search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி சூடு"

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
    • வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.

    தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்

    வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர்.
    • கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.


    அமெரிக்காவின் நியூஜெர்சியில் கொப்போலா டிரைவ் ஆப் நியூ டூர்ஹாம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் இந்தியாவின் குஜராத்தை சேர்ந்த திலீப்குமார் பிரம்மபட் (72), மனைவி பிந்து, மகன் யஷ்குமார் (38) என்பது தெரிய வந்தது. இவர்களை உறவினர் ஓம் பிரம்மபட் (23) சுட்டு கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மாணவரான ஓம்பிரம்மபட், திலீப்குமார்-பிந்து தம்பதியின் பேரன் ஆவார். அவர் காண்டோ பகுதியில் வசித்து வந்தார். பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்து தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். அவர் எதற்காக 3 பேரை கொன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஓம்பிரம்மபட், கைத்துப்பாக்கி ஆன்லைன் மூலம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    • அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.
    • போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.

    அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல ஆஸ்பத்திரியில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்தபடி ஓடினர். அவர்கள் அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். அவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
    • போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன்மலை வேலம்பட்டி நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராஜூ(வயது 33) விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு வேலம்பட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில், ராஜூ அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று ஆடுகளுக்கு தழைகளை சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதுடன் ராஜூவின் இடதுகால் முட்டி மற்றும் வலது கால் தொடை பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில் காயமடைந்த ராஜூ மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த அவர், தனது உறவினர் மகன் ராமன் என்பவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனடியாக ராமன் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவை மீட்டு, காரில் ஏற்றிச்சென்று வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக காரிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் கரியகோவில் போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், ராஜூவை துப்பாக்கியில் சுட்ட நபரை வனப்பகுதியில் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நீலியாம்பட்டி செல்லும் சாலையில் சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

    போலீசார் நெருங்கி வருவதை கண்ட அந்த நபர் யாரும் பக்கத்தில் வராதீர்கள். வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டினார். மேலும் கையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

    உடனே அந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து போலீஸ் மீது வீசினார். அது தொட்டியம் காவல் நிலைய போலீஸ்காரர் ராஜேஷ் குமார் மீது விழுந்து அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பின்னர் பார்த்தபோது அது வெடிகுண்டு அல்ல பெரிய பாறாங்கல் என்பது தெரியவந்தது.

    அதைத் தொடர்ந்து அந்த நபர் துப்பாக்கியை காட்டி சுட முயற்சி செய்தார். உடனே சுதாகரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழாக குறி பார்த்து சுட்டார்.

    இதில் அவரது கால் மூட்டில் 2 குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள அலெக்ஸ் என்கிற அலெக்சாண்டர் என்பது தெரியவந்தது. பின்னர் காயம்பட்ட ரவுடி அலெக்ஸ் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பு டன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிடிபட்ட ரவுடி அலெக்ஸ் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவர் மீது 2 கொலை வழக்குகள் மற்றும் கடத்தல் வழிப்பறி, கொள்ளை உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். கடைசியாக மணிகண்டத்தில் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்தார்.

    இந்த வழக்கில் அலெக்ஸை மணிகண்டம் போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் தொட்டியத்தில் காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த அலெக்சை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.அவர் மீதான வழக்குகள் தற்போது தூசு தட்டப்பட்டு வருகிறது. ரவுடி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சமீப காலமாக காவல்துறையினர் ரவுடிகளை அவர்களின் முட்டிக்கு கீழ் சுட்டு பிடிப்பது ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரள மாநில வனப்பகுதிகளில் வனத்துைறயினர் மற்றும் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.
    • மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் இருக்கும் வனத்துறை அலுவலகம் மீது கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கேரள மாநில வனப்பகுதிகளில் வனத்துைறயினர் மற்றும் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

    இந்நிலையில் கண்ணூர் ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து தப்பி வந்தனர். மாவோயிஸ்டுகள் தாக்குதலில் இருந்து தப்ப ஓடிய போது வன காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதல் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
    • நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.

    இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
    • ராபர்ட் கார்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    லூயிஸ்டன்:

    அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் கடந்த 25-ந்தேதி ராபர்ட் கார்டு என்பவர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

    விளையாட்டு விடுதி, ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 22 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    முன்னாள் ராணுவ வீரரான ராபர்ட் கார்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது வீட்டை சுற்றி வளைத்து தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து லூயிஸ்டன் நகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ராபர்ட் கார்டிடம் துப்பாக்கி இருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் போலீசார் அறிவுறுத்தினர். கடந்த 2 நாட்களாக போலீசார், தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் ராபர்ட் கார்டு பிணமாக மீட்கப்பட் டார்.

    அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயம் இருந்தது. ராபர்ட் கார்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    லூயிஸ்டனின் தென்கிழக்கே உள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சி அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் ராபர்ட் கார்டு உடல் கண்டெடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் லூயிஸ்டன் நகரில் 2 நாட்களாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கனடாவின் வடக்கே உள்ள ஒன்டாரியோ நகரில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சாலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அதே போல் வீடுகளில் 45 வயது மதிக்கத்தக்க நபர், 6 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்து கிடந்தனர். மேலும் 44 வயது நபர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். 5 பேர் இறந்த இந்த உயிரிழப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன.
    • படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    பெரியபாளைம் அருகே உள்ள கன்னிகைபேர் காலனி பகுதியை சேர்ந்தவர் தணிகா என்கிற தணிகாசலம்(வயது36). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டு சித்தாமூர் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக தணிகாசலம் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வரமுடியாத வகையில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக இருந்த தணிகாவை போலீசார் தேடி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ரவுடி தணிகா உள்பட தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் உத்தரவின்படி செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பிரதாப் ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை எஸ்.ஆர்.எம்.சி. ஆஸ்பத்திரி அருகே பதுங்கி இருந்த ரவுடி தணிகாவை தனிப்டை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் மேல் விசாரணைக்காக சித்தாமூர் போலீஸ்நிலையத்துக்கு போலீசார் அவரை வாகனத்தில் அழைத்து சென்றனர்.

    செங்கல்பட்டு அருகே லாரல் மால் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ரவுடி தணிகா திடீரென பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை தாக்கி விட்டு ஓடும் வாகனத்தில் இருந்து கீழே குதித்து இருட்டான பகுதிக்கு தப்பி ஓடமுயன்றார்.

    அவரை போலீசார் விரட்டி சென்று பிடிக்க முயன்றபோது தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் புகழ் தனது கைத்துப்பாக்கியால் 2 ரவுண்டு ரவுடி தணிகாவை சுட்டார். இதில் வலது கால் முழங்கால் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்தார்.

    அவரை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு கை, காலில் பலத்த காயத்துடன் ரவுடி தணிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி தணிகா மீது மொத்தம் 17 வழக்குகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி மாவ ட்டங்களில் வெடிபொருட்கள் பயன்படுத்தி 8 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் ஆயுதம் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்திய ஒரு கலவர வழக்கும், 2 கொள்ளை வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழவரம் அருகே 2 ரவுடிகள் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டு அருகே ரவுடி தணிகா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
    • துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பல்கலைக் கழகத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் நிலைமை குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டனர்.

    • போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார்.
    • யாசர் நசீர் கைது செய்யப்பட்டார்.

    ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினர், ஒரு நபர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியதை கவனித்தனர். சரண் அடையுமாறு உத்தரவிட்டனர்.

    ஆனால் அந்த நபர், எல்லை கட்டுப்பாட்டு கோடு நோக்கி ஓடத்தொடங்கினர். அவரை நோக்கி ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார்.

    அவர் பெயர் யாசர் நசீர் என்றும், உள்ளூரை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போதைப்பொருள் பார்சலை சேகரிக்க வந்ததாக தெரிவித்தார். கடத்துவதற்காக அவர் வைத்திருந்த ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. யாசர் நசீர் கைது செய்யப்பட்டார். குண்டடிபட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ×