search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் குழாய்"

    • பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியின் ராஜ்கர் பகுதியில் இன்று குடிநீர் வாரியத்தின் பைப்லைன் திடீரென உடைந்தது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி, அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக சென்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
    • நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகு பிரசாத்,பா.ஜ.க.மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது.
    • செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் ஏரியில் மழை நீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து சென்னை நகரில் குடி நீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும் 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகருக்கு வினியோகிக்கப்படுகிறது. எனினும் இது குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.

    இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை நகருக்கு கூடுதலாக தண்ணீர் வினியோகிக்கும் வகையில் 2-வது ராட்சத் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இது கோயம்பேடு வரை 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த 2-வது ராட்சத குடிநீர் குழாய், தேசிய நெடுஞ்சாலை எண்-4, பூந்தமல்லி புறவழிச் சாலையில் தரைக்கு அடியில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படுகிறது. சுமார் 6 மீட்டர் விட்டம் உடைய இந்த ராட்சத குழாய் பூமிக்கு அடியில் 6 மீட்டர் ஆழத்தில் அமைகிறது.

    இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அமைக்கப்படும் ராட்சத குடிநீர் குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை நகரில் கூடுதல் தண்ணீர் வழங்குவதற்காக செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால் அந்த குழாய் அமைக்கும் பணி நேரடியாக எடுத்து வர முடியாது.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த பணி நடைபெற வில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் 1.7 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக புது குழாய் அமைப்பதற்காக ரூ.7.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணி விரைவில் முடிவடைந்ததுடன் சென்னைக்கு கூடுதலாக 530 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு மெட்ரோ வாட்டர் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் செயல் உறுப்பினர் ராஜகோபால் சங்கரா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 2-வது ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிந்து உள்ளது. இன்னும் சில மாதங்களில் மீதி உள்ள பணியும் முடிந்து விடும் என்று தெரிகிறது.

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் 40ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
    • திருமணம் போன்ற விசேஷ நாட்களில் வாகன எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் இடங்களில், ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு விடுகிறது. குடிநீர் குழாய் இணைப்புகள் உடனடியாக சரி செய்யப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் பஸ் நிலையம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் அதனை சரி செய்ய குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகின்றது.ஆனால் இன்னும் குழியை சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன அந்தப்பகுதி வளைவான பகுதி என்பதால் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே குழாய் உடைப்பு பணிகளை விரைவாக செய்யவேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

    கொளத்தூர்:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் 2.5 மீட்டர் சுற்றளவு கொண்ட ராட்சத குழாய் மூலம் மாதவரம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை பகுதிகளுக்கும் ரெட்டேரி வழியாக அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரெட்டேரி அருகே செல்லும் இந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

    அதில் இருந்து வெளியேறி தண்ணீர் சுமார் 25 அடி உயரத்திற்கு அருவி போல் பீய்ச்சி அடித்து வெளியேறியது.

    இந்த தண்ணீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அருவிபோல் வெளியேறிய தண்ணீர் முன்பு நின்றபடி தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

    குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவது பற்றி அறிந்ததும் திரு.வி.க. நகர் மண்டல பொறுப்பு பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குடிநீர் குழாயில் உள்ள முக்கிய வால்வை அடைத்தனர். இதனால் உடைந்த பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது குறைந்தது.

    எனினும் ஏற்கனவே குழாயில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் வெளியேறியது. சுமார் 3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

    இதைத்தெடர்ந்து இரவு 11 மணியளவில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் பின்னர் தண்ணீர் வெளியேறுவது முழுவதும் நின்றது. இதையடுத்து வழக்கம்போல் போல் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ரெட்டேரி பகுதியில் கால்வாய் நீர் வெளியேற பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையால் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி தவறுதலாக குழாய் மீது இடித்ததால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. தண்ணீர் வெளியேறுவது கண்ட லாரி டிரைவர் பதட்டத்தில் லாரியை அங்கிருந்து ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் ரெட்டேரி பகுதியில் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • பவானி ஆற்றில் இருந்து சிறுமுகை வழியாக ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
    • ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமே சேதம் அடைந்தது.

