search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
    X

    பழனி கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

    • புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
    • சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரும்பாலான மக்கள் இறைவழிபாட்டுடன் புத்தாண்டை தொடங்குவது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

    புத்தாண்டை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கால சந்தி, சிறுகாலசந்தி, விழா பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகப் பெருமான் அருள்பாலித்தார்.

    புத்தாண்டு தினத்தில் காலையில் முருகப் பெருமானை தரிசிக்க முதல் நாளே ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர். அவர்கள் அதிகாலையில் படிப்பாதை, யானைப்பாதை வழியாக கொட்டும் பனியிலும் நடந்து சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கடந்த சில நாட்களாகவே பழனியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாட்டு பாடியும் குழுவாக வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவில், ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமியம்மன், வெள்ளை விநாயகர், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வரும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×