search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க."

    • தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து பா.ஜ.க.-வில் இணைகின்றனர்
    • டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைகின்றனர்

    மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தபாஸ் ராய். பல்வேறு மோசடிகள்  சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 12 -ல் இவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.

    அப்போது திரிணாமுல் கட்சி சார்பில் அவருக்கு ஆதரவாக யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை தபாஸ் ராய் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராடப்போவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நேற்று அவர் பா.ஜ.க.-வில் சேர்ந்தார். கடினமான சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரசை (டிஎம்சி) விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

    இது குறித்து திரிணாமுல் கட்சி தலைவர் சாந்தனு சென் கூறியதாவது:-

    தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து தபாஸ் ராய் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார். பதவி ஆசைக்காக கட்சியை விட்டு விலகிய தபாஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    அவருக்கு அனைத்து வித பதவிகளையும் திரிணாமுல் கட்சி கொடுத்தது. ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். அவருக்கு கொள்கை, சித்தாந்தம் கிடையாது. அமலாக்கத் துறை (ED)சோதனைக்கு பயந்துதான் பா.ஜ.க.-விடம் சரணடைந்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான அசோக் சவான் சமீபத்தில் பா.ஜ.க.-வில் இணைந்தார்.குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அர்ஜுன் மோத்வாடியா நேற்று முன்தினம் பா.ஜ.க.-வில் இணைந்தார்.

    கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர்.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ.-க்கு பயந்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன
    • எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை என்றார் அர்ஜுன் மோத்வாடியா

    வரும் ஏப்ரல்-மே மாத காலகட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    2014லிருந்து 2 முறை மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க., 3-ஆம் முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

    பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சியினருடன் கூட்டணி அமைத்து, வெல்வதற்கு வியூகம் அமைத்து வருகிறது.

    இந்நிலையில், இன்று, குஜராத் மாநில போர்பந்தர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அர்ஜுன் மோத்வாடியா (Arjun Modhwadia), குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சிஆர் பாட்டில் (CR Paatil) முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.


    தனது முடிவு குறித்து அர்ஜுன் மோத்வாடியா தெரிவித்ததாவது:

    காந்திஜி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற நல்ல தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வடிவில் நாட்டிற்கு கிடைத்துள்ளனர்.

    வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல பிரதமர் மோடியின் கனவை நனவாக்க பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.

    எனக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை.

    மக்களுடன் காங்கிரசிற்கு இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து விட்டது. உ.பி. மாநில அயோத்யாவில் நடைபெற்ற பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள தவறி விட்டது.

    இவ்வாறு மோத்வாடியா தெரிவித்தார்.

    முன்னதாக, "கனத்த இதயத்துடன்" காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், தான் விலகுவதாக அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கடிதம் எழுதினார்.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் அர்ஜுன் மோத்வாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது
    • எதிரணியினர் காட்டும் வேகத்தை பொறுத்தே பா.ஜ.க.வின் வீழ்ச்சி இருக்கும் என்றார் தரூர்

    இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    கூட்டணி அமைப்பதில் இரு அணியினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    இரு அணியினரின் வெற்றி வாய்ப்பு குறித்து அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பலர் விவாதித்து வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தனித்து 370 இடங்களுக்கு அதிகமாக வெல்லும் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    2019ல் பா.ஜ.க. கண்ட வெற்றியை மீண்டும் அக்கட்சி பெறுவது கடினம்.

    2019 தேர்தலிலேயே பல மாநிலங்களில் அக்கட்சி வெல்லக் கூடிய அனைத்து இடங்களையும் கைப்பற்றி விட்டது.

    இனி ஏற்றம் இருக்காது; இறங்குமுகம்தான். அக்கட்சியின் வீழ்ச்சி எதிர் அணியினர் காட்ட போகும் வேகத்தை பொறுத்தே இருக்கும்.

