search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வீழ்ச்சி"

    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    • கோத்தகிரியில் தொடர் கனமழை எதிரொலி

    அருவங்காடு,

    குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள போக்குவரத்து சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடுகிறது. மேலும் மலைப்பாதைகளில் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள் உருவாகி உள்ளன.

    குன்னூர் அருகே உள்ள டால்பின் நோஸ் காட்சி முனை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். அங்கிருந்து பள்ளத்தாக்குகள், வானுயர்ந்த மலைகள் மட்டுமின்றி அடர்ந்த வனப்பகுதிகள், ஆதிவாசி குடியிருப்புகள் மற்றும் மலை ரயில் பாதைகளையும் கண்டு ரசிக்கின்றனர்.

    இதற்கிடையே கோத்தகிரி பகுதியில் இருந்து வரும் தண்ணீர், கேத்தரின் நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் புகைப்படங்களும் எடுத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 2-வது சீசனையொட்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வதால் அங்கு உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி வருகின்றன.

    • நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • ர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை யில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

    சுற்றுலா பயணிகள்

    கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லி மலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதி நடைபெற உள்ள விழா விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்லி மலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பிச் செல்கின்றனர்.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குதிப்பதை வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறினார்.

    சக நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்த போது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த 2 பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுமன் வெளியே வராததால் பதற்றம் அடைந்தனர். அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் சுமனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதளுக்கு பிறகு பாறைகளுக்கு இடையில் சிக்கிய சுமனை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக எரவாரி பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுமன் பாறையின் மீது இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    தலக்கோணா நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

    நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஆபத்தாக உள்ள பாறைகளை நீக்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    • இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
    • நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார்.
    • தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 43). இவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சந்திரலட்சுமி. இவர்களுக்கு சவுமியா (13), சாய் சுவேதா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சவுமியா சென்னையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 8-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார்.

    பள்ளி விடுமுறை விடப்பட்டதால் தனது குடும்பத்தினருடன் பாலமுரளி கடந்த வெள்ளிக்கிழமை ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தார். ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்த அவர், குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துள்ளனர்.

    நேற்று மதியம் ஏற்காட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றார். இங்கு வழுக்கு பாறைகள் நிறைந்து காணப்படுவதால் அங்கு குளிப்பது ஆபத்தானது என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    அங்கு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாலமுரளி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார். இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. சவுமியா அங்குள்ள பாறையில் ஏறி விளையாடினாள்.

    அப்போது உடை மாற்றும் அறை கட்டுவதற்காக நீர்வீழ்ச்சி அருகில் 30 அடி உயர பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் சவுமியா ஏறினாள். மகள் ஏறுவதை பார்த்த பாலமுரளி, அங்கு செல்லாதே என்று கூறிக்கொண்டே பின்னால் அவரும் பாறையில் ஏறினார். பாறையின் உச்சிப்பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்து எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி கீழே விழுந்தாள். மகள் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுரளி, மகளை பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்காமல் போகவே அவரும் பாறையில் இருந்து கீழே விழுந்தார்.

    தந்தையும், மகளும் அடுத்தடுத்த பாறையில் மோதி நீர்வீழ்ச்சியில் விழுந்தனர். அவர்கள் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. கணவர், மகளின் உடலை கண்டு சந்திரலட்சுமி கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

    ஏற்காடு போலீசார் இருவருடைய உடல்களையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    2 உயிர்களை பலி வாங்கிய இந்த நல்லூர் நீர்வீழ்ச்சியில் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இதர காலங்களில் பாறைகளில் பாசி படிந்து காணப்படும். இந்த நீர்வீழ்ச்சி பாதுகாப்பில்லாதது என்பது, ஏற்காடு பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் வெளியூரிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு, இந்த இடத்தின் நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    இதனால் அவர்கள் பாறை மீது ஏறி நீராடி மகிழ முற்படும் போது, நீர்வரத்து காரணமாக பாறையின் மேற்பரப்பில் படிந்துள்ள பாசி வெளியில் தெரிய வாய்ப்பில்லை. அதனால் வழுக்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

    பாதுகாப்பில்லாத காட்டுப் பகுதிக்கு நடுவில் இந்த இடம் அமைந்துள்ளதால், பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டத்திற்கான வாய்ப்புகள் குறைவு. யாராவது ஆபத்தில் சிக்கி அபாயக்குரல் எழுப்பினாலும், பள்ளத்தாக்கு பகுதியென்பதாலும், தண்ணீர் பாறைகளின் மீதிருந்து ஆக்ரோசமாக விழுவதாலும், அந்த இரைச்சலில் அபாயக்குரல் கேட்பதற்கு வாய்ப்பில்லை.

    எனவே பாதுகாப்பு வளையங்கள் அமைத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வரையிலும், இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    தந்தை, மகள் பலியானதை தொடர்ந்து நல்லூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக குழந்தைகளின் வற்புறுத்தலின்பேரில் அருவி, நீர்நிலைகளை கூகுள் மேப்பில் தேடி செல்லும் பெற்றோர்கள் அந்த அருவி, தடாகத்தின் தன்மை தெரியாமல் குளிக்கும் ஆர்வத்தில் சென்று அபாயத்தில் சிக்கி கொள்ள வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். 

    • நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான இயற்கை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
    • உலகின் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பகுதியாக மேற்குத்தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆசிரியர் காலனியை சேர்ந்த வினோத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் உருவாகின்றன. அதில் பிரசித்தி பெற்றது, குற்றாலம் அருவிகள்.

    நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான இயற்கை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

    இவற்றுக்கு நீர் ஆதாரம் மலைத்தொடர்கள். இந்த நீரானது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. நீர்வீழ்ச்சிகளில் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணத்துக்காகவும் பொதுமக்கள் குளிக்கின்றனர்.

    குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் பாயும் இடங்களில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அருவிகளை சுற்றிலும் ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, இணையதளங்களில் விளம்பரம் செய்து வருமானம் கொழிக்கின்றனர்.

    உலகின் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பகுதியாக மேற்குத்தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. ஆனால் இங்குள்ள இயற்கை அருவிகளின் நீர் வழிப்பாதையை தனிநபர்கள் தங்களின் ஆதாயத்திற்காக மாற்றி சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

    இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையாக செல்லும் நீரோடைகள், சிற்றாறுகள், அருவிகள், ஆறுகளை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மேற்கண்ட 5 மாவட்டங்களில் தனியார் உருவாக்கிய செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இணையதள முகவரிகள், ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

    விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் புவியியல் மாற்றங்களுக்குப் பிறகு தோன்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரோடைகளை சட்டவிரோதமான முறையில் ரிசார்ட்டுகள், எஸ்டேட்கள் போன்ற தனியாரால் திசை திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிய ஒரு குழுவை ஏற்படுத்த நெல்லை, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

    இந்த குழு, மாவட்ட வன அலுவலர்களின் உதவியுடன் தனியார் ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் ஆய்வு நடத்தி, சட்டவிரோத நீர்வீழ்ச்சிகள் இருந்தால் அவற்றுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விதிமீறலுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து மாவட்ட கலெக்டர்கள் விரிவான அறிக்கையை இந்த கோர்ட்டில் வருகிற 1-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1600 படிக்கட்டுகள் கடந்து சென்று தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும்.

    இந்த பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன மழையால் அந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அத்துடன் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வழிப்பாதையின் வழியாக சிறு, சிறு மரத்துண்டுகள் மற்றும் சிறு பாறைகள் உருண்டு வந்து நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் விழும். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இன்று (சனிக்கிழமை) முதல் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மற்றும் அங்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    ×