search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு கொண்டாட்டம்"

    • புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் இறைவழிபாட்டுடன் புத்தாண்டை தொடங்குவது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

    புத்தாண்டை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கால சந்தி, சிறுகாலசந்தி, விழா பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப் பெருமான் அருள்பாலித்தார்.

    புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலையில் படிப்பாதை, யானைப்பாதை வழியாக கொட்டும் பனியிலும் நடந்து சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கடந்த சில நாட்களாகவே பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாட்டு பாடியும் குழுவாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவில், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

    • புத்தாண்டை வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியாக மக்கள் வரவேற்றனர்.
    • வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை, மக்கள் தரிசனம். கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் புத்தாண்டு பிறந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இனிமேல்தான் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தில் "2024-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    புத்தாண்டையொட்டி நேற்றிரவு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார்.
    • கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). புதுவையில் உள்ள அரசு பள்ளியில் இவர்கள் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி கடற்கரைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு மோகனா, லேகா ஆகியோரது நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் நவீன் (16), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்து 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி அக்காள், தங்கை உள்பட 4 பேரையும் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்களுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான படகில் சென்று கடலோர காவல்படை போலீசாரும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் தற்காலிகமாக தேடும் பணி கைவிடப்பட்டது.

    கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அக்காள்-தங்கை உள்பட 4 பேரின் கதி என்ன? என்பது தெரியாதநிலையில் இதுபற்றிய தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பதறிப்போன அவர்கள் கடற்கரைக்கு வந்து அழுது புரண்டனர். இந்த காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    • உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.
    • கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும்.

    இப்புத்தாண்டில் இனிதான வாழ்வு நமது ஆகட்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் ஒருவர் எந்த அளவுக்கு முழுமையாக உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதே மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவித நோய்க்கும் ஆளாகாமல் இருக்கும் நல்ல ஆரோக்கியமே ஆனந்தமான வாழ்க்கையை நல்கும் எனலாம். எனவே அவ்வப்போது தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், சிறிய உடல் உபாதை என்றாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும், நல்ல மனநலத்துடன் மகிழ்வாக தினப்படி வாழ்வை அமைத்துக் கொள்வதும் புத்தாண்டை மேலும் இனிதாக்கும்.

    நம் வாழ்வில் நமக்கு கிடைத்திருக்கும் நம் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் நமது வணிக உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவிப்போம். இது நம் சூழலை மேம்படுத்தும்

    உணர்ச்சி மேலாண்மை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த சூழலிலும் பதட்டப்படாமல், சினம் கொள்ளாமல், நிதானமாக செயல்படுவோம். நிரந்தர வெற்றியை நமதாக்குவோம்.

    இந்த புத்தாண்டில் நாம் அடைய விரும்பும் அனைத்து லட்சியங்களையும் அடைந்து விட்டதாக நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். இது நமது ஆழ்மனதின் அற்புத ஆற்றலின் மூலம் நிஜமாகவே நாம் விரும்பியவை நியாயமாக நமக்கு கிடைக்க வழி வகுக்கும்.

    இன்றைய உலகம் தகவல்களால் நிறைந்திருக்கிறது. தகவல்கள் எல்லா வகையிலும் நம்மை சூழ்ந்து நம் கவனத்தை ஈர்க்கின்றது. நமக்கு எது வேண்டிய தகவல் எது வேண்டாத தகவல் என்பதை அறிந்து நமது நேரம் விரயமாவதை தவிர்க்க வேண்டும். நேரம்தான் உண்மையான செல்வம் இதை சரியாக புரிந்து செயல்படுவோம்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது இந்த தலைமுறையில் மிகவும் குறைந்து விட்டது.இனி நேரடியாக அவ்வப்போது நண்பர்களோடு, உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.

    ஸ்மார்ட் வாட்ச்சும் எலக்ட்ரிக்கல் வாகனமும் வாழ்க்கையை பெரிய அளவிற்கு தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை கற்போம். நம் வாழ்வின் மேம்பாட்டிற்கு தக்க வகையில் அதை பயன்படுத்துவோம்.

    நம் எல்லோர் முன்னும் வாய்ப்புகள் வரிசை கட்டி சென்று கொண்டிருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வை வளமாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. தளராது முயற்சி திட்டமிட்ட கடினமான உழைப்பு எப்போதுமே வெற்றியை நமதாக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஒரு செயலை செய்ய முடிவு செய்த பின்னர் அதில் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கக் கூடாது. நன்று என தெரிந்து விட்டால் அதை இன்றே செய்யும் குணம் வேண்டும். நேரத்தை விரயம் செய்வதை நிறுத்துவது தான் பலருக்கு செயல் திறனை மேம்படுத்தி வெற்றி தந்திருக்கிறது.