    2019ல் அரியானா, ராஜஸ்தான், ம.பி., கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிகமாக வென்றது. அங்கெல்லாம் அவர்கள் அடைய வேண்டிய உச்சத்தை அடைந்து விட்டார்கள்.

    இதே எண்ணிக்கையில் அவர்களால் மீண்டும் வெற்றி பெற இயலாது.

    இம்முறை பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கலாமே தவிர, தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை.

    வெற்றி பெற்று விடுவோம் எனும் பா.ஜ.க.வின் இறுமாப்பே எதிர் அணியினருக்கு பலம்.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

    • புதிய தேர்தலை நடத்தும் கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
    • ஒரு ரிடர்னிங் ஆஃபீசர் இவ்வாறு நடக்கலாமா என நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்

    கடந்த ஜனவரி 30 அன்று சண்டிகர் நகரசபை தேர்தல் நடந்தது.

    அந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஒருவரையொருவர் கண்டித்து போராட்டங்களை நடத்தினர்.

    பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 ஓட்டுகள் பெற்றதாகவும், ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் குல்தீப் சிங்கிற்கு ஆதரவாக 20 கவுன்சிலர்கள் இருந்த போதும் 12 வோட்டுகளே பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

    20 கவுன்சிலர்கள் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது.

    முறைகேடுகளை சுட்டிக்காட்டி புதிய தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை பஞ்சாப்/அரியானா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் குல்தீப் சிங் வழக்கு தாக்கல் செய்தார். அவர் சார்பில் பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

    இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3-பேர் கொண்ட அமர்வு பெஞ்ச் அளித்த உத்தரவில், தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் (Anil Masih) கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

    அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

    வாக்கு சீட்டை தேர்தல் கண்காணிப்பாளர் முறைகேடாக அழித்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது. அவர் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளார். அவர் ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டுள்ளார். ஒரு "ரிடர்னிங் ஆஃபீசர்" (Returning Officer) இவ்வாறு நடந்து கொள்ளலாமா?

    உச்ச நீதிமன்றம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. ஜனநாயக படுகொலை நடைபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

    ஜனநாயகத்தின் மாசற்ற தூய்மைதான் இந்த நாட்டை வழிநடத்தும் சக்தி.

    இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று, உச்ச நீதிமன்றம் பஞ்சாப்/அரியானா உயர் நீதிமன்ற பதிவாளர் மூலமாக சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.

    மேலும், இந்த உத்தரவில் வரும் பிப்ரவரி 7 அன்று நடைபெற இருந்த சண்டிகர் உள்ளாட்சி அமைப்பின் கூட்டங்களையும் ஒத்தி வைக்க உத்தரவிட்டது.

    • ஆடம்பரமாக ரூ.250 கோடி செலவில் சவுரப் திருமணம் நடைபெற்றது
    • மாநிலத்தை ஏடிஎம்மாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் என்கிறார் ஷெஹ்சத்

    இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி (Mahadev Satta App)  எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று பிரபலமாக உள்ளது.

    பெரும்பாலானோர்கள் தங்கள் பணத்தை செலுத்தி சூதாடி வந்ததால், தினந்தோறும் இச்செயலியை நிறுவியவர்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக கூறப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்கு சொந்தமானது மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி.

    ரூ.250 கோடி செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுரப் ஆடம்பரமாக செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு அவர் இந்திய அமலாக்க துறையின் விசாரணை வளையத்தில் வந்தார். அத்துறை நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இந்நிலையில், கடந்த 2023 நவம்பர் மாதம் ராய்பூரில், சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கோடிக்கணக்கில் பணத்துடன் சென்ற அசிம் தாஸ் (Asim Das) என்பவரை அமலாக்க துறை விசாரித்த போது சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்காக அதனை கொண்டு செல்வதாக ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பூபேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவாலா கருத்து தெரிவித்தார்.

