search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பும்ரா"

    • தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார்.
    • யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அவர் தேவை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததற்கு 2-வது போட்டியில் இந்தியா பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா, ரோகித், விராட் ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் வெர்னோன் பிளாண்டர் கூறியுள்ளார்.

     

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தற்சமயத்தில் பும்ரா உலகின் முழுமையான பவுலராக திகழ்கிறார். அவர் நிலையான லைன் மற்றும் லென்த்தை பிடித்து தொடர்ச்சியாக பந்து வீசும் திறமையை கொண்டிருப்பதாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இப்படி வெற்றிகரமாக செயல்படுகிறார்.

    புதிய தந்தை ஸ்விங் செய்து ஸ்டம்பை நோக்கி கொண்டு வரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுக்கிறார். மாற்றங்களை செய்து தெறிக்க விடக்கூடிய யார்கர் பந்துகளை வீசும் திறமையை கொண்டிருக்கும் அவர் டி20 உலகக் கோப்பையை வெல்ல உங்களுக்கு தேவை. பும்ரா, விராட், ரோகித், ஆகியோர் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த தருணங்களுக்காக வாழ்கிறார்கள். அவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு பிளாண்டர் கூறினார்.

    • டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் பும்ரா.
    • நம்பர் ஒன் பிடித்த நிலையில் அவரின் பதிவு, கிரிக்கெட் விமர்சகளிடம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் என மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    இந்த சிறப்பான பந்து வீச்சு மூலம் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். 30 வயதான அவர் 4-வது இடத்தில் இருந்து முன்னேறி 'நம்பர் 1' இடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்தார். அதாவது இந்திய வேகப்பந்து வீரர்களில் இதுவரை யாரும் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது.

    1979-80-ம் ஆண்டுகளில் கபில்தேவ் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாக இருந்தது. டெஸ்ட் தரவரிசையில் சுழற்பந்து வீரர்களான ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன்சிங் பெடி ஆகியோர் முதல் இடத்தில் இருந்தனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தை பிடித்தது குறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு உள்ளார்.

    அதில் "நமக்கு ஆதரவு கொடுக்க ஒருவர் இருவரை தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் ஏதேனும் சாதனை செய்தால் வாழ்த்து சொல்ல ஆயிரக்கணக்கில் வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை மறைமுகமாக தாக்கி இந்த மீம் புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று பும்ரா எதிர்பார்த்து இருந்தார். ஆனால் குஜராத் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டிக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தற்போது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததற்காக அவரை வாழ்த்தியும், புகழ்ந்தும் மும்பை இந்தியன்ஸ் அணி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பும்ரா இந்த மீம் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது.

    மேலும் இந்திய அணியில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைத்தும் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறாரா? என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    • விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் வேகப்பந்து வீச்சாளர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

    2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ரபடா 2-வது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4-வது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

    • இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார்.
    • பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது.

    இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன் குவித்து முத்திரை பதித்தார். தனது 6-வது டெஸ்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல பும்ரா 45 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த இருவரது பங்களிப்பையும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நம்ப முடியாத இன்னிங்ஸ் அவர் ஒரு அற்புதமான வீரராக திகழ்கிறார். அவர் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.

    பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் சிறப்பாக வீசியது பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார். தனது 26-வது பிறந்தநாளில் அவர் 76 ரன்கள் எடுத்தார்.

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • பும்ரா 34 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி அசத்தினார்.

    இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பும்ரா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்;

    1. ஜஸ்பிரித் பும்ரா - 6781 பந்துகள்

    2.உமேஷ் யாதவ் - 7661 பந்துகள்

    3.முகமது ஷமி - 7755 பந்துகள்

    4. கபில் தேவ் - 8378 பந்துகள்

    5. அஸ்வின் - 8380 பந்துகள்

    இதே போல ஆசிய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் வீரர்கள் அக்தர் - இம்ரான் கானை (இருவரும் 37 போட்டிகளில்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பும்ரா (34 போட்டிகளில்) பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் வக்கார் யூனிஸ் உள்ளார். அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக சாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார்.
    • இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

    தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டனர். இதனால் ரோகித், சுழற்பந்து வீச்சை பந்து வீச அழைத்தார். அதன்படி விக்கெட்டும் கிடைத்தது. பென் டக்கெட் 21 ரன்னில் அவுட் ஆனார். முதல் டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போப் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற விக்கெட் ஆனார்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரூட் 5, பேர்ஸ்டோவ் 25, போக்ஸ் 6, ரெஹன் 6, டாம் ஹார்ட்லி 21 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அணிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 47 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.

