மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது- சி.பி. ராதாகிருஷ்ணன்

தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும்.பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.
மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது-  சி.பி. ராதாகிருஷ்ணன்
Published on

நெல்லை:

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜையை ஒட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சுதந்திரப் போராட்ட வீரர்கள் 268 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரவப்படுத்தி வருகிறார்.

தேசத்திற்கு போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குரு பூஜை விழாவில் கவுரவம் செய்யவே இங்கு வருகை தந்தேன்.

பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது மண்ணுக்கு சொந்தமானது. இப்போது மட்டுமல்ல வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல. அது பற்றற்ற தன்மையை குறிக்கும் நிறம்.

அறநிலையத்துறை அமைச்சர் கூட காவி அணிந்துதான் கோவிலுக்கு செல்கிறார். மாநில முதலமைச்சர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளது. அதனை வைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் அவர்கள் தலையிடக்கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக செயல்படுபவர் கவர்னர் தான்.

நான் 4 மாநிலங்களில் கவர்னராக இருந்திருக்கிறேன். 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தான். ஆனால் அங்கு இது போன்ற எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்பட வில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் கவர்னரிடமே உள்ளது.

கேரளா அரசு தொடர்ந்து வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு அதற்கான தீர்ப்பை வழங்கி உள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் அதிகாரம் என இவர்கள் கூறி வருகின்றனர். மாநில கவர்னர்களின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் தலையீடு இருக்க கூடாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதலமைச்சருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா?. பிரதமருக்கு முழு அதிகாரம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? அப்படி என்றால் எதேச்சதிகாரமாக அவர் செயல்பட முடியுமா?. மாணவர்கள் வன்முறைக்குள் செல்லக்கூடாது.

ராஜீவ் காந்தியை கொன்றவரோடு கட்டியணைத்து முதலமைச்சர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது. வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com