    அவிநாசி :

    மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி, மங்கலம் மற்றும் திருப்பூர் குடிநீர் தேவைக்காக 4-வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்றில் இருந்து சிறுமுகை வழியாக ராட்சத குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை குடிநீர் தேவைக்காக வழக்கம் போல தண்ணீர் வால்வு திறந்து விடப்பட்டது. குடிநீரின் அழுத்தம் அதிகமாக இருந்த காரணத்தினால் அவிநாசி- மங்கலம் சாலை ,வஞ்சிபாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீறிப்பாய்ந்து குடிநீர் வெளியேறியது.

    இதன் காரணமாக குழாய் பதிக்கப்பட்டு இருந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு, ரோட்டின் ஒரு பகுதி முழுவதுமே சேதம் அடைந்தது. மேலும் அந்த இடத்தில் சாலை சேதமடைந்ததுடன் பள்ளமும் பெரிதாக ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து அவிநாசி கருணை பாளையம் பிரிவு அருகே உள்ள ராட்சத வால்வு மற்றும் அதன் அருகே உள்ள வால்வு உடனடியாக திறக்கப்பட்டு தண்ணீரின் வேகத்தை குறைத்தனர். இதன் காரணமாக நீரின் அளவு குறைய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சேதமடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.  

    • போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யக்கோரி பா.ஜ,.க. சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாரிடம், ராயபுரம் மண்டல் பா.ஜ.க. தலைவா் பூபதி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 27 -வது வாா்டு சுப்புராயா் கவுண்டா் சாலையில் கணேசபுரம் 4 -வது வீதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பாக முடிவடைந்தன. இந்தப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது வரையில் மூடப்படவில்லை. மேலும், குழாய்கள் முறையாக ஒட்டப்படாததால் தண்ணீா் கசிந்து சாலைகளில் வழிந்தோடுவதால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    ஆகவே குடிநீா் குழாய் பதிக்கும்போது ஏற்பட்ட குழாய் உடைப்பை சரிசெய்வதுடன், தோண்டப்பட்ட குழிகளையும் மூட வேண்டும். அதே போல ராஜீவ் காந்தி நகா் 5 -வது வீதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குச்சி மூலம் முட்டு கொடுத்து குடிநீர் பிடிக்கும் அவலம் நடந்து வருகிறது.
    • பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பாப்பிரெட்டிபட்டி, 

    தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் புதியதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், குடிநீர் குழாய் நிற்பதற்கு குச்சி மூலம் முட்டு கொடுத்து குடிநீர் பிடிக்கும் அவலம் நடந்து வருகிறது.

    பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடி பேருந்து நிலையம் எதிரே உள்ள மாதா கோவில் தெரு, வினோபாஜி தெரு போன்ற பகுதிகளில் பட்டியல் இன மக்கள் பெருமளவு வாழ்ந்து வருகின்றனர்.

    மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், எனவே குடிநீர் குழாய்கள் புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதை அடுத்து பொ.மல்லாபுரம் பேரூராட்சி சார்பில் பல லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய்கள் மாதா கோவில் தெரு, வினோபாஜி தெரு, காலனி பகுதி போன்ற இடங்களில் அமைக்கும் பணி தொடங்கியது.

    சில இடங்களில் இரும்பு குழாய்கள் மூலமாகவும், சில இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகள் மூலமாகவும், குடிநீர் வழங்கும் திட்டம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குடிநீர் குழாய்கள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாலும், குடிநீர் பைப் நிற்பதற்கு கான்கிரீட் தூண் கட்டாததாலும் குடிநீர் குழாய் உடைந்து விடும் சூழல் நிலவுகின்றது.

