என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gautam gambhir"

    • இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது.

    மும்பை:

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது:

    பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.

    2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.

    இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம்.

    இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.

    • சின்னசாமி மைதான நுழைவாயில் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
    • ஆர்சிபி அணிக்கெதிராக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் நேற்று ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விதான சவுதாவில் (சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள இடம்) முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து புறப்படுகிறார்கள். புறப்படுவதற்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பெங்களூரு சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து கம்பீர் கூறியதாவது:-

    நான் ஒருபோதும் ரோடு ஷோ நடத்துவதை நம்புவதில்லை. ரோடு ஷோ நடத்தக்கூடாது. மக்களின் உயிர் முக்கியமானது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், இங்கிலாந்து டெஸ்ட் குறித்து கூறுகையில் "பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அணி தோற்றாலும், வெற்றி பெற்றாலும் எப்போதும் நான் நெருக்கடியில் இருப்பேன். சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முடிவு தரக்கூடிய சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வோம்" என்றார்.

    • நடப்பு ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் ஷ்ரேயாஸ் அழைத்துச் சென்றுள்ளார்.
    • கடந்த ஆண்டு ஷ்ரேயாஸ் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை.

    கடந்த ஆண்டு அவர் தலைமையில் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் அதன் பிறகு தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    நடப்பு ஆண்டு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டி வரை தன்னுடைய தலைமையில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனாலும் அவர் அணியில் எடுக்கவில்லை என்பதை விட ஓரம்கட்டப்பட்டுள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் இந்திய அணியில் ஏன் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் "நான் தேர்வுக்குழுவின் தலைவர் இல்லை" எனக் கூறியுள்ளார். கம்பீரின் இந்த பதில் பொறுப்பற்றத் தனமாகவும் திமிர்த்தனத்துடனும் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    • லீக் ஆட்டத்துடன் வெளியேறும் அணியில் உள்ள வீரர்கள் ஜூன் 6-ம் தேதி பயிற்சியாளர் கம்பீருடன் புறப்படுவார்கள்.
    • இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 20-ந் தேதி தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித், விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை நாளை பிசிசிஐ இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் பிசிசிஐ நாளை ஆலோசனை நடந்த உள்ளது . ஆலோசனைக்கு பிறகு புதிய கேப்டன் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் விளையாடுவதற்காக ஜூன் 6-ந் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்துடன் இருந்து வெளியேறும் அணியில் உள்ள வீரர்கள் ஜூன் 6-ம் தேதி பயிற்சியாளர் கம்பீருடன் புறப்படுவார்கள்.

    மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து புறப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.

    • பும்ரா அடிக்கடி காயம் அடைவதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.
    • சுப்மன்கில் கேப்டனாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந் தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது.

    விராட்கோலி, ரோகித் சர்மா மற்றும் ஆர்.அஸ்வின் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தின்போது அஸ்வின் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

    ஐ.பி.எல். போட்டி நடைபெற்று இருக்கும்போது ரோகித் சர்மா கடந்த 7-ந் தேதி டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அதை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி யாருமே எதிர்பார்க்காத வகையில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட்கோலி டெஸ்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் சீனியர் வீரர்கள் இல்லாத இந்திய அணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தனக்கு முழு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட தோல்வி, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தோல்வி போன்று மீண்டும் நடைபெறுவதை தடுக்க தனக்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்திய அணியில் உள்ள வீரர்களில் தற்போது பும்ரா மட்டுமே காம்பீருக்கு சவாலாக இருப்பார். அவரது செயல்பாடுகளுக்கு பும்ரா முட்டுக்கட்டை போடுவார்.

    அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கும் சுப்மன்கில் இளம் வீரர், காம்பீர் சொல்வதை கேட்பார். அவருக்கு சவால் விடக்கூடிய நிலையை சுப்மன்கில் இன்னும் எட்டவில்லை.

