என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online Gambling"

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் கடைவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் 2.0 என்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் மாநில இணை செயலாளர் புருஷோத்தமன், கிரீஸ் சரவணன், மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்களை கடுமையாக பாதிக்கின்ற வகையில் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் கட்டண உயர்வால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். சாதாரணமாக இருநூறு ரூபாய் கட்டிய பொதுமக்கள் இன்று 500 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால், கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்காது. எனவே தமிழக அரசு மின் கட்டணத்தை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்த வேண்டும்.நீர் வீணாகும்போது காவிரியில் ஏன் தடுப்பணைகளை கட்டவில்லை. தடுப்ணைகளை கட்டி விட்டால் மணல் திருட முடியாது. இதனாலே தடுப்பணைகளை கட்டவில்லை.

    அவினாசி அத்திக்கடவு திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் திட்டத்திற்காக மக்கள் போராட்டம் நடத்திய போது இரண்டு முறை வந்து நானும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டேன். இப்படி நல்ல விஷயங்களுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும்.மக்கள் வளர்ச்சியை மட்டுமே வைத்து பா.ம.க. செயல்படகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பல்லடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. உதாரணமாக மத்திய அரசின் கல்வி நிலையங்களில் தகவல் தொடர்பு மொழியாக உள்ள ஆங்கிலத்திற்கு பதிலாக இனி இந்தியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனக்கு தாய் மொழி தமிழ், நான் விருப்பப்பட்டு மற்ற மொழிகளை கற்கலாம். ஆனால் நீ இந்தி தான் கற்க வேண்டும் என சொல்வது போல உள்ளது.

    மத்திய அரசின் இந்த செயல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வானொலி நிலையத்தில், தமிழ் நிகழ்ச்சிகளை 4 மணி நேரம் ரத்து செய்துவிட்டு அதில் இந்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறார்கள். அதை எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? இப்படி இந்தி திணிப்பு செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முறையாகப்பின் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தினால் இதுவரை 80 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மிகக் கடுமையான நடவடிக்கை அவசியம். அதேபோல போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் கடுமையாக பின்பற்ற வேண்டும். தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடுநிலையோடு நடக்க வேண்டும். அது இ.பி.எஸ். பிரச்சினையாக இருந்தாலும் சரி ஓ.பி.எஸ்.பிரச்சினையாக இருந்தாலும் சரி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது
    • சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என தகவல்

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. உயிர்ப்பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய சட்டம் இயற்றவேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, வல்லுநர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டு, புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

    இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், வரும் 17ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

    • கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33).

    இவர் கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைகாரன் கோவிலில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதமாக கிருஷ்ணமூர்த்தி சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீஸ் விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி அதில் ரூ.5 லட்சம் வரை பணத்தை இழந்து விட்டதாகவும், இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    எனினும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மேலும், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    வரும் 29-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் சீர் செய்யப்படும். தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

    பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனை பெற்று அவசர சட்டம் தயாரிக்கபடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    • தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.
    • புதிய சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணை அறிக்கையை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தது.

    இந்த அறிக்கையை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் இந்த அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுதவிர தமிழகத்தின் நலன், பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. எனவே சட்டசபை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றலாம் என்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

    இதனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் உடனடியாக அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் மூலம் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். பல பேர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி விடுவதால் கடன் வாங்கி விளையாடும் அளவுக்கு சென்று விடுகின்றனர்.

    ஒரு கட்டத்தில் பணத்தை இழந்து மன விரக்தியில் தற்கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர்.

    இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இந்த சட்டத்தை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம் சட்டத்தில் போதிய ஷரத்துகள் இல்லை என்று கூறி சட்டத்தை ரத்து செய்துவிட்டது.

    இதனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இப்போதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலுவான சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அதை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருந்தார். அந்த குழுவும் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்து விட்டது.

    அதோடு பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் அரசு கருத்து கேட்டது. ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு பிரதிநிதிகளும் இதில் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளதாக தெரிகிறது.

    • இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
    • மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின், இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான சட்டம் இயற்ற வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

    தற்கொலைக்குமுன் தம்பி எழுதிய உருக்கமான கடிதம் நெஞ்சை உலுக்கி விட்டது. தொடர்ந்து உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

    அதன்பின், நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றபோதிலும், அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடை செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி ஓராண்டு கடந்தும் இதுவரை தமிழ்நாடு அரசு தடைச்சட்டம் இயற்ற மறுப்பது ஏன்?

    கடந்த ஜூன் மாதம் மணலியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தங்கை பவானி, தற்போது ராசிபுரத்தை தம்பி சுரேஷ் என தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த 15 மாதங்களில் இதுவரை 28 இளைஞர்கள் பலியாகி உள்ளனர்.

