search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயார்- ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். வக்கீல் பரபரப்பு தகவல்
    X

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயார்- ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். வக்கீல் பரபரப்பு தகவல்

    • அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது.
    • 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18 மற்றும் 19-ந்தேதிகளில் நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனுதாக்கல் செய்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி பெயரில் 224 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 19-ந்தேதி நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை வருகிற 24-ந்தேதி வரை அறிவிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் இந்த வழக்கும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் 22-ந்தேதி (இன்று) விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் இன்று ஐகோர்ட்டில் நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை நீதிபதி குமரேஷ்பாபு நிராகரித்தார். அவரை முறைப்படி மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

    பின்னர் இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் தொடங்கியது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல் குரு கிருஷ்ணகுமார் வாதாடுகையில் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி 2026-ம் ஆண்டு வரை நீடிக்கிறது. 1977-ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் அவரை கட்சியில் இருந்து நீக்கியது நியாயமற்றது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என எடுத்துள்ள முடிவுகள் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் உள்ளிட்டவை விதிக்கப்பட்டன. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்து விட்டு அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட புதிய நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தி உள்ளனர்.

    அ.தி.மு.க. கட்சி விதிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு திருத்த முடியாது.

    ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஜூன் 23-ந்தேதி பொது குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தது தவறு. ஜூன் 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் அழைப்பு விடுத்தனர்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதனால்தான் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்குகள் தொடரப்பட்டன. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. கட்சியின் அடிப்படை விதிகளில் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

    இது தொடர்பான முடிவை விசாரணை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எந்த கோர்ட்டும் அறிவிக்கவில்லை. எனவே ஜூன் 11-ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் ஜூன் 23-ந்தேதி பொதுக்குழுவில் முன் வைக்கப்படாத நிலையில் அப்பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்? இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக சுப்ரீம் கோர்ட்டும் கூறவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    பொதுக்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள் தான். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளனர். அடிப்படை உறுப்பினர்கள் யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் அடிப்படை உறுப்பினர் போட்டியிட முடியாது என்பதும், கட்சியில் 10 ஆண்டுகளும், தலைமை கழக நிர்வாகிகளாக 5 ஆண்டுகளும் இருப்பவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதும் புதுமையான விதி.

    ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடியும் என அறிவித்துள்ளதன் மூலம் 20 மாவட்ட செயலாளர்களை எப்படி சந்தித்து முன்மொழியவும், வழி மொழியவும் கோர முடியும்.

    ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து சிறப்பு தீர்மானத்தை யார் கொண்டு வந்தது என்று கூறவில்லை. ஓ.பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கவில்லை. இந்த தீர்மானம் கொண்டு வர அவசியம் இல்லை. கட்சிக்கு துரோகம் செய்து விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என அஜண்டா எதுவும் இல்லை.

    தீர்மானம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீசு தரவில்லை. முன் கூட்டியே அறிவிக்கவில்லை. பொதுக்குழுவுக்கு இது போல ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. 3-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் கொண்டு வந்தாலும் முதலில் விளக்கம் கேட்க வேண்டும்.

    தி.மு.க.வுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்ததாக ஒரு காரணத்தை எளிதாக கூறி நடவடிக்கை எடுத்துள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரை நீக்கியது முழுமையாக தன்னிச்சையானது. பொதுக்குழுவுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது.

    ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. சாதாரண உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுத்த