search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraud Complaints"

    • புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    கோவை:

    கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். டிராவல்ஸ் உரிமையாளர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரை சென்னை திருவொற்றியூரை சேர்ந்த லட்சுமிபதி(62) மற்றும் அவரது மனைவி நிர்மலா(52) ஆகியோர் சந்தித்து, நிர்மலா சாய்பாபாவின் மறுஅவதாரம் எனவும், தாங்கள் கூறும் நிறுவனம் மற்றும் தங்களிடம் பணத்தை முதலீடு செய்தால் 3 மடங்கு செல்வம் பெருகும் என தெரிவித்தனர்.

    இதனை நம்பிய சந்திரசேகர், லட்சுமிபதி பங்குதாரராக உள்ள நிறுவனம், மற்றும் அவர்களது உறவினர்களிடம் கோவை சிங்காநல்லூர் வங்கி கிளையில் இருந்து பல தவணைகளாக ரூ.1.45 கோடி பணத்தை பெற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

    3 மாதத்தில் லாபம் கிடைக்கும் என கூறிய அவர்கள் முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை லாபம் என கூறி கொடுத்ததுடன், அதிலிருந்து ரூ.3 லட்சத்தை பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்க வேண்டுமென கேட்டு பெற்றுள்ளனர்.

    இதற்கிடையே சந்திரசேகருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்ததில் அவர்கள் இது போல் பணத்தை பலரிடம் பெற்று மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர் கோவை மாநகர குற்றப்பிரவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் லட்சுமிபதி, நிர்மலா உள்ளிட்ட 8 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை தம்பதிகளான லட்சுமிபதி மற்றும் நிர்மலா ஆகியோர் பாபா பேரை சொல்லி ஏமாற்றியதாக அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது பெற்றோரிடம் ரூ.3 லட்சமும், திருப்பூரை சேர்ந்த சத்திய நாராயணனிடம் ரூ.4 லட்சம், திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளத்தை சேர்ந்த தர்மலிங்கத்திடம் ரூ.2 லட்சம், கோவை ஆர்.எஸ்.புரம் முத்து நாகரத்தினம் என்பவரிடம் ரூ.1.30 லட்சம், கோவை வெள்ளலூரை சேரந்த சூர்யா என்பவரிடம் ரூ.4.15 லட்சம் வாங்கி மோசடி செய்ததாகவும் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல இந்த சென்னை தம்பதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து புகார் அளித்து வருவதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×