    நமக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். முடிந்தால் தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் 30 நிமிடம் ஒதுக்கி நாம் தினப்படி செய்த வேலைகளை பட்டியலிட்டு அவைகளில் இருக்கின்ற குறை நிறைகளை குறித்து வைத்துக்கொண்டு நாளைய நிகழ்ச்சிகளை இன்றைக்கு திட்டமிட வேண்டும். இது நேர மேலாண்மைக்கு பெரிதும் உதவும்.

    உங்களுடைய அனைத்து எண்ணங்களையும் யோசனைகளையும் பதிவு செய்யுங்கள். நீங்கள் ஒரு செயலை செய்யும் பொழுது ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து பின் வேலையை தொடருங்கள். உங்கள் வேலையை சிதறடிக்க கூடிய அனைத்தையும் தெளிவாக ஒதுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மேஜை எப்பொழுதும் நீங்கள் என்ன வேலை செய்யப் போகிறீர்களோ அது தொடர்பான பொருட்கள் மட்டும் இருக்கட்டும். எக்கச்சக்கமான பொருட்களால் நிரப்பாதீர்கள்.

    ஒரு விஷயத்தை புதிதாக செய்யும் பொழுது அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அப்போது ஒரு நிபுணர் போல செயல்படுங்கள். நிபுணர்கள் எப்பொழுதும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் பொழுது முழு கவனத்தை அதில் மட்டுமே செலுத்துவார்கள்.

    மின்னஞ்சலை பார்ப்பது வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளுக்கு பதில் போடுவது என்பதற்கு ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய்யுங்கள். புதிய பொருட்கள் வாங்கும் போது அது உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பலமுறை உங்களுக்குள்ளே நீங்களே கேள்வி எழுப்பு பின் முடிவுக்கு வாருங்கள்.

    சில நாட்கள் உங்களுக்கு மிக சிக்கலாகவும் மனசோர்வும் தந்தால் வேலை வலு மிகுதியாக இருந்தால் உங்களை நீங்களே புத்துணர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.

    கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும். அவை பற்றிய வருத்தங்களும் குற்ற உணர்வுகளும், சுமையாக நமக்கு இருக்க வேண்டாம். அனைத்தையும் விட்டொழிப்போம். வருங்காலம் எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய பயம் வேண்டாம். நிகழ்காலத்தை நிஜமாகவே முழுமையாக நாம் அனுபவித்து பயன்படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்வான வாழ்வே நமக்கு சொந்தமாய் இருக்கும்.

    • வேளாங்கண்ணி, சாந்தோம் தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    • வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜை.

    2024 ஆங்கிலப்புதாண்டு பிறந்துள்ளது. ஆங்கில புத்தாண்டை வரவேற்க சென்னையில் பொதுமக்கள் நள்ளிரவு பொது இடங்களில் கூடினர். சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். அதேபோல் புதுச்சேரியிலும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் வாணவேடிக்கை நிகழ்த்தி புத்தாண்டை வரவேற்றனர். Happy New Year என கோசமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புத்தாண்டையொட்டி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தேவாலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஈரோட்டில் தேவாலயத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்து கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதல் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உற்சவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் அவர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவை புளியங்குடி முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி மணக்குள விநாயர் கோவிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுச்சேரியில் கடற்கரையில் நள்ளிரவு 1.30 மணிக்குப் பிறகும் சுற்றுலா பயணிகள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆங்கில புத்தாண்டு 2024 நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதை முன்னிட்டு சென்னையில் புத்தாண்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நட்சத்திர ஹோட்டல்கள், மால்களில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

    2024 புத்தாண்டு பிறந்ததையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அனைத்து கிறிஸ்தவ சபைகளிலும் இரவு 10 மணி முதல் புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும்.
    • புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச்சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம்.

    சென்னை:

    ஆங்கில புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    இந்த புத்தாண்டு, புதிய ஆண்டின் தொடக்கமாக மட்டுமல்லாமல் புதிய வாழ்க்கைக்கான தொடக்கமாகவும் அமைய வேண்டும்.

    ஒற்றுமை உணர்வோடும் சமத்துவச் சிந்தனையோடும் பாரத தேசம் உலக அரங்கில் பீடுநடை போடும் வகையில் கடமையாற்ற உறுதி ஏற்போம்.

    இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் அனைவரின் வாழ்விலும் நிறைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    கே.எஸ்.அழகிரி:-

    பிறக்கப் போகும் இந்த புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    ஜி.கே.வாசன்:-

    2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும்.

    நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, நல்லாட்சி நடைபெறவும், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு மேம்படவும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் மத்திய, மாநில அரசுகளும், பொது மக்களும் உறுதி ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.

