000-மும் நிறுத்தப்பட்டிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

    எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வெல்லம், முந்திரி, திராட்சை, ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
    • பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்கள் மழை, வெள்ளத்தாலும், காவிரி நீரை உரிய நேரத்தில் பெற முடியாத காரணத்தினால் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பெருமளவு விவசாயிகளும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.6000 நிவாரணத் தொகை, பலருக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும், டோக்கனில் தொடங்கி ரொக்கப் பணம் வழங்குவது வரை ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நேரத்தில், தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, அரசு சார்பாக வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்குவதோடு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகை முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • மழையால் மக்கள் அனைவரும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • ரொக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அண்மையில் பெய்த பெருவெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மக்கள் அனைவரும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

    அதே சமயத்தில், ரொக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும். பொங்கல் தொகுப்பாக சென்ற ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், வரலாறு காணாத அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்ட இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போதைய நிலையில், பொங்கல் தொகுப்பாக, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு, பொங்கல் தொகுப்பாக, எவ்வித நிபந்தனைகளுமின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பினை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அடையாறில் நடைபெற்றது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகள் 100 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுவதால் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க இன்று டெல்லி செல்கிறேன்.

    பிரதமரை சந்திக்கும் போது தமிழ்நாட்டுக்கான மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை கூடுதலாக வழங்கவும் வலியுறுத்த உள்ளேன்.

    கேள்வி:-பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு தொகுப்பு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கேட்டு வருகிறார்களே? வாய்ப்பு உள்ளதா?

    பதில்:-அதுபற்றி முதல்-அமைச்சர்தான் முடிவு எடுப்பார்.

    கேள்வி:-கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 2½ மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் கூறி இருக்கிறாரே? ஆனால் நாம் தொடர்ந்து போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறோமே?

    பதில்:-நிதி அமைச்சர் தெளிவாக பதில் சொல்லி விட்டார். இதுபற்றி விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை. நிதி அமைச்சர் பார்த்து விட்டு சென்றுள்ளார். விரைவில் நிதி ஒதுக்குவார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:-இளைஞர் அணி மாநாடு எப்போது நடைபெறும்?

    பதில்:-அதுபற்றி தலைவர் அறிவிப்பார். 2 நாளில் முடிவு செய்து அறிவித்து விடுவார்கள். இம்மாத இறுதிக்குள் மாநாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ.க் கள் உடன் இருந்தனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படவில்லை.
    • முழுக்கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத்தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ரூ.1000 ரொக்கத்தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏழை மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்படவில்லை. ஆனாலும் அந்த ஆண்டில் வெல்லம், நெய், முந்திரிப்பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அவற்றை வழங்குவதில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றைத் தவிர்ப்பதற்காகவே கடந்த ஆண்டில் வெல்லம், நெய் உள்ளிட்ட பொருட்களை வழங்காமல் அவற்றை வெளிச்சந்தையில் வாங்கிக் கொள்ள வசதியாக ரூ.1000 வழங்கப்பட்டது. அதை இப்போது நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

    எனவே, பொங்கல் திருநாளையொட்டி அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குறைந்தபட்சமாக ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்க வேண்டும். அத்துடன், முழுக்கரும்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலை ரூ.33 போதுமானதல்ல. அது அவர்களின் உற்பத்திச் செலவைக்கூட ஈடு செய்யாது. எனவே, செங்கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்தி வழங்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
    • கடந்த காலங்களில் தரமற்ற பொருட்களும் இடம் பெற்றது போல் மீண்டும் நடைபெறக்கூடாது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பானது விவசாயிகளின், பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். பொங்கல் தொகுப்பில் குறைந்த பட்சம் ரூ. 1,500 மற்றும் முழு கரும்பு ஒன்று அவசியம் இடம் பெற வேண்டும். குறிப்பாக இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த வருடப் பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பை சற்று கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும். பொங்கல் தொகுப்பில் உள்ளவை தரமானதாக, பயனுள்ள வகையில் இருப்பதை முன்னதாகவே தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தரமற்ற பொருட்களும் இடம் பெற்றது போல் மீண்டும் நடைபெறக்கூடாது. மேலும் தமிழக அரசு, பொங்கல் தொகுப்பை உடனடியாக அறிவித்து, அதனை முன்னேற்பாடாக வாங்கி, இருப்பில் பாதுகாப்பாக வைத்து, பொங்கலுக்கு முன்னதாக கொடுக்க வேண்டும். தமிழக அரசு, தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டு உழவர்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
    • ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. போதிய வாழ் வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு உழவர்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.
    • புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    சென்னை:

    புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்க தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசானது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு, ரொக்கப் பணம் தருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரொக்கப்பணம் ரூ.1000, ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    ஆனாலும் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும்? என எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ரேசனில் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து டிசம்பர் மாதமே முடிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பும் தொடங்கி வைக்கப்பட்டு விடும்.

    ஆனால் இந்த டிசம்பர் மாதத்தில் 'மிச்சா' புயல் வந்த காரணத்தால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. அதன் பிறகு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    இந்த மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள் வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.

    அவர்களின் வங்கிக் கணக்கிற்கு இன்னும் பணம் போய் சேரவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் தான் பணம் அனுப்பப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் வெள்ளம் பாதிக்காத மாவட்டங்களில் உள்ள மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.


    ஆனாலும் அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை மிக விரைவில் அறிவிக்கும். வெள்ள நிவாரணத்தால்தான் இந்த அறிவிப்பு தாமதமாகி உள்ளது.

    புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
    • ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.

    • அரசு உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பல குடும்பங்களுக்கு அடுத்த மாதம் 2 முறை ரூ.1000 பணம் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் பச்சரிசி சர்க்கரை, கரும்புடன், ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கம்.

    அதிலும் தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையை தி.மு.க. அரசு மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு ரேசனில் பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

    சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'மிச்சாங்' புயல் பாதிப்புடன் தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பெரிய பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீளாமல் உள்ளனர். அரசு உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு அனேகமாக ஜனவரி 2-வது வாரம் தான் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

    ரேஷனில் ஜனவரி மாதம் எந்த தேதிகளில் பொங்கல் பரிசு வழங்குவது என்று அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதில் முதலமைச்சருடன் கலந்து பேசி விரைவில் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 15-ந்தேதி வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, பொங்கலை கருத்தில் கொண்டு 2 நாட்கள் முன்னதாக 13-ந்தேதியே அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாமா? என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    எனவே பல குடும்பங்களுக்கு அடுத்த மாதம் 2 முறை ரூ.1000 பணம் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
    • தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேதங்களைச் சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகார பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி சென்றுள்ளாா்.

    அவா் இன்றிரவு சென்னை திரும்புகிறார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×