search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South West Monsoon"

    • தென்மேற்கு பருவ மழையினை நம்பி நெல் சாகுபடி தொடங்கப்படும்.
    • மே மாத இறுதியில் நெல் விதை பாவி, ஜூன் முதல் வாரத்தில் நாற்று நடவு தொடங்கி விடுவது வழக்கம்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அதற்கான அறிகுறி இல்லை. மாறாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் காற்று மட்டுமே வீசி வருகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதில் செங்கோட்டை பகுதியில் மழை இல்லாததால் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன.

    இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும் நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்களும் பயிரிடப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    தென்மேற்கு பருவ மழையினை நம்பி நெல் சாகுபடி தொடங்கப்படும். இதற்காக மே மாத இறுதியில் நெல் விதை பாவி, ஜூன் முதல் வாரத்தில் நாற்று நடவு தொடங்கி விடுவது வழக்கம். தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காண்பித்து வருவதால் குண்டாறு, மோட்டை , ஸ்ரீமூலபோரி, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் குறைந்த அளவில் தண்ணீர் காணப்படுகிறது.

    மேலும் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர் வறண்ட நிலையில் இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ள கேரள மாநிலம் தென்மலை அணையிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த காட்டு மாடு ஒன்று சகதியில் சிக்கி வெளியே வரமுடியாமல் போராடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து காட்டு மாட்டை மீட்டனர்.

    மழை இல்லாததால் செங்கோட்டை பகுதியில் ஒரு சில இடங்களை தவிர ஏனைய இடங்களில் நாற்று பாவும் பணி கூட தொடங்காத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருவதோடு கண்ணீர் வடிக்கின்றனர்.

    மேலும் ஜூன் மாதத்தில் பாதி கழிந்துவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை உரிய முறையில் பெய்தாலும் இனி நாற்றுப்பாவினால் கூட அறுவடை காலம் தாமதமாகும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு தாமதமானால் வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி நன்கு விளைந்த பயிர்கள் கூட சேதமடையும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை ஒட்டியுள்ள தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படைகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அரிச்சல் முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மீன்பிடித்தொழில் தடைபட்டுள்ளதால் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலைகளை மணல்கள் மூடின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தனுஷ்கோடியில் இறங்கி குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கடலோர காவல் படையினர் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் 24 மணி நேரமும் கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு கடந்த 3 மாத காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை முடிந்து தற்போது தான் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறோம். இதனிடையே இலங்கை கடற்படை தொல்லையால் முழுமை யாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடிவதில்லை. தற்போது இயற்கையும் எங்களை வஞ்சித்துள்ளது. இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது. வானிலை மாற்றம், புயல் போன்ற காலங்களில் கடலுக்கு செல்லாதபோது மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.

    • சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும், கடலோர மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    தென்மேற்கு பருவ மழை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை உள்ள காலம், இந்த காலங்களில் தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும், இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இன்னும் கூடுதலாக மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    5 சதவீதம் குறைவு

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஜுன் 1-ந் தேதி முதல் நேற்றைய தேதியான செப்டம்பர் 8-ந் தேதி வரை 289.1 மி.மீ. மழை பெய்யும், ஆனால் இந்தாண்டு 274.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 15 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் குறைவாகும், இன்னும் தென் மேற்கு பருவ மழை காலம் முடிய இன்னும் 21 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் கூடுதல் மழை பெய்தால் வழக்கத்தை விட மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும்.
    • கேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும்.

    தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெய்வது வழக்கம். கேரளாவை மையமாக வைத்து இந்த பருவ மழை தொடங்கும். கேரளாவில் 5 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவக்கூடும்.

    தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும்.

    மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும். அதன்படி தமிழகத்திலும் படிப்படியாக பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வப்போது கேரளாவில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், அதனுடைய தாக்கம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் இதனுடைய தாக்கமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும்.
    • குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் வரும் 1, 2, 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது.
    • அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மதியம் வெயில் அடித்தது.

    மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதனை தொடர்ந்து 6 மணிக்கு இடியுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. பின்னர் சிறிது நேரம் மழை விட்டது.

    அதன் பிறகு 2-வது முறையாக பெய்த கனமழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த கனமழையால் கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, அன்னதானப்பட்டி அஸ்தம்பட்டி, 4 ரோடு, மேயர் நகர் உள்ளிட்ட நகரில் பல இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    ஓமலூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    தாழ்வான பலபகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நின்ற பிறகு வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

    சேலத்தில் அதிகபட்சமாக 86.4 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கரியகோவில், ஓமலூர், டேனீஷ்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 37,

    கரிய கோவில் - 58,

    ஓமலூர் - 15,

    டேனீஷ் பேட்டை - 3.2 என மாவட்டம் முழுவதும் 207.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    • பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறட்சியால் வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் உத்தரகன்னடா, தார்வாட், ஹாவேரி மற்றும் உடுப்பி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெல்காம் மற்றும் குடகு மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதேபோல் பாகல்கோட், கொப்பல், ஷிமோகா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் அதிக காற்று வீச வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரு மாநகரில் வானம் மேககூட்டத்துடன் காணப்படும். வருகிற 12-ந் தேதி வரை கர்நாடகாவில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவனந்தபுரத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக நேற்று மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    திருவனந்தபுரத்தில் விடாமல் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கனமழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்தில் செல்லும் 5 விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன. துபாயில் கோழிக்கோடு வந்த விமானம் அதிகாலை 2.45 மணிக்கு கொச்சியில் தரை இறங்கியது. இதேபோல் தோஹா, சார்ஜா, பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிக்கோடு வந்த விமானங்களும் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டன.

    இந்த நிலையில் மழையின் தாக்கம் மேலும் அதிகமாகும் என்பதால் கோழிக்கோடு, வயநாடு, பத்தனம்திட்டா, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 12-ந் தேதி மழையின் தீவிரம் இருக்கும் என்பதால், பல்வேறு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் அருவிக்கரை அணையின் ஷட்டர்கள் 25 செ.மீட்டர் உயர்த்தப் பட்டதால், ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.

    எனவே நீர் நிலைகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    • நெல்லை மாநகரில் நேற்று பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி எஸ்டேட்டில் 66 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாக பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாநகரில் நேற்று பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து வள்ளியூர், ராதாபுரம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் அதிக பட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாகவே சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று கனமழை பெய்தது. பகலில் தொடங்கி மாலை வரையிலும் பெய்த கனமழையின் காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 77.10 அடியாக இருந்த நிலையில், தொடர் கனமழையின் காரணமாக ஒரே நாளில் 4½ அடி உயர்ந்து இன்று 81.80 அடியை எட்டி உள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 91.14 அடியாக இருந்த நிலையில் இன்று 101.64 அடியை எட்டி உள்ளது. ஒரே நாளில் அந்த அணையின் நீர்மட்டம் 10½ அடியை எட்டி உள்ளது. நேற்று வரை 2 அணைகளுக்கும் வினாடிக்கு 850 கனஅடி நீர் மட்டுமே வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 2 கனஅடி நீர் அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.27 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி எஸ்டேட்டில் 66 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 10.8 சென்டி மீட்டரும், ஊத்து பகுதியில் 9 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடு முடியாறு அணையில் 16 மில்லிமீட்டரும், கருப்பாநதி மற்றும் குண்டாறு அணை யில் தலா 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கருப்பாநதி நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 20.12 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 58 அடியாகவும் இருக்கிறது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. மேலும் இதமான காற்றும் வீசியதால் ரம்மிய மான சூழ்நிலை நிலவியது.

    • தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை தொடரக்கூடும்.
    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வருகிற 13-ந் தேதி வரை இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதன் காரணமாக கேரளம் மற்றும் தமிழக கடற்கரையோரங்களில் 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.
    • 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி நெல்லையில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 8 மணிக்கு புறப்படும் ஹாபா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 19577) காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.

    வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20923) ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ந் தேதி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×