search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உண்டா... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்
    X

    பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உண்டா... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

    • பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அடையாறில் நடைபெற்றது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகள் 100 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுவதால் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க இன்று டெல்லி செல்கிறேன்.

    பிரதமரை சந்திக்கும் போது தமிழ்நாட்டுக்கான மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை கூடுதலாக வழங்கவும் வலியுறுத்த உள்ளேன்.

    கேள்வி:-பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு தொகுப்பு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கேட்டு வருகிறார்களே? வாய்ப்பு உள்ளதா?

    பதில்:-அதுபற்றி முதல்-அமைச்சர்தான் முடிவு எடுப்பார்.

    கேள்வி:-கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 2½ மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் கூறி இருக்கிறாரே? ஆனால் நாம் தொடர்ந்து போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறோமே?

    பதில்:-நிதி அமைச்சர் தெளிவாக பதில் சொல்லி விட்டார். இதுபற்றி விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை. நிதி அமைச்சர் பார்த்து விட்டு சென்றுள்ளார். விரைவில் நிதி ஒதுக்குவார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:-இளைஞர் அணி மாநாடு எப்போது நடைபெறும்?

    பதில்:-அதுபற்றி தலைவர் அறிவிப்பார். 2 நாளில் முடிவு செய்து அறிவித்து விடுவார்கள். இம்மாத இறுதிக்குள் மாநாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ.க் கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×