    வைகோ:-

    மலரப் போகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் பாராளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது.

    இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம்.

    டாக்டர் ராமதாஸ்:-

    நாம் கடந்து வந்த கரடு முரடான பாதைகள் முடிவுக்கு வந்துவிட்டன. புத்தாண்டில் புதிய பாதை தெரியும்; புதிய வெளிச்சம் பிறக்கும். அவற்றின் உதவியுடன் 2024-ம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே இனிப்பாக அமையும்.... அனைவருக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

    அன்புமணி ராமதாஸ்:-

    தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யட்டும்.

    கமல்ஹாசன்

    பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச்சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம்.

    பால் தினகரன்

    "நாம் கடந்து வந்த துன்பங்கள் துயரங்கள், பாடுகள் பாரங்கள், கவலைகள், கண்ணீர், வேதனைகள், சோதனைகள், நாசங்கள், மோசங்கள் என்ற பழைய இருள் எல்லாம் மறைந்து, நன்மை, ஆனந்தம், நிம்மதி, சமாதானம் என்னும் புதிய ஒளி பெருகும் ஆண்டாக, 2024 திகழ்ந்திடட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், டாக்டர் பால் தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக முத்தையா மாரியப்பன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், தேசிய முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் சிவா, இந்திய ஜனநாயக் கட்சி தலைவர் ரவி பச்ச முத்து, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தர கர்கள் சங்க தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் நல சங்க பொதுச் செயலாளர் டாக்டர் அய்யப்பன், ஹஜ் அசோசி யேஷன் தலைவர் பிரசி டெண்ட் அபுபக்கர், நமது உரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் டாக்டர் செங்கை பத்மனாபன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணிஅரசன் ஆகியோர் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்து உள்ளனர்.

    • இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை இந்த 2023 வழங்கியது.
    • புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு! தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.

    "எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனை வருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் 2024-ஐ வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.
    • புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல், ஆற்றின் முகத்துவாரத்தில் படகு பயணம் செய்வதை விரும்புகின்றனர்.

    இதையடுத்து புதுவை அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் புற்றீசல்போல 100-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக பாதுகாப்பின்றி இயக்கப்பட்டன. சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா படகுகள் இயக்குவதை அரசு தடை செய்தது. முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்புடன் படகுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதன்படி புதுவையில் 300-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகு இயக்க அனுமதி கோரினர். அனுபவம் கொண்ட 8 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

    இந்தநிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் பலர் கடலில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

    இந்த படகுகளை துறைமுக பகுதியிலிருந்து இயக்குகின்றனர்.

    மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதை கண்டித்தும் புதுவை மீனவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். துறைமுகத்தை நோக்கி வரும் பெரியாறு பகுதியில் கட்டுமரங்களை கடலில் குறுக்கே நிறுத்தி வலை வீசி போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, சுண்ணாம்பாறு படகு குழாம் முழுமையாக சுற்றுலாவுக்கு ஒதுக்கப்பட்டது.

    தற்போது பெரியாறு பகுதியில் படகுகள் இயக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படும்.

    இறால் முட்டைகள், மீன் குஞ்சுகள் அழிந்து வருகிறது. இதனால் கடல் வளமும், ஆற்று வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து விசைப்படகு மீனவர்களுடன் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் முக்கிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில், புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * இன்று இரவு 7 மணி முதல் கடற்கரை உட்புற சாலை முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது.

    * பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலை மூடப்படுகிறது.

    * மெரினா கடற்கரைக்கு செல்ல விரும்புவோர், சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    * போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர்.


    * மாலை 6 மணிக்கு மேல் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    * வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    * கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்தால் உடனடியாக புகார் அளிக்க ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    • தமிழக மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
    • கழக ஆட்சிக் காலங்கள் ‘தமிழக மக்களுக்கான பொற்காலங்கள்’ என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மாவால் போற்றி வளர்க்கப்பட்ட 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்', மக்களுக்கு துயரம் ஏற்படும் நேரங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பேரூதவி செய்து வருவதையும்; கழக ஆட்சிக் காலங்கள் 'தமிழக மக்களுக்கான பொற்காலங்கள்' என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும்.
    • சமீபத்தில் பிரதமர் மோடியை ரஷியாவுக்கு வருமாறு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கும், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு ரஷிய அதிபர் வினாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலகில் கடினமான சூழ்நிலை இருந்த போதிலும் ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். பன்முக இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும், பிராந்திய மற்றும் உலகளவில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர வேண்டும் என்று கூறினார். சமீபத்தில் பிரதமர் மோடியை ரஷியாவுக்கு வருமாறு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×