என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்சி தொடக்க நாள்: பா.ஜ.க. மாவட்ட தலைவர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்
- 11 மாவட்டத் தலைவர்கள், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
- திடீர் விருந்து நிகழ்ச்சி கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை:
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார். இரவு சென்னையில் தங்கினார்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் விழுப்புரம் கோட்டத்தில் உள்ளடங்கிய கட்சியின் மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்களுக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது.
அதில், இன்று காலை 8.30 மணிக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் காலை விருந்து வழங்குவதாகவும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இன்று காலையில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாவட்டத் தலைவர்கள் சஞ்சீவி, பாஸ்கர், லதா சண்முகம், குமார், பாலாஜி, கிரி, நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், கபிலன், சாய் சத்யன், கிருஷ்ண குமார், தனசேகர், மனோகர் ஆகியோரும் விழுப்புரம் கோட்டத்தை சேர்ந்த 11 மாவட்டத் தலைவர்கள் மற்றும் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுடன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கோட்ட பொறுப்பாளர்கள் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும் கட்சியினருடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார்.
இந்த திடீர் விருந்து நிகழ்ச்சி அழைப்பு கட்சியினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, "இன்று கட்சியின் தொடக்க நாள் ஆகும். எனவே அதை யொட்டி விருந்து கொடுப்பதாகவே நினைக்கிறோம்" என்றார்கள்.
கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று கட்சியின் ஸ்தாபன நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கட்சி கொடியேற்றினார். கட்சியின் மூத்த நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.






