search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thunder"

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது.
    • வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மருங்கால்புரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலை நெல்லை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை முதலே நெல்லை மாநகர பகுதியில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 10 மணிக்கு மேல் பாளை, பெரு மாள்புரம், வண்ணார்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, புதிய பஸ் நிலையம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    இதேபோல் இன்று மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை பெய்தது. குற்றாலம் பிரதான அருவியான மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் திரண்டனர். அவர்கள் வரிசையில் நின்று அருவியில் குளித்து சென்றனர்.

    • அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
    • வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்ததில் 20 வாத்துகள் உயிரிழந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரத்தில் நேற்று இடி மின்னல் தாக்கி 20 வாத்துகள் பலியானதுடன் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயங்கி விழுந்தது.

    அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை முடிவடைந்த நிலையில் அம்பை ஊர்க்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மதுரையை சேர்ந்த சின்ன அழகு, நல்லக்கண்ணு ஆகியோர் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது நேற்று மதியம் பயங்கர இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே வாத்து மேய்த்து கொண்டிருந்த 2பேரும் அருகில் இருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் வாத்துகள் மேய்ந்து கொண்டிருந்த வயலில் பலத்த சத்ததுடன் இடி விழுந்துள்ளது. இதில் அங்கிருந்த 20 வாத்துகள் அதிர்ச்சியில் உயிரிழந்தது. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் மயக்கமடைந்து விழுந்தது. மேலும் இடி, மின்னல் தாக்கியதில் இப்பகுதியில் பல வீடுகளில் டிவிகள் பழுதாகி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று மாறுபடுவதால் பலத்த இடியுடன் கூடிய மழை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை காரணமாக இரவு மின்தடை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை 4 மணி அளவில் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் மின்சாரத்தில் ஊழியர்கள் விடிய விடிய மின் இணைப்பு தருவதற்கு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.

    மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே பணிகள் பாதிப்பதோடு நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் இருந்து வந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு-கடலூர் - 45.9, ஆட்சியர் அலுவலகம் - 45.8,புவனகிரி - 42.0,காட்டுமன்னா ர்கோயில்- 38.2, லால்பேட்டை - 37.0, காட்டுமயிலூர் - 27.0, ஸ்ரீமுஷ்ணம் - 19.2, வேப்பூர் - 16.0, சிதம்பரம் - 13.2, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 12.5,அண்ணாமலைநகர் - 9.6, சேத்தியாத்தோப்பு - 5.8, விருத்தாசலம் - 5.0, பரங்கிப்பேட்டை - 4.2, 15. குறிஞ்சிப்பாடி - 4.0 கொத்தவாச்சேரி - 4.0 வானமாதேவி - 3.0 பண்ருட்டி - 1.2 மொத்தம் - 333.60 மழையளவு பதிவாகி உள்ளது

    நாமக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
    நாமக்கல்:

     நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம்   வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 70.7 டிகிரியாக நிலவியது. 

    நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவானது. அடுத்த 3 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். 

    காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கிலிருந்தும் அதன் வேகம் மணிக்கு 8 முதல் 10 கி.மீ. என்றளவில் வீசும். இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குலசேகரம் அருகே நேற்று மாலை இடி, மின்னலுடன் பெய்த மழையில் மரம் விழுந்து வீடு சேதமானது.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், மலையோர கிராமங்களிலும் கோடை மழை பெய்கிறது. நேற்று மாலையிலும் குலசேகரம், திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    மழை காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கால்வாய்கள், சாலைகளிலும் மழை நீர் வெள்ளம்போல் பாய்ந்தோடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

    குலசேகரம் பகுதியில் பெய்த மழையில் மரம் விழுந்து குடிசை வீடு ஒன்று சேதமானது. குலசேகரத்தை அடுத்த வெண்டலிக் கோட்டில் இச்சம்பவம் நடந்தது.