    எனவே, மக்களின் நலனில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின், இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான சட்டம் இயற்ற வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆட்சியாளர்கள், சூதாட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து பல கோடி ரூபாய்களை கமிஷனாக பெற்று வருகின்றனர்.
    • பல உயிர்களை இழந்த பின்னர் தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருமா?

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது.

    ஆன்லைன் ரம்மி தடை தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் முறையாக, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடாமல் இருந்ததால், 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்றதால், 'ஜாம் ஜாம்' என்று 'ஆன்லைன்' சூதாட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது.

    இதன் காரணமாக, பணம் இழந்தவர்களின் தற்கொலையும் தொடர்கிறது. 'ஆன்லைன்' ரம்மி தடை சட்டத்தை எப்படி கொண்டு வரலாம் என்று ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை அளித்த பின்னரும், இன்னும் தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.

    'ஆன்லைன்' ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தவுடன் 'ஆன்லைன்' ரம்மி போன்ற 'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு உடனடியாக தடை சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலமுறை நான் வலியுறுத்தினேன்.

    தி.மு.க. அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், 'ஆன்லைன்' ரம்மி போன்ற விளையாட்டு உரிமையாளர்கள் அதிக அளவில் தமிழக மக்களிடமிருந்து பணம் ஈட்டுவதும், பணத்தை இந்த தமிழக இளைஞர்கள், பண நஷ்டத்தை தாங்கமுடியாமல் தங்களது இன்னுயிரை இழப்பதும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

    ஏற்கனவே 7.5.2022 அன்று 'ஆன்லைன்' சூதாட்டத்தால் பணம் இழந்த அம்பத்தூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கியால் சுட்டு தற்கொலை அந்த சமயத்தில் போலீஸ் டி.ஜி.பி. 'ஆன்லைன்' ரம்மி போன்ற விளையாட்டுகளை யாரும் விளையாடவேண்டாம் என்று அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று கோவை அரசு பொருட்காட்சியில் பணியில் இருந்த காவல்துறை காவலர் காளிமுத்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

    'ஆன்லைன்' ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்த காவலர் காளிமுத்து மேலும் கடன் வாங்கி விளையாடியதாகவும், ஒரு கட்டத்தில் கடன் பிரச்சினை அதிகமான காரணத்தால் ஏற்பட்ட கடும் மன அழுத்தத்தினால் அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களை திரட்டி போராட்டம் 'ஆன்லைன்' சூதாட்டத்தில் பல்லாயிரம் கோடிகள் தினசரி புரள்கின்றன.

    ஆட்சியாளர்கள், சூதாட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு நாள்தோறும் பல கோடி ரூபாய்களை கமிஷனாக பெற்றுக்கொண்டு, 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்டத்தை இயற்றாமல் இருக்கின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'ஆன்லைன்' சூதாட்டம் முதல் அனைத்து நாசகார செயல்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்கவேண்டும்.

    இல்லையென்றால் அப்பாவி மக்களின் உயிரை, உடமைகளை காக்கவும், தமிழக அரசை சட்ட ரீதியில் அகற்றவும் அ.தி.மு.க. மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை பிறப்பிக்க தடையாக இருப்பது எது? என அன்புமணி ராமதாஸ் கேள்வி
    • ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும்; லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்து கடனாளியான ஆயுதப்படை காளிமுத்து என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது பலி காளிமுத்து; கடந்த 11 மாதங்களில் 26-ஆவது உயிரிழப்பு. குடும்பங்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு இன்னும் எத்தனை அப்பாவிகளின் உயிர்களைத் தான் தமிழக அரசு பலி கொடுக்கப் போகிறது?

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, வல்லுனர் குழு அறிக்கை அளித்து 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்று வரை ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது எது?

    ஆன்லைன் சூதாட்டம் தமிழகத்தை சீரழித்து விடும்; லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விடும். அத்தகைய அவலநிலை ஏற்படாமல் தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை இனியும் தாமதிக்காமல் பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் 3-வது உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் தகவல்
    • ஆன்லைன் சூதாட்டத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைப்பு

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் என்ற வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது!

    ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை!

    ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
    • ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:

    ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபலப்படுத்தக் கூடாது.

    பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது.

    இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டம் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிதிச்சிக்கல்களையும் உருவாக்குகிறது.

    ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது.

    வலைதளங்கள், இணைய ஊடகங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது.

    • ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது.
    • பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

    இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ. 10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வருவாய் ரூ.38,500 கோடியாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவின் ஒட்டு மொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது. அப்படியானால், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.3,080 கோடி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படும்.

    அடுத்த இரு ஆண்டுகளில் இது ரூ.7,700 கோடியாக அதிகரிக்கும். இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் மிக அதிக பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடாகத் தான் இருக்கும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல.

    அவை வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டால் தான் அதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அத்தகைய சட்டத்தை உருவாக்கி அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று தான் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    ஆனால், இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து உறுதியான பதில் வராத நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்க உள்ளேன்.

    பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×