என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kapil Dev"

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது.
    • பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை பந்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனுடன் இன்று மோதுகிறது.

    இதையடுத்து, நாளை மறுதினம் துபாயில் அரங்கேறும் முக்கியமான லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இவ்விரு அணிகள் முதல் முறையாக சந்திக்க இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    இந்திய வீரர்கள் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்தியாவிடம் சிறந்த அணி உள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்ற விஷயங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல், தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும். களம் இறங்கி வெற்றி பெறுங்கள். அரசாங்கம் தங்களது வேலையை பார்த்துக் கொள்ளும். வீரர்கள் தங்களது வேலையை சரியாக செய்ய வேண்டும். அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நன்றாக ஆடியது. கோப்பையையும் நமது அணி வெல்லும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • கபில்தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.
    • தற்போது கபில்தேவின் வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர்.

    இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

    முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட், கபில் தேவ் - 12 முறை விக்கெட், அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் 14-வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) வீழ்த்தினார் ஜஸ்பிரீத் பும்ரா.

    அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

    ஏற்கனவே கபில் தேவ் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா 34 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்.
    • இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரியளவில் ரன்கள் குவிக்காத அவர், முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சேவாக், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

    இந்நிலையில் சுப்மன் கில் பற்றி எதிர்மறையான விஷயங்களை பேசுவதை விட நேர்மறையான விஷயங்களை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல. இப்போது நாம் எதிர்மறையாக பேச வேண்டாம். திறமையை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் அசத்துவார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடுவது எளிதாக இருக்காது.

    சுப்மன் கில் கேப்டன்ஷிப் பதவிக்கு பொருத்தமாக இருப்பார். தேர்வாளர்கள் அனைத்து விஷயங்களையும் கணக்கிட்ட பின்பே நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளார்கள். அவருக்கு அணி மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை.

    இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் அசத்துவது நல்லது. பும்ரா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கொடுத்து கேப்டனாக வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

    சுப்மன் கில் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் செயல்படுவது தன்னுடைய இலக்கை சாதிக்க உதவும். திடமான பேட்ஸ்மேனாக தெரியும் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
    • டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.

    அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.

    காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.

    விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கபில்தேவ் 

    கபில்தேவ் 

    மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.

    டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.

    இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.

    • நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம்.
    • சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

    இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி இருக்கிறார்.

    இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:-

    இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.

    இந்திய அணியின் பந்துவீச்சு ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி நான் முக்கியம் இல்லை என சொல்லவில்லை. அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபால், வைடு வீசக்கூடாது.

    சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும்.

    இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். வெற்றிகரமாக எட்டுவார்கள் அதேபோன்று ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம்.

    என்று கபில்தேவ் கூறினார்.

    • கபில் தேவ்-ன் சாதனையையும் வாஷிங்டன் சுந்தர் முறியடித்துள்ளார்.
    • வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து - இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். இதன் பின்னர் வந்த பண்ட் (15), சூர்யகுமார் யாதவ் (4) என சொதப்பியதால் மிடில் ஓவரில் தடுமாறியது. அப்போது நிதானமாக ஆடும் சூழலுக்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் ( 36) , ஸ்ரேயாஸ் ஐயர் (80 ) ரன்களை அடிக்க, இந்திய அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடந்தது.

    எனினும் ஆக்லாந்து மைதானம் மிக சிறியது என்பதால் 300 ரன்கள் என்பது கட்டாயம் வேண்டும். ஆனால் 4 ஓவர்கள் தான் மீதம் இருந்தது. அப்போது உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தார். 16 பந்துகளை மட்டுமே சந்தித்த சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசி நாட் அவுட்டாக இருந்தார்.

    இதன் மூலம் வாஷிங்டன் சுந்தர் 13 வருட சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது நியூசிலாந்து மண்ணில் அதிவேகமாக (16 பந்துகளில்) 30 ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். அதன்பின்னர் ஒரு வீரரால் கூட அடிக்க முடியவில்லை. ஏனென்றால் நியூசிலாந்து மண்ணில் அதிரடி காட்டுவது சாதாரணம் அல்ல. பிட்ச் அந்த அளவிற்கு கடினமாக இருக்கும்.

    இதே போல கபில் தேவ்-ன் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மண்ணில் ஏற்கனவே கூறியதை போல அதிரடி காட்ட முடியாது. அங்கு கடந்த 1992ம் ஆண்டு கபில் தேவ் 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார். அதன்பின் சுரேஷ் ரெய்னா 2009-ல் 211.11 வைத்திருந்தார். தற்போது வாஷிங்டன் சுந்தர் 231.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    • நீங்கள் பயந்தால் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை.
    • நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும்.

    இந்திய அணியின் முன்னணி வீரர்களை கபில்தேவ் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். தற்போது போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ ஓய்வு வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் முன்னணி வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவின் உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கபில் தேவ் பேசியது பின்வருமாறு:-

    நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறோம் எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது என்ற வார்த்தை தற்போது உள்ள வீரர்கள் இடையே மிகவும் சர்வசாதாரணமாக மாறிவிட்டது. நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அப்போது எதற்கு இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். உங்களை யார் விளையாட சொல்கிறார்கள்.

    இவ்வளவு அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர் உங்களை திட்டுவார்கள். இந்த திட்டுவதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை. நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும். அது எப்படி சாத்தியமாகும்? 100 கோடி மக்கள் இருந்து வெறும் 20 பேர் தான் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

    இதை பெருமை என்று சொல்லுங்கள் இதனை நீங்கள் எப்படி நெருக்கடி ,அழுத்தம் என்று சொல்வீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

    நீங்கள் மக்களிடமிருந்து அவ்வளவு அன்பை பெறுகிறீர்கள். இனி அழுத்தம் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பெருமை கொள்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள். அழுத்தம் என்பது அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் வார்த்தை.