    பும்ரா அடிக்கடி காயம் அடைவதால் அவரை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. சுப்மன்கில் கேப்டனாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால் காம்பீருக்கான சில அதிகாரங்களை பி.சி.சி.ஐ. பறித்து இருந்தது. தற்போது அணி தனது முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். காம்பீரின் கோரிக்கையை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    • கோலியின் தலைமையின் கீழ், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது.
    • ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் விராட் கோலி. இவர் சச்சினை விட பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி சச்சினின் நீண்ட நாள் சாதனையை முறியடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

    இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் அறிவித்தார்.

    இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

    மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார்.

    அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர், விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில், "சிங்கத்தைப் போன்ற பேரார்வம் கொண்ட ஒரு மனிதன்! உங்களை மிஸ் பண்ணுவேன் சீக்ஸ் …." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

    கோலியின் தலைமையின் கீழ், இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தது. மேலும் 2018-19 சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியாவில் முதல் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 போட்டியில் விராட் கோலி, ரோகித் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.
    • தற்போது இருவரும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

    சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது.

    கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரில் விராட், ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் இருவரும் விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மவுனம் கலைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தேர்வுக்குழுவே வீரர்களை தேர்வு செய்கிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்படும் வரை, அவர்கள் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எந்த பயிற்சியாளரோ, தேர்வாளரோ அல்லது பிசிசிஐ-யோ உங்களை விளையாடுவதை நிறுத்தச் சொல்ல முடியாது. நன்றாக விளையாடுவது மட்டுமே ஒரு வீரரின் தேர்வை உறுதி செய்கிறது.

    என கம்பீர் கூறினார்.

    • இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் காவல் நிலையத்தில் கம்பீர் அளித்துள்ளார்.
    • கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் புகார் அளித்துள்ளார்.

    'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

    தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.
    • சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

    சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடியும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சமும் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தனது துணை ஊழியர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் என்று கூறிய ராகுல் டிராவிட்டின் முன்மாதிரியை கவுதம் கம்பீர் பின்பற்றுவாரா என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ஸ்போர்ட்ஸ்டார் இதழில் சுனில் கவாஸ்கர் எழுதிய கட்டுரையில், "2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தனது சக துணை ஊழியர்களை விட அதிகமான பரிசுத்தொகை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். மேலும், தனக்கு கிடைத்த 2.5 கோடி பரிசுத் தொகையை துணைப் பயிற்சியாளர்களுக்கு டிராவிட் பகிர்ந்து கொடுத்தார்.

    2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதற்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ 3 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. ஆனால் மோர்னே மோர்கெல், திலிப் உள்ளிட்ட துணைப் பயிற்சியாளர்களுக்கு 50 லட்சம் மட்டுமே பரிசாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் போல எந்த அறிவிப்பும் வெளியிட்டதாக தெரியவில்லை. அப்படியானால் ராகுல் டிராவிட் நல்ல ரோல் மாடலாக இல்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பாபர் மிடில் ஆர்டரில் இறக்க வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் வற்புறுத்தல்.
    • நீங்கள் கேப்டனாக இருந்தால், உங்கள் அணியை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.

    உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட  பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாகவே இருக்கிறது

    அதன் தொடக்க வீரராக களம் இறங்கும் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல் பெரிதாக தெரியவில்லை.

    ஆனால், தற்போதைய டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக பாபர் ஆசம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கில் நீடிக்கிறது.

    கடந்த போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரிஸ்வான் உடன் பகர் ஜமான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் பாபர் ஆசம்தான் தொடக்க வீரராக களம் இறங்கினார். பின்னர் களம் இறங்கிய பகர் ஜமான் 16 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.

    பாகிஸ்தான் 13.5 ஓவரில் 92 ரன் இலக்கை எட்டிப்பிடித்தது. பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் பாபர் ஐந்து பந்தில் நான்கு ரன்களே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வரும் வியாழன் அன்று நடைபெறும் தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    இந்த போட்டியில் பாபர் ஆசம் 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்த போட்டிகளில் பாபர் ஆசம் மிடில்-ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் போன்றவர்களும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், உங்களுக்குப் பதிலாக உங்கள் அணியைப் பற்றி சிந்தியுங்கள்; உங்கள் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், நீங்கள் பகர் ஜமானை தொடக்க வீரராக களம் இறக்கி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால் அது சுயநலம் என்று அழைக்கப்படுகிறது; ஒரு கேப்டனாக, சுயநலமாக இருப்பது எளிது. பாபர்,ரிஸ்வானும் பாகிஸ்தானுக்கு பல சாதனைகளை படைப்பது எளிது. நீங்கள் ஒரு தலைவராக இருக்க விரும்பினால், உங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • உலகக் கோப்பையில் இரண்டு அரைசதம் விளாசியுள்ளார்.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெர்த்தில் அடித்த அரைசதம் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியின் விராட் கோலி அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அவருக்கு இணையாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விராட் கோலி 3 அரைசதம் அடித்துள்ள நிலையில், சூர்யகுமார் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். குறிப்பாக பெர்த் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்ய குமார் விளையாடிய விதம் அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது.

    மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை துரத்தும் வல்லவை அவரிடம் உள்ளது. இதனால் டி வில்லியர்ஸ்க்கு பின் 360 டிகிரி என ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவருக்கு 360 டிகிரி என பெயர் வைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காம்பீர் கூறியதாவது:-

    சூர்யகுமாரை 360 டிகிரி போன்ற பெயர்களால் அழைக்க வேண்டாம். அதற்காக அவர் இன்னும் அதிக அளவில் உழைக்க வேண்டும். அவருக்கு ஏராளமான திறமைகள் உள்ளது. அது 360 டிகிரி, 180 டிகிரி அல்ல ஒரு டிகிரி என்பது விஷயம் அல்ல.

    அவரிடம் விளையாட்டு இருக்கிறது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். பாரம்பரிய பயிற்சியாளர் அவரை பார்க்கும்போது, அவர் திறமையான பேட்ஸ்மேனுக்கான லைனை தாண்டவில்லை என்றாலும், அவர் பெற்றுள்ள திறமையால் வெற்றிகரமாக திகழ்வார் என்று நிலையை எடுப்பார். முதல்தர கிரிக்கெட் மற்றும் எல்லா வகையிலான கிரிக்கெட்டிலும் ரன்கள் குவித்தள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடித்து, சிறப்பாக செயல்படுவார் என் நம்பிக்கை உள்ளது'' என்றார்.

    மேலும், ''மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் போன்று கவர் டிரைவ் அடிக்காமல் இருக்கலாம். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்களை விட நினைத்து பார்க்க முடியாத வகையில் 180 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்'' என்றார்.

    • ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை குறை கூறுங்கள்.
    • இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல்.

    டெல்லி:

    அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த தோல்விக்கு வீரர்களின் அணுகுமுறையும், ஐபிஎல் தொடருமே காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறந்த மாற்றம் ஐபிஎல் தொடர் தான் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். 2008-ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள்.

    ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் என்று விரலை நீட்டுவது சரியாக இருக்காது. அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

    ஏனென்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பெரும்பாலும் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிரிக்கெட்டில் உணர்வும் கலந்திருக்கிறது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்களே, இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பிக் பாஷ் உள்ளிட்ட வெளிநாட்டு தொடர்களில், எத்தனை இந்தியர்கள் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி. ஆனால் நமது பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இங்கு வந்து பல வெளிநாட்டு கிரிக்கெட்டர்கள் பணி செய்கிறார்கள். நமது நாட்டு வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்தியாவில் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.

    பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும். பிசிசிஐயின் 50% வருமானமே, கிரிக்கெட்டிற்கு போதுமானவை. அதனால் மற்ற விளையாட்டுகளுக்கு மீதமுள்ள 50% வருமானத்தை ஒதுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×