search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு வரும் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு
    X

    புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு வரும் குடிநீர் குழாயில் 'திடீர்' உடைப்பு

    • ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

    கொளத்தூர்:

    சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் 2.5 மீட்டர் சுற்றளவு கொண்ட ராட்சத குழாய் மூலம் மாதவரம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார் பேட்டை பகுதிகளுக்கும் ரெட்டேரி வழியாக அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் ரெட்டேரி அருகே செல்லும் இந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

    அதில் இருந்து வெளியேறி தண்ணீர் சுமார் 25 அடி உயரத்திற்கு அருவி போல் பீய்ச்சி அடித்து வெளியேறியது.

    இந்த தண்ணீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அருவிபோல் வெளியேறிய தண்ணீர் முன்பு நின்றபடி தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

    குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவது பற்றி அறிந்ததும் திரு.வி.க. நகர் மண்டல பொறுப்பு பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் குடிநீர் குழாயில் உள்ள முக்கிய வால்வை அடைத்தனர். இதனால் உடைந்த பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது குறைந்தது.

    எனினும் ஏற்கனவே குழாயில் இருந்த தண்ணீர் முழுவதும் சாலையில் வெளியேறியது. சுமார் 3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர்.

    இதைத்தெடர்ந்து இரவு 11 மணியளவில் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் பின்னர் தண்ணீர் வெளியேறுவது முழுவதும் நின்றது. இதையடுத்து வழக்கம்போல் போல் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    ரெட்டேரி பகுதியில் கால்வாய் நீர் வெளியேற பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையால் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி தவறுதலாக குழாய் மீது இடித்ததால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியதாக கூறப்படுகிறது. தண்ணீர் வெளியேறுவது கண்ட லாரி டிரைவர் பதட்டத்தில் லாரியை அங்கிருந்து ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதை பார்க்க ஏராளமானோர் திரண்டதால் ரெட்டேரி பகுதியில் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×