    தண்ணீர் பிடிக்கும் போது பெரும் சிரமத்திற்கு ஆளாகிய பொதுமக்கள் குடிநீர் குழாய் கீழே விழுந்து விடாமல் உடன் குச்சிகளை நட்டு கட்டி வைத்து குடி தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் தரமற்ற முறையில் மெல்லியரக பி.வி.சி. பைப்புகளை அமைத்துள்ளதால் குடிநீர் பிடிக்க முடிவதில்லை, குடிநீரும் போதிய அளவில் வராமல் சொட்டு நீர் பாசனம் போல வருகிறது.

    எனவே எங்களுக்கு தரமான முறையில் குடிநீர் குழாய்கள் அமைத்து குழாய் பகுதியில் கான்கிரீட் தூண்களை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனவும், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதிகளில் பெரும் பள்ளங்கள் இருப்பதால் அவைகளை மூட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குடிநீர் தேவைக்காக பல திட்டங்களை வகுத்து அமைத்துக் கொடுத்தாலும், இது போன்ற தரமற்ற பணிகளால் பொதுமக்களிடம் அவப்பெயர் ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • வீட்டின் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொக்லைன் வாகனம் கொண்டு பள்ளம் தோண்டியுள்ளனர்.
    • அப்போது, தனது வீட்டருகே பள்ளம் தோண்ட வேண்டாம் என்று ஈஸ்வரி தடுத்துள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவரது மனைவி ஈஸ்வரி (75). இந்த தம்பதிக்கு மாசிலாமணி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    மாசிலாமணிக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், வீட்டின் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொக்லைன் வாகனம் கொண்டு பள்ளம் தோண்டியுள்ளனர்.

    அப்போது, தனது வீட்டருகே பள்ளம் தோண்ட வேண்டாம் என்று ஈஸ்வரி தடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த அவரது மகன் மாசிலாமணி, பள்ளம் தோண்டுவதை தடுக்கிறாயா என்று கூறி, பெற்ற தாயை திட்டி, அடித்து தாக்கியுள் ளார். இதில், காயமடைந்த ஈஸ்வரி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார், மாசிலாமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஈஸ்வரி கூறும் போது பள்ளம் தொண்ட வேண்டாம் என்று கூறியதும் ஓடிவந்து தன்னை தாய் என்றும் பாராமல் அடித்து காயப்படுத்தினார். எனது வீட்டுக்காரர் பெரியசாமி பெயரில் உள்ள நிலத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறி, தங்களை தொடர்ந்து தொல்லை செய்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார்.

    • ஆங்காங்கே பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    குண்டடம் :

    காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் காவிரியாற்றிலிருந்து முத்தூா், காங்கயம், ஊதியூா் வழியாக குழாய் அமைத்து குண்டடம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரையிலான சாலையை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன், ஆங்காங்கே பாலப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ருத்ராவதியில் பெரிய அளவிலான பாலம் அமைக்கும் பணியின்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாய் உடைந்துவிட்டது.

    பெரியபாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் குடிநீா்க் குழாய் இணைப்பை சரிசெய்ய முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மேட்டுக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து (ஜம்ப்) கடந்த ஜூன் 16 ந் தேதி முதல் வெருவேடம்பாளையம், முத்தியம்பட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீா் விநியோகம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாகத் தடைபட்டுள்ளது.

    இது குறித்து குண்டடம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: - உள்ளூா் ஊராட்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்படும் ஆழ்துளைக் கிணற்று நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதனால் குடிக்கவும், சமையல் செய்யவும் இந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம்.எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து காவிரி குடிநீா் விநியோகம் செய்ய குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    • ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பேரூராட்சியில் ஹெலன், ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்தது. இதன் காரணமாக பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் குடிநீர் திட்ட தடுப்பணைகளிலும் சேறும், சகதியுமான தண்ணீர் அடித்து வரப்பட்டது. குழாய்களில் உடைப்பு இதன் காரணமாக ராட்சத குழாய்களில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டது.

    தொடர்ந்து ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் பரவலாக குறைந்து விட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி தலைமையில் குடிநீர் ஆய்வாளர் ரமேஷ், கவுன்சிலர் வெண்ணிலா உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நிலத்தை தோண்டினர்.

    சீரமைப்பு பணி தொடர்ந்து ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டது. இதேபோல் நகராட்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×