    வீட்டில் கூலித்தொழிலாளி ராஜன் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். அவருடன் மனைவி, 2 குழந்தைகள் மற்றும் ராஜனின் தாயார் ஆகியோர் இருந்தனர்.

    குலசேகரம் பகுதியில் நேற்று மாலை மழை பெய்த போது வீட்டில் ராஜனும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர். அப்போது வீட்டின் அருகே நின்ற மரம் பலத்த மழையால் சரிந்து விழுந்தது.

    மரம் விழும் சத்தம் கேட்டதும், ராஜனும், அவரது குடும்பத்தினரும் அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ராஜனின் வீடு மழையால் இடிந்த தகவல் வருவாய் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொன்மனை கிராம நிர்வாக அதிகாரி ரவி, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் அந்த பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுத்தார். அதனை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. #heavyrain

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மாவட்டத்தில் பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் நள்ளிரவில் கன மழை கொட்டியது.

    இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கோபி, கவுந்தப்பாடி மற்றும் கொடிவேரி, பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.

    இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பவானி- 42.

    சத்தியமங்கலம்- 26.

    கோபி- 21.

    கவுந்தப்பாடி- 19.2.

    கொடிவேரி அணை-15.

    அணை- 18.

    அணை- 12.

    அணை- 11.8.

    எலந்தகுட்டை மேடு-11.

    பவானிசாகர்- 7.

    நம்பியூர்- 6.

    பு.புளியம்பட்டி- 3.5.

    சிவகிரி- 2.2. #heavyrain

    கடலூரில் நேற்று இரவு 11 மணிக்கு நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு கடலூர் நகர பகுதியில் லேசான மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இடியுடன் மழை பெய்ததால் நகரின் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. கடலூர், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மழைநீர் செல்ல போதிய வசதி இல்லாததால் மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தெப்பக்குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. சேறும்- சகதியுமாக காட்சி அளித்தது.

    கடலூர் நகர் பகுதியில் இன்று காலையும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    சிதம்பரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் போன்ற இடங்களில் இன்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந் தனர். அவர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி- கல்லூரிக்கு சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை, களமருதூர், சேந்த நாடு போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    அதுபோல மரக்காணம் அதனை சுற்று பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்தது.

    சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. #Chennai #IMD
    சென்னை:

    வருடந்தோறும் அக்டோபர் 20-ம் தேதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கும். ஆனால் இந்த வருடம் சற்று தாமதாக துவங்க இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு  மைய இயக்குனர் பாலச்சந்திரன் தென்மேற்கு மத்திய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு வலுப்பெற இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 நாட்களுக்குள் வடகிழக்கு பருவமழை துவங்கும் எனவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், சென்னையில் இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்று (புதன்கிழமை) பகல் நேரத்தில் மிதமான வெயில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் செய்தி நிறுவனத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Chennai #IMD
    நாகர்கோவிலில் நேற்று காலையில் இடி மின்னலுடன் 3 மணி நேரம் கனமழை பெய்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று காலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல அதிகரித்து சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி தவித்தனர். செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் சாலை, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    காலையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவ–மாணவிகள் கடும் மழையால் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோக்கள் நடுவழியில் பழுதாகி நின்றதால் மாணவ–மாணவிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஒரு சிலர் பள்ளி வரை நனைந்தவாறு சென்றனர். 3 மணி நேரத்தில் 26.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதுபோல், குருந்தன்கோடு, குளச்சல், சிற்றார், பாலமோர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.

    மழையோர பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகள் நிரம்புவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:–

    நாகர்கோவில்–26.2, குருந்தன்கோடு–25.6, குளச்சல்–6.4, பேச்சிப்பாறை –1, சிற்றார்1–4, சிற்றார்2–7, மாம்பழத்துறையாறு –3, கன்னிமார்–4.6, பாலமோர் –2.8, ஆணைகிடங்கு –3, அடையாமடை –8, திற்பரப்பு–9.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு 482 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 27 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.
    ×