    அதில் ஷெஹ்சத் கூறியதாவது:

    சி எம் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் (முதல் அமைச்சர்) அல்ல; கரப்ஷன் மினிஸ்டர் (கரப்ஷன் மினிஸ்டர்). பிரதமர் மோடி "ரூபே" கார்டு கொடுத்தார்; காங்கிரஸ் "பூபே" கார்டு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏடிஎம்மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளாலும் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கொண்டது. கையும் களவுமாக ரூ.500 கோடி லஞ்சம் கொடுக்க சென்ற ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் அதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஊழலை ஆதரிக்கிறதா என இப்போது காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்கமடைய செய்துள்ளது
    • இந்தியா கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை

    இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தலைவர்களுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து பிரபல பத்திரிகையில் ஒரு ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

    அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் வெற்றி பா.ஜ.க.வை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விட்டது.

    மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க போவது மோடிதான். இது தவிர்க்க முடியாதது.

    மனோதிடம் மிக்க அரசியல் தலைவராக தன்னை வெளிப்படுத்தி கொண்டுள்ள மோடி, இந்துக்கள் அதிகம் உள்ள நாட்டில், இந்துத்வா சித்தாந்தத்தினால் மிக பிரபலமான தலைவராக உருவெடுத்துள்ளார்.

    மாநிலங்கள் அளவிலும், மத்திய அளவிலும் மோடிக்கு சாதகமான சூழலே நிலவுகிறது.

    பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ், நாடு முழுவதிலுமே 3 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. மேலும், உட்கட்சி குழப்பங்கள் அக்கட்சியில் அதிகம் காணப்படுகிறது.

    பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா கூட்டணி" கட்சிகளிடம் முக்கிய விஷயங்களில் ஒற்றுமை இல்லை.

    மோடியின் வெற்றி உறுதி; ஆனால், வெற்றியின் அளவை எந்தெந்த காரணிகள் முடிவு செய்யும் என்பதை வரும் காலம் தெரிவிக்கும்.

    2019ல் பெற்ற பெரும் வெற்றியை மீண்டும் பெறுமா என்பதை தற்போது கூற இயலவில்லை.

    இவ்வாறு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து பொறியியல் பட்டம் பெற்றவர் பவ்யா
    • 2018ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பவ்யா நரசிம்ம மூர்த்தி

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தேதிகள் மார்ச் முதல் வாரம், இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

    இத்தேர்தலை சந்திக்க பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.


    கட்சியினர் ஆற்றும் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை (communications coordinator) காங்கிரஸ் நியமித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக, பவ்யா நரசிம்ம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    யார் இந்த பவ்யா நரசிம்ம மூர்த்தி?

    பவ்யா நரசிம்ம மூர்த்தி கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பிறந்து வளர்ந்தவர்.


    எம் எஸ் ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

    அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்பிருந்தும், அரசியலில் ஈடுபட விரும்பி இந்தியாவிற்கு வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2018ல் அக்கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மூத்த தலைவர் வீரப்ப மொய்லியுடன் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் மாநில மற்றும் மத்திய தேர்தல் அறிக்கையை தயாரித்தார்.


    பெண்கள் நல்வாழ்விற்காக இயங்கும் காங்கிரஸ் கட்சியின் "பிரியதர்ஷினி" அமைப்பில் தலைவராக சிறப்பாக பணிபுரிந்தார்.

    காந்திஜியின் சித்தாந்தங்களில் மிகுந்த ஈடுபாடு உடையவரான பவ்யா, பா.ஜ.க. கொண்டு வந்த சிஏஏ-விற்கு (CAA) எதிராக கர்நாடகாவில் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

    இள வயதில் அரசியலில் நுழைந்தது குறித்து, "அரசியலில் நுழைய விரும்புபவர்கள் தயக்கமின்றி கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும். அதை தூய்மைப்படுத்த இள வயதினருக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால், இது நுழைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்" என்கிறார் பவ்யா நரசிம்ம மூர்த்தி.

    • 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
    • ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி

    கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.

    தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.

    இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.

    அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • என்.டி.ஏ. அரசு 2004ல் பழைய பென்சன் திட்டத்தை நிறுத்தி விட்டது
    • தொடக்கம் முதலே அரசு ஊழியர்கள் புது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

    அரசு ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடைந்ததும் அவர்கள் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படை தொகையை கணக்கிட்டு மாதாமாதம் நிலையாகவும் நிரந்தரமாகவும் ஒரு தொகையை அரசாங்கம் வழங்கி வந்தது. இது மாதாமாதம் முதல் வாரத்தில் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதால், நிலையான நிரந்தரமான வருமானமாக அவர்களுக்கு இருந்தது. இத்திட்டம் பழைய ஓய்வூதிய திட்டம் (Old Pension Scheme) எனப்படும்.

    2004ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இதில் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தாங்களாக முன்வந்து ஒரு தொகையை மாதாமாதம் செலுத்த வேண்டும். இத்துடன் பணியாளர்களின் அடிப்படை தொகையின் 14 சதவீதத்துடன் அகவிலைப்படியையும் சேர்த்து தன் பங்காக அரசாங்கம் ஒரு தொகையை செலுத்தும். இதுவே ஓய்வூதியமாக வழங்கப்படும். இத்திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் (New Pension Scheme) எனப்படும்.

    2009 வருடத்திலிருந்து 18 வயதிலிருந்து 60 வயது வரை எந்த துறையில் பணியாற்றுபவரும் புதிய பென்சன் திட்டத்தில் சேரலாம் என இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது.

    அரசின் செலவினங்களை குறைக்கும் முயற்சியாகவும், பல துறைகளை சேர்ந்தவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில் அமைந்ததாலும், இத்திட்டத்தை பெரும்பாலான மாநில அரசாங்கங்கள் பின்பற்றி வந்தன.

    ஆனால், நிரந்தரமாக மாதாமாதம் ஊழியர்களுக்கு கிடைத்து வந்த நிலையான வருமானம் நின்று போனதால், அரசு ஊழியர்கள் என்.பி.எஸ். திட்டத்தை எதிர்த்து வந்தனர்.

    சமீபத்திய சட்டசபை தேர்தல்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வென்றுள்ள பா.ஜ.க. அங்கு முன்னர் இருந்த அரசுகள் அமல்படுத்தி வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர போவதாகவும், இந்திய தேசிய காங்கிரஸ் வென்றுள்ள தெலுங்கானாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி (RBI) "மாநில நிதிநிலைமை: 2023-24க்கான பட்ஜெட் குறித்த ஆய்வு" எனும் அறிக்கையை வெளியிட்டது. அதில் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    "சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளதும், சில மாநில அரசுகள் திரும்ப உத்தேசித்திருப்பதும் தவறான முடிவு. இது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்திற்கு பெரும் சுமையாக மாறி விடும். மாநிலத்தில் ஒரு அரசு செயல்படுத்த வேண்டிய வளர்ச்சிக்கான பெரும் திட்டங்களுக்கான செலவினங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும். இது ஒரு பிற்போக்கான முடிவு. இதன் மூலம் சுமார் 4.5 மடங்கு வரை நிதிச்சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது" என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எதிர்கட்சிகள் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்துவோம் என பிரசாரம் செய்வதும், அதற்கு ஒரு சில அரசு ஊழிய தொழிலாளர் சங்கங்கள் ஆதரவு அளிப்பதும் அதிகரித்து வரும் நிலையில், ஆர்.பி.ஐ.-யின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

    • சிம்ஹாஸ்த மேலா நடைபெற 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது
    • தகாத வார்த்தைகள் பேசியவருக்கு முதல்வர் பதவியா என ஜெய்ராம் விமர்சித்தார்

    மத்திய பிரதேச மாநில சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.

    வெளியான முடிவுகளின்படி 230 இடங்களில் 163 இடங்களில் பா.ஜ.க. வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 66 இடங்களில் மட்டுமே வென்றது.

    இத்தேர்தலுக்கான பிரசார காலம் முழுவதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையும் ம.பி.க்கான தேர்தல் அறிக்கையை மட்டுமே பிரசாரத்தில் முன்னெடுத்த பா.ஜ.க., முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கூறாமலே தேர்தலில் களம் இறங்கி வென்றது.