    இறுதியில் இங்கிலாந்து அணி 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டும் குல்தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பும்ராவின் செயலுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியின் போது பும்ரா விதியை மீறலில் ஈடுபட்டதாக அவர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 81-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது 1 ரன் எடுப்பதற்கு ஓடி வந்த ஆலி போப்பை வேண்டுமென்றே பும்ரா தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஐசிசி கணடனம் தெரிவித்துள்ளது.

    இந்த செயல் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.12ஐ மீறியதாக கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கவில்லை. கடந்த 24 மாதங்களில் முதல் முறையாக அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பதால் அபராதம் விதிக்கப்படவில்லை. ஆனால் அவரது நன்னடத்தை குறைபாட்டுக்கான புள்ளி சேர்க்கப்பட்டது. அடுத்த 1 ஆண்டிற்குள் மேலும் 3 புள்ளிகளை பெற்றால் 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

    கள நடுவர்கள் பால் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கஃபேனி, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டிட் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, பும்ரா மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பும்ராவின் குற்றத்துக்கு முறையான விசாரணை தேவையில்லை, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும், பும்ரா மீது விதிக்கப்பட்ட கண்டனத்தை ஐசிசி எலைட் பேனல் ஆஃப் மேட்ச் ரெஃப்ரிகளின் ரிச்சி ரிச்சர்ட்சன் ஏற்றுக்கொண்டார்.

    • கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று.
    • ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார்.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.

    ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

    என்று பும்ரா கூறியுள்ளார்.

    மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    துபாய்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. மேலும் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என ஆஸ்திரேலியா அணி முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் பும்ரா 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, டேரில் மிட்செல், விராட் கோலி, ஹாரி புரூக், பாபர் அசாம், உஸ்மான் கவாஜா, ரோகித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இடத்திலும், பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 2 முதல் 5 இடங்களிலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
    • பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 9 ஓவர் வீசி 15 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். தென்ஆப்பிரிக்காவின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்து முகமது சிராஜிக்கு டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 60 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாக இருந்தது.

    29 வயதான சிராஜ் தனது சிறப்பான பந்து வீச்சு தொடர்பாக கூறியதாவது:-

    நான் ஒரு இடத்தை குறி வைத்து நிலையாக பந்து வீசினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் டெஸ்ட் நடைபெற்ற செஞ்சூரியன் ஆடுகளம் போலவே இந்த பிட்சும் இருந்தது. முதல் டெஸ்டில் நாங்கள் ரன்களை வாரி கொடுத்தோம். அதுமாதிரி அமைந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தி பந்து வீசினோம். எனது தவறை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் பந்து வீசினேன்.

    பும்ராவும் சிறப்பாக பந்து வீசி தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவருக்கு துரதிருஷ்டவசமாக விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. எனக்கு 6 விக்கெட் கிடைத்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

    இவ்வாறு சிராஜ் கூறி உள்ளார்.

    • பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.
    • எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் காலையில் இருந்து ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. அது என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அமைதி தான் சில நேரங்களில் சிறந்த பதிலாக அமையும் என பதிவிட்டிருந்தார்.

    எதற்காக இப்படி வைத்துள்ளார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர். சில ரசிகர்கள் உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாம்பியன் டிராபி இருக்கும் என்பதை தான் இப்படி கூறுகிறார் என தெரிவித்து வந்தனர்.

    இந்த குழப்பம் முடிவுக்கு வருவதற்குள் மேலும் ஒரு குழப்பத்தை பும்ரா ஏற்படுத்தி உள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள பக்கத்தை unfollow செய்துள்ளார். இதற்காக தான் அவர் அப்படி ஒரு ஸ்டோரியை வைத்துள்ளாரா என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

    மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணியும், கேமரூன் கிரினை பெங்களூர் அணியும் வாங்கியதாக அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×