search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    புத்தாண்டில் இனிதான வாழ்வு நமதாகட்டும் (2024)
    X

    புத்தாண்டில் இனிதான வாழ்வு நமதாகட்டும் (2024)

    • உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.
    • கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும்.

    இப்புத்தாண்டில் இனிதான வாழ்வு நமது ஆகட்டும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றாலும் இன்றைய சூழலில் ஒருவர் எந்த அளவுக்கு முழுமையாக உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதே மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவித நோய்க்கும் ஆளாகாமல் இருக்கும் நல்ல ஆரோக்கியமே ஆனந்தமான வாழ்க்கையை நல்கும் எனலாம். எனவே அவ்வப்போது தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், சிறிய உடல் உபாதை என்றாலும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும், நல்ல மனநலத்துடன் மகிழ்வாக தினப்படி வாழ்வை அமைத்துக் கொள்வதும் புத்தாண்டை மேலும் இனிதாக்கும்.

    நம் வாழ்வில் நமக்கு கிடைத்திருக்கும் நம் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் நமது வணிக உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவிப்போம். இது நம் சூழலை மேம்படுத்தும்

    உணர்ச்சி மேலாண்மை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எந்த சூழலிலும் பதட்டப்படாமல், சினம் கொள்ளாமல், நிதானமாக செயல்படுவோம். நிரந்தர வெற்றியை நமதாக்குவோம்.

    இந்த புத்தாண்டில் நாம் அடைய விரும்பும் அனைத்து லட்சியங்களையும் அடைந்து விட்டதாக நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். இது நமது ஆழ்மனதின் அற்புத ஆற்றலின் மூலம் நிஜமாகவே நாம் விரும்பியவை நியாயமாக நமக்கு கிடைக்க வழி வகுக்கும்.

    இன்றைய உலகம் தகவல்களால் நிறைந்திருக்கிறது. தகவல்கள் எல்லா வகையிலும் நம்மை சூழ்ந்து நம் கவனத்தை ஈர்க்கின்றது. நமக்கு எது வேண்டிய தகவல் எது வேண்டாத தகவல் என்பதை அறிந்து நமது நேரம் விரயமாவதை தவிர்க்க வேண்டும். நேரம்தான் உண்மையான செல்வம் இதை சரியாக புரிந்து செயல்படுவோம்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது இந்த தலைமுறையில் மிகவும் குறைந்து விட்டது.இனி நேரடியாக அவ்வப்போது நண்பர்களோடு, உறவுகளோடு தொடர்பு கொண்டு உறவுகளை வளப்படுத்துவோம்.

    ஸ்மார்ட் வாட்ச்சும் எலக்ட்ரிக்கல் வாகனமும் வாழ்க்கையை பெரிய அளவிற்கு தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களை கற்போம். நம் வாழ்வின் மேம்பாட்டிற்கு தக்க வகையில் அதை பயன்படுத்துவோம்.

    நம் எல்லோர் முன்னும் வாய்ப்புகள் வரிசை கட்டி சென்று கொண்டிருக்கிறது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு வாழ்வை வளமாக்கிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. தளராது முயற்சி திட்டமிட்ட கடினமான உழைப்பு எப்போதுமே வெற்றியை நமதாக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஒரு செயலை செய்ய முடிவு செய்த பின்னர் அதில் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கக் கூடாது. நன்று என தெரிந்து விட்டால் அதை இன்றே செய்யும் குணம் வேண்டும். நேரத்தை விரயம் செய்வதை நிறுத்துவது தான் பலருக்கு செயல் திறனை மேம்படுத்தி வெற்றி தந்திருக்கிறது.

    நமக்கு எப்பொழுதும் ஆக்கபூர்வமான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். முடிந்தால் தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் 30 நிமிடம் ஒதுக்கி நாம் தினப்படி செய்த வேலைகளை பட்டியலிட்டு அவைகளில் இருக்கின்ற குறை நிறைகளை குறித்து வைத்துக்கொண்டு நாளைய நிகழ்ச்சிகளை இன்றைக்கு திட்டமிட வேண்டும். இது நேர மேலாண்மைக்கு பெரிதும் உதவும்.

    உங்களுடைய அனைத்து எண்ணங்களையும் யோசனைகளையும் பதிவு செய்யுங்கள். நீங்கள் ஒரு செயலை செய்யும் பொழுது ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஐந்து நிமிடம் ஓய்வெடுத்து பின் வேலையை தொடருங்கள். உங்கள் வேலையை சிதறடிக்க கூடிய அனைத்தையும் தெளிவாக ஒதுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மேஜை எப்பொழுதும் நீங்கள் என்ன வேலை செய்யப் போகிறீர்களோ அது தொடர்பான பொருட்கள் மட்டும் இருக்கட்டும். எக்கச்சக்கமான பொருட்களால் நிரப்பாதீர்கள்.

    ஒரு விஷயத்தை புதிதாக செய்யும் பொழுது அதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அப்போது ஒரு நிபுணர் போல செயல்படுங்கள். நிபுணர்கள் எப்பொழுதும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் பொழுது முழு கவனத்தை அதில் மட்டுமே செலுத்துவார்கள்.

    மின்னஞ்சலை பார்ப்பது வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளுக்கு பதில் போடுவது என்பதற்கு ஒரு நாளில் இரண்டு முறை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய்யுங்கள். புதிய பொருட்கள் வாங்கும் போது அது உங்களுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பலமுறை உங்களுக்குள்ளே நீங்களே கேள்வி எழுப்பு பின் முடிவுக்கு வாருங்கள்.

    சில நாட்கள் உங்களுக்கு மிக சிக்கலாகவும் மனசோர்வும் தந்தால் வேலை வலு மிகுதியாக இருந்தால் உங்களை நீங்களே புத்துணர்ச்சி பெற முயற்சி செய்யுங்கள்.

    கடந்தவைகள் எல்லாம் கடந்து போனதாகவே இருக்கட்டும். அவை பற்றிய வருத்தங்களும் குற்ற உணர்வுகளும், சுமையாக நமக்கு இருக்க வேண்டாம். அனைத்தையும் விட்டொழிப்போம். வருங்காலம் எப்போதும் பிரகாசமாகவே இருக்கிறது. எனவே அதைப் பற்றிய பயம் வேண்டாம். நிகழ்காலத்தை நிஜமாகவே முழுமையாக நாம் அனுபவித்து பயன்படுத்திக் கொண்டால் எப்போதும் மகிழ்வான வாழ்வே நமக்கு சொந்தமாய் இருக்கும்.

    Next Story
    ×