search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர் செல்வம்"

    • இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.
    • இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்தது.

    இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்தும், அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்மானங்கள் குறித்து சென்னை ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி இருந்தது.

    இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து தங்களை நீக்கியதை எதிர்த்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ததை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது.

    இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது வக்கீல் வாதம் 7 நாட்கள் நடைபெற்றது.

    இருதரப்பு வக்கீல்களையும் எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பி.எஸ். தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், இந்த வழக்குகளில் எங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக எந்த நீதிமன்றமும் கூறாத நிலையில் நான் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது.

    இடைக்கால தடை மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், 8 மாதங்கள் மவுனம் காத்த மனுதாரர்கள், தற்போது அந்த தீர்மானங்களுக்கு தடை கோர உரிமையில்லை.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அந்த தீர்மானங்களின் அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருவதால், காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் அன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கும்.
    • கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் டி.டி.வி. தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை இப்போதே தொடங்கி விட்டது.

    வாக்காளர் பட்டியலை வீடு, வீடாக சரி பார்ப்பது, புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது, வாக்கு சாவடி வாரியாக பி.எல்.ஏ. 2 முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை இப்போதே செய்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி கூட்டணி குறித்தும் இப்போதே முடிவு செய்து அதற்கேற்ப தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 20-ந் தேதி கூட்டியுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை கழக அலுவலகத்தில் அன்று காலை 9 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர், மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன், சி.ஆர்.சரஸ்வதி, அம்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வான திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் எஸ்.வேதாசலம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் டி.டி.வி. தினகரனை சந்தித்த பிறகு நடைபெறும் செயற்குழு என்பதால் கட்சியின் எதிர்கால நிலவரம் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    அதே போல் முக்கிய நிர்வாகிகள் பலர் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு செல்வதால் அதை தடுத்து நிறுத்துவது பற்றியும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் டி.டி.வி. தினகரன் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி சேருவது என்பது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் டி.டி.வி. தினகரன் ஆலோசிக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை.
    • கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை போடியில் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள முல்லை பெரியாறு-கொட்டக்குடி கூட்டுகுடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் போடிக்கு வருகை தருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் குடிநீர் பிரச்சினையில் தன்னிறைவு அடையும். போடி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர் வருவதும், வராமல் இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

    போடி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பிறகு அவர் எத்தனை முறை ஊருக்கு வந்து மக்களை சந்தித்துள்ளார் என்பது இப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றுப்போன நான்தான் அடிக்கடி போடி தொகுதிக்கு வந்து மக்கள் நலத்திட்டங்களை பார்வையிட்டு செயல்படுத்தி வருகிறேன்.

    15 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போடிக்கு எந்தஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தற்போது அவர் கேரளாவில் ஆயில் மசாஜ் எடுத்து வருகிறார். கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூலிகை சிகிச்சையின் மூலம் மன அழுத்தங்கள் குறைந்து உடலும் புத்துணர்ச்சி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • கேரளாவுக்கு மூலிகை சிகிச்சைக்கு சென்றதை ஓ.பன்னீர் செல்வம் ரகசியமாக வைத்துள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழக்கமாக ஆண்டுதோறும் கேரளாவுக்கு சென்று பாரம்பரிய மூலிகை சிகிச்சை எடுத்துக்கொள்வது வழக்கம்.

    கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக சட்ட போராட்டங்கள் நடத்துவது, தொடர் ஆலோசனைகள் என்று எப்போதும் மிகவும் பிசியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், தற்போது மூலிகை சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கேரளாவுக்கு சென்றுள்ளார். 10 நாட்கள் அங்கு தங்கி இருந்து விட்டு சிகிச்சை எடுத்துவிட்டு சென்னை திரும்புகிறார். இந்த சிகிச்சையின் மூலம் மன அழுத்தங்கள் குறைந்து உடலும் புத்துணர்ச்சி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவுக்கு மூலிகை சிகிச்சைக்கு சென்றதை ரகசியமாக வைத்துள்ளார். அவர் கேரளாவுக்கு கோவிலுக்கு சென்றுள்ளார். பெங்களூர் சென்றுள்ளார் என்று கட்சியினர் மாறுபட்ட தகவல்களை தெரிவிக்கிறார்கள்.

    • ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
    • தொண்டர்களை திரட்டி மோதி பார்க்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகளும் தோற்றுப்போனது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

    ஓமலூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருக்கு எதிராக போட்டியிட்ட நபருக்கு உதவியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் 3 முறை முதல்-அமைச்சர் என்று கூறிக்கொள்கிறார். கலெக்டர் விடுமுறையில் சென்று விட்டால் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு. அதுபோல் பொறுப்பாக இருந்தார்.

    என்னிடம் கட்சிக்கு வந்துவிடுகிறேன் என்று தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

    கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு அவரது மகனை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்தார். மற்ற இடங்களுக்கு சென்று கட்சிப்பணிகளை அவர் ஆற்றவில்லை.

    அவர் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க. பகடைக்காயாக வைத்து கொண்டுள்ளது. இதனை கட்சி நிர்வாகிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். தொண்டர்களை திரட்டி மோதி பார்க்க அவர் எடுத்த முயற்சிகளும் தோற்றுப்போனது.

    சட்ட ரீதியாக அவர் தொடுத்த அத்தனை கணைகளையும் எடப்பாடி பழனிசாமியும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வீழ்த்தினார். கட்சி முற்றிலுமாக எடப்பாடி பழனிசாமி வசமாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஒன்று மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது ஆகிய 3 வழிகள் தான் உள்ளன.

    இதில் தனிக்கட்சி தொடங்குவதும், வேறு கட்சிகளில் இணைவதும் சரிபட்டு வராது என்று ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் அ.தி.மு.க.வுக்குள் திரும்பி செல்லும் முயற்சியை அவர் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு அ.தி.மு.க.வுக்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேல்மட்ட தலைவர்களை பொறுத்தவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது சரியாக இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள் வருமாறு:-

    தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கட்சிக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பல்வேறு சட்ட நெருக்கடிகளை கொடுத்து வந்தார். மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தியே கட்சியை ஒன்றுபடுத்தி இருக்கிறோம்.

    மீண்டும் கட்சிக்குள் வந்தால் தனது தலைமையில் தனித்தே செயல்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல அவரது ஆதரவு வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு பதவிகள் பெற்றுத்தர முயற்சிப்பார். அது கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

    சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்திக்கவும் தயங்காதவர். வருங்காலத்தில் அவரது கையை பலப்படுத்த தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினால் சமாளிக்க வேண்டியது வரும்.

    முக்கியமான முடிவுகளை தலைமை எடுக்கும் போது அவரும் அதை ஒருமனதாக ஆதரிப்பாரா? இப்படி பல்வேறு காரணங்களை அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரம் தொண்டர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களையும் கூறுகிறார்கள். தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் தான் பிரச்சினை ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வமும் கட்சி விசுவாசிதான். அவருக்கென்றும் குறிப்பிட்ட ஆதரவை வைத்துள்ளார். கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு கூடுதல் பலம் தான் தேவை.

    பொதுச்செயலாளர் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியும் முன்பு போல் இருக்கமாட்டார். ஓ.பி.எஸ்.சால் கட்சிக்குள் பிரச்சினை என்றால் அதை அவரால் நிச்சயம் எதிர்கொள்ள முடியும். அந்த வகையில் ஓ.பி.எஸ்.சை சேர்ப்பதும் பலமாகத்தான் இருக்கும்.

    பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏதாவது ஒரு பதவியை கொடுத்து அமர வைக்கலாம்.

    நாம் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜனதாவும், ஓ.பன்னீர்செல்வம் இணைவதை விரும்புகிறது. அதனால் தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களை தவிர்க்க முடியாது என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்தார்.

    ஒன்று பா.ஜனதாவுடன் இணைந்து தி.மு.க. எதிர்ப்பில் தீவிரம்காட்ட வேண்டும். அல்லது தைரியமாக முடிவெடுக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. செய்ய வேண்டியதை இப்போது பா.ஜனதா செய்கிறது.

    தி.மு.க. அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தவில்லை. இதற்கெல்லாம் கட்சி பிரச்சினைதான் காரணம்.

    எனவே எல்லா வழிகளிலும் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும். ஓ.பி.எஸ்.சை நிபந்தனைகளின் பேரில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். தேர்தல் வருவதற்குள் கட்சி முழு பலம்பெற வேண்டும் என்கிறார்கள்.

    • அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது.
    • 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனுதாக்கல் செய்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி பெயரில் 224 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 19-ந்தேதி நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை வருகிற 24-ந்தேதி வரை அறிவிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் இந்த வழக்கும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் 22-ந்தேதி (இன்று) விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் இன்று ஐகோர்ட்டில் நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை நீதிபதி குமரேஷ்பாபு நிராகரித்தார். அவரை முறைப்படி மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    பின்னர் இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் தொடங்கியது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதாடுகையில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது. 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமற்றது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என எடுத்துள்ள முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் உள்ளிட்டவை விதிக்கப்பட்டன. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்து விட்டு அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தி உள்ளனர்.

    அ.தி.மு.க. கட்சி விதிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு திருத்த முடியாது.

    ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஜூன் 23-ந்தேதி பொது குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தது தவறு. ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அழைப்பு விடுத்தனர்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால்தான் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்குகள் தொடரப்பட்டன. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

    இது தொடர்பான முடிவை விசாரணை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எந்த கோர்ட்டும் அறிவிக்கவில்லை. எனவே ஜூன் 11-ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் ஜூன் 23-ந்தேதி பொதுக்குழுவில் முன் வைக்கப்படாத நிலையில் அப்பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்? இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டும் கூறவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள் தான். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர். அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர் போட்டியிட முடியாது என்பதும், கட்சியில் 10 ஆண்டுகளும், தலைமை கழக நிர்வாகிகளாக 5 ஆண்டுகளும் இருப்பவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதும் புதுமையான விதி.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடியும் என அறிவித்துள்ளதன் மூலம் 20 மாவட்ட செயலாளர்களை எப்படி சந்தித்து முன்மொழியவும், வழி மொழியவும் கோர முடியும்.

    ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து சிறப்பு தீர்மானத்தை யார் கொண்டு வந்தது என்று கூறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கவில்லை. இந்த தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என அஜண்டா எதுவும் இல்லை.

    தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீசு தரவில்லை. முன் கூட்டியே அறிவிக்கவில்லை. பொதுக்குழுவுக்கு இது போல ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. 3-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வந்தாலும் முதலில் விளக்கம் கேட்க வேண்டும்.

    தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்ததாக ஒரு காரணத்தை எளிதாக கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நீக்கியது முழுமையாக தன்னிச்சையானது. பொதுக்குழுவுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது.

    ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுத்த முறை கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு விரோதமானது.

    அரசியல் என்பது ஜனநாயகம் தொடர்புடையது. உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூற முடியாது. கட்சி ஒன்றும் கிளப் அல்லது சங்கம் இல்லை. இது ஜனநாயக கொள்கை தொடர்பானது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் ஏதேச்சை அதிகாரமானது.

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். பொதுக்குழுவின் அதிகாரம் கட்சியின் விதிகளின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒற்றை தலைமையை மக்கள் விரும்புகின்றனர், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எம்.ஜி.ஆரின் விருப்பம் தொண்டர்களின் முடிவின்படி செயல்பட வேண்டும் என்பதுதான். பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமை பதவியை ஒழிக்க முடியாது.

    6.12.21 அன்று முதல் 5 ஆண்டு பதவி காலம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் இருக்கும் போது அதற்கு இணையாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி உள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து விட்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் செல்வாக்கு உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

    அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கையும் வாபஸ் பெற தயார்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    தொடர்ந்து வக்கீல்கள் வாதம் நடந்தது.

    • ஊரப்பாக்கம் ஊராட்சி 1-வது வார்டு அவைத் தலைவராக சுந்தரம், செயலாளராக வெங்கடேசன், இணைச் செயலாளராக சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • காயத்ரி நகர் கிளை அவைத் தலைவராக சசிகுமார், செயலாளராக கிருஷ்ணவேணி, கணபதி நகர் கிளை அவைத் தலைவராக பாஸ்கர், செயலாளராக சுரேஷ் உள்பட மொத்தம் 135 பேர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்துக்கு 135 புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊரப்பாக்கம் ஊராட்சி 1-வது வார்டு அவைத் தலைவராக சுந்தரம், செயலாளராக வெங்கடேசன், இணைச் செயலாளராக சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    துணை செயலாளர்களாக நித்தியா, கண்ணன், பொருளாளராக குமார் மேலமைப்பு பிரதிநிதிகளாக கவிதா, பாலாஜி, ரவி, செல்லியம்மன் நகர் கிளை அவைத் தலைவராக பாலு, செயலாளராக அருள், இணைச் செயலாளராக புஷ்பா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காயத்ரி நகர் கிளை அவைத் தலைவராக சசிகுமார், செயலாளராக கிருஷ்ணவேணி, கணபதி நகர் கிளை அவைத் தலைவராக பாஸ்கர், செயலாளராக சுரேஷ் உள்பட மொத்தம் 135 பேர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    பழனியம்மாள் நாச்சியார்

    ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "உங்களைப் போலவே நானும் கலங்குகிறேன். மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே. ஒரு முதலமைச்சரைப் பெற்றுக்கொடுத்தோம் என்ற பெருமாட்டியின் பெருமை மறைவதில்லை. என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே. எல்லாத் துன்பங்களிலிருந்தும் காலம் உங்களை மீட்டெடுப்பதாகுக" என்று பதிவிட்டுள்ளார்.


    • மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தார்.

    காலை 10.15 மணிக்கு அங்கு வந்த அவரை அவரது ஆதரவாளர்கள் அழைத்து சென்றனர். பின்னர் ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கும் மலர் தூவினார்.

    இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.

    முன்னதாக ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க உயர்கல்வி மன்ற வளாகத்தின் முன்பு ஓ.பி.எஸ். தரப்பு செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் கே.ஜி.இளங்கோவன் தொண்டர்களுடன் காமராஜர் சாலையில் காத்து நின்றனர்.

    தென்சென்னை மாவட்ட செயலாளர் சதீஷ் என்பவர், ஆதரவாளர்களுடன் நின்ற இளங்கோவனை போலீசார் மூலம் உள்ளே போகச் சொன்னதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் நாங்கள் சாலையில் நிற்போம். எங்களை எப்படி உள்ளே போக சொல்வீர்கள் என்று வாய் தகராறில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கே.ஜி.இளங்கோவன் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்... இப்படியே செய்தால் ஓ.பி. எஸ்.சுக்கு தொண்டர்களே இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கும் தோனியில் அக்கூட்டத்தில் பேசி உள்ளார்.

    இது அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க நின்ற மூத்த நிர்வாகிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டில் காத்து இருந்தனர்.

    சென்னை:

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையூட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நடந்த விசாரணையின்போது நீதிபதிகள், பொதுக்குழுவை கூட்டி ஈரோடு தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும். அக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வமும், ஆதரவு நிர்வாகிகளும் பங்கேற்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் வேட் பாளரை தேர்வு செய்ய வேண்டும் என இவ்வழக்கில் நீதிபதிகள் கூறியதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதற்கான ஏற்பாடுகளை நேற்று மாலையில் இருந்தே தொடங்கிவிட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதத்தை பெற்று கோர்ட்டில் சமர்பிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கையில் இறங்குவது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதற்கு என்ன சாத்திய கூறுகள் உள்ளன என்பது பற்றி ஆராய முடிவு செய்தனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டில் காத்து இருந்தனர்.

    ஈரோடு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 7-ந்தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை பின்பற்ற கால அவகாசம் தேவைப்படும்.

    எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு மிக குறைவு என்பதால் சில முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்க உள்ளனர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இரட்டை இலை கிடைத்தால் அதனை ஏற்று தேர்தல் களம் காணலாம் எனவும் கிடைக்காதபட்சத்தில் இரட்டை இலையில் போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டாம் எனவும் ஆலோசிக்கப்படுகிறது.

    அதனால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதன் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவை பெற முடியும் என்ற அடிப்படையில் விவாதிக்கப்படுகிறது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பொதுக்குழு வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடலாம் எனவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ள ஆலோசனையின்படி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவது என முடிவு செய்யப்படுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பாக விரைவில் வெளியிடுகிறார். இக்கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார்.

    • எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார்.

    கொங்கு மண்டலமான ஈரோடு கிழக்கு தொகுயில் கடந்த சட்டமன்ற தேர்வில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் களம் இறங்கிய த.மா.கா. வேட்பாளர் யுவராஜா சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்தார். எனவே இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அவர் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




    இந்நிலையில் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்களின் அன்புத் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    ×