    வெற்றியை தொடர்ந்து இதுவரை முதல்வராக இருந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், ஒரு புதிய முகம் முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகின.

    நேற்று, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து உஜ்ஜயின் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் அடுத்த முதல்வர் என அக்கட்சி அறிவித்தது.

    ம.பி.யின் உஜ்ஜயின் நகரத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து திருவிழா "உஜ்ஜயின் சிம்ஹாஸ்த மேலா." இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்காக 872 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    ஆனால், விவசாய நிலங்கள் எனும் பிரிவிலிருந்து குடியிருப்புக்கான நிலங்கள் என யாதவ், யாதவின் மனைவி, யாதவின் சகோதரி ஆகியோர் பயன்பெறும் வகையில் திட்டம் மாற்றப்பட்டதாக நவம்பர் மாத தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது.

    மேலும், இது குறித்து மோகன் யாதவ் தகாத வார்த்தைகளால் பேசுகின்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

    இந்நிலையில், மோகன் யாதவ் முதல்வராக பா.ஜ.க.வினரால் தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ஜெய்ராம் பதிவிட்டிருப்பதாவது:

    தேர்தல் முடிவுகள் வெளியான 8 நாட்களில் ம.பி.யின் முதல்வராக உஜ்ஜயின் நகர வளர்ச்சி திட்டத்தில் பெருமளவு நிலங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிம்ஹாஸ்தாவிற்காக ஒதுக்கப்பட்ட 872 ஏக்கர் நில திட்டம் யாதவ் பயன்பெறும் வகையில் மாற்றப்பட்டது. பேசக்கூடாத வார்த்தைகளை யாதவ் பேசிய வீடியோவும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இதுதான் பிரதமர் மோடி ம.பி.க்கு அளிக்கும் உத்தரவாதமா?

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேர்தலில் முதல்வர் வேட்பாளரின் பெயரை பா.ஜ.க. அறிவிக்காமலே போட்டியிட்டது
    • 1990ல் அரசியலில் நுழைந்த சாய், நீண்ட கால அரசியல் அனுபவம் உடையவர்

    கடந்த நவம்பர் மாதம் 7 மற்றும் 17 தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரசும் நேருக்கு நேர் தீவிரமாக களமிறங்கின.

    தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. இதில் பா.ஜ.க., பதிவான வாக்குகளில் 46.27 சதவீதம் பெற்று 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் உரிமையை பெற்றது.

    தேர்தல் அறிக்கையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் சாதனைகளும் மட்டுமே தேர்தலில் பா.ஜ.க.வினரால் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளரின் பெயர் அப்போது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் வெளியான முடிவுகளில் கட்சி அபாரமாக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்து பல யூகங்கள் நிலவி வந்தன.

    இன்று சத்தீஸ்கர் மாநில ராய்பூரில், 54 எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் ராமன் சிங்கிற்கு நெருக்கமானவரும், பா.ஜ.க.வின் தேசிய செயல் கமிட்டியின் உறுப்பினருமான 59 வயதான விஷ்ணு தியோ சாய் (Vishnu Deo Sai), முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1990ல் அரசியலில் ஆர்வத்துடன் நுழைந்தவர் சாய்.

    2006ல் பா.ஜ.க.வின் சத்தீஸ்கர் மாநில தலைமை பொறுப்பை ஏற்ற சாய், நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர்.

    2023 நவம்பர் தேர்தலில் சாய், சத்தீஸ்கரில் உள்ள குன்குரி (Kunkuri) தொகுதியில் 87,604 வாக்குகளுடன் வெற்றி பெற்ற சாய், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட சுமார் 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.

    2014ல் பிரதமராக மோடி பதவியேற்ற பா.ஜ.க.வின் மத்திய அமைச்சரவையில், சாய் எக்கு துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
    • கூட்டத்தின்போது தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட தலைமை அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் பாலகுருநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தல் தயாரிப்பு பணி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×