என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்"

    • அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
    • கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு அ.தி.மு.க. நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உள்ள சிறுபான்மையின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சற்று அதிருப்தி அடைந்து உள்ளனர்.

    அவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.

    பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும் போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும்என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளையும் இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

    கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழக செயலாளர்க்ள, மாவட்டக் கழக செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

    உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிததோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #AIADMK
    சென்னை:

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.



    இந்த கூட்டத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், புதிதாக கட்சி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களின் செயல்பாடு குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. மாலை 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணிக்கு முடிந்தது.

    கூட்டத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளா மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த இருக்கும் தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.

    * பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைவருக்கும் இந்த கூட்டம் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.

    * புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக முடித்த அனைவருக்கும் நன்றி.

    * சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை ஜனவரி மாதம் நடத்த முயற்சி மேற்கொண்டிருப்பதற்கும், கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.10 கோடி நிவாரண நிதி மற்றும் பல கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கும், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதற்கும் தமிழக அரசுக்கு நன்றி.

    * ரூ.328 கோடி செலவில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீராதாரத்தை பெருக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

    * குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பல திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு.

    * இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் புனிதப்பயணம் மேற்கொள்ள நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு பாராட்டு.

    * பெண்களுக்காக தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி.

    * தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு விரைந்து வழங்க இந்த கூட்டம் வேண்டி, விரும்பி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    ×