search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்- அன்புமணி தலைமையில் நடக்கிறது
    X

    ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்- அன்புமணி தலைமையில் நடக்கிறது

    • ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது.
    • பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற்றப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

    இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் கடந்த 2021-ம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ. 10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வருவாய் ரூ.38,500 கோடியாக உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவின் ஒட்டு மொத்த ஆன்லைன் சூதாட்ட வருமானத்தில் குறைந்தது 20 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது. அப்படியானால், நடப்பாண்டில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.3,080 கோடி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களால் பறிக்கப்படும்.

    அடுத்த இரு ஆண்டுகளில் இது ரூ.7,700 கோடியாக அதிகரிக்கும். இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டத்தால் மிக அதிக பணத்தை இழக்கும் மாநிலம் தமிழ்நாடாகத் தான் இருக்கும் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் திறன் சார்ந்தவை அல்ல.

    அவை வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டால் தான் அதை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளும். அத்தகைய சட்டத்தை உருவாக்கி அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று தான் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

    ஆனால், இது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து உறுதியான பதில் வராத நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அவசர சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் வரும் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்க உள்ளேன்.

    பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகள், துணை அமைப்புகள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×