    உங்களால் விளையாட முடியவில்லை என்றால், பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் செய்யாதீர்கள். உங்களை யார் செய்து ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது. எங்கேயாவது சென்று மளிகை கடை திறவுங்கள். அங்கு வாழைப்பழம் முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

    என்று கபில்தேவ் விமர்சித்துள்ளார்.

    • இந்த வயதில் காரில் வேகமாக செல்ல வேண்டுமென்று தோன்றுவது இயற்கை தான்
    • என்னை கேட்டால் நீங்கள் ஒரு டிரைவரை எளிதாக வாங்கியிருக்கலாம்.

    இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதியன்று கார் விபத்துக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

    துரதிஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். அனைவரது பிரார்த்தனைக்கேற்ப எலும்பு முறிவுகளை சந்திக்காமல் ஆபத்து கட்டத்தை தாண்டிய ரிஷ்ப் பண்ட் தொடர்ந்து டேராடூனில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இருப்பினும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்துள்ள அவர் முழுமையாக குணமடைந்து வருவதற்கு குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

    இந்நிலையில் இந்த வயதில் காரில் வேகமாக செல்ல வேண்டுமென்று தோன்றுவது இயற்கை தான் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் கபில் தேவ் அவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கிய ரிசப் பண்ட் ஒரு ஓட்டுனரையும் நியமித்திருக்க வேண்டும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

    உங்களிடம் பார்ப்பதற்கு சிறப்பாகவும் வேகத்தில் அதிரடியாகவும் செல்லும் கார் உள்ளது. ஆனால் அதில் நீங்கள் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். என்னை கேட்டால் நீங்கள் ஒரு டிரைவரை எளிதாக வாங்கியிருக்கலாம். அதனால் நீங்கள் தனியாக ஓட்டியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. மேலும் ஒருவருக்கு கார் ஓட்டுவது ஒரு பொழுதுபோக்கு அல்லது ஆர்வம் கொண்ட எண்ணமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக அவருடைய வயதில் அது இருப்பது இயற்கையானது.

    ஆனால் உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களை உங்களால் மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும். அதற்கு தேவையான விஷயங்களை நீங்க தான் தீர்மானிக்க வேண்டும். இதுவும் அவருக்கு ஒரு பாடமாகும்.

    சொல்லப்போனால் நானும் இளம் வயதில் கிரிக்கெட் வீரராக வருவதற்கு முன்பு இதே போல மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்துள்ளேன். அப்போதிலிருந்து என்னுடைய சகோதரர் என்னை மோட்டார் பைக்கை தொட விடமாட்டார். எனவே ரிசப் பண்ட் காப்பாற்றப்பட்டதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
    • இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார்.
    • சூரியகுமார் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என்றார் கபில்தேவ்.

    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக வலம் வரும் அவருக்கு, இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    சூர்யகுமார் யாதவின் இன்னிங்சை விவரிக்க சில சமயம் வார்த்தைகளே கிடைக்காது. சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் விளையாடுவதை பார்க்கும்போது, இவர்களை போன்ற ஒரு ஆட்டக்காரர் எப்போதாவது வருவார் என்று நாம் நினைப்போம். அந்த வரிசையில் இப்போது சூர்யகுமார் யாதவ் இணைந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

    சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் விளையாடும் விதம் அற்புதம். குறிப்பாக 'பைன் லெக்' திசைக்கு மேல் அடிக்கும் சிக்சர்கள் பந்து வீச்சாளர்களை பயமுறுத்துகிறது. அவரால் நின்ற இடத்திலேயே 'மிட் ஆன்' மற்றும் 'மிட் விக்கெட்' திசையிலும் சிக்சர்கள் விரட்ட முடிகிறது. பந்து வீச்சாளர்கள் சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து வீசினாலும் அதையும் தெறிக்க விடுகிறார். அதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது கடினம்.

    எனது வாழ்நாளில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், விராட் கோலி உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஒரு சிலரே சூர்யகுமார் போன்று பந்தை துல்லியமாக நொறுக்குகிறார்கள். அவருக்கு பாராட்டுகள். அவரை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என தெரிவித்தார்.

    • ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
    • இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.

    விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்றார் ரோகித் சர்மா. கேப்டனான பிறகு ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறிய அவர் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அடிக்கடி ஓய்வெடுத்ததால் 2022-ம் ஆண்டு வரலாற்றிலேயே 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

    இதனையடுத்து ரோகித் சர்மா, ராகுல் போன்ற வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. மேலும் கடைசி வாய்ப்பாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடும் என்றும் நம்பப்படுகிறது.

    இருப்பினும் ரோகித் சர்மா 35 வயதை கடந்து விட்டதால் 2023 உலகக் கோப்பை வென்றாலும் இல்லையென்றாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அத்தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் இளம் வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் தவறில்லை ஆனால் ஒரு சில தோல்விகளுக்காக அவரை அவசரப்பட்டு கேப்டன் பதவியிலிருந்து நீக்க கூடாது என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    முதலில் கேப்டன் பொறுப்பு வழங்கும் நீங்கள் உலகம் என்ன சொல்லும் என்பதை பார்க்காமல் அணியை பார்த்து அவர் எப்படி சிந்திக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா அங்கே கேப்டனாக இருந்தால் நீங்கள் ஒரு தொடரில் தோற்றால் உங்களை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவோம் என்று யாரும் அவரிடம் சொல்ல கூடாது.

    ஏனெனில் நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் அவரால் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியும். பாண்டியா உட்பட யாராக இருந்தாலும் தவறுகள் செய்வார்கள். ஆனால் அதற்காக அந்த தவறை பார்க்காமல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் எந்தளவுக்கு அணியை எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க வேண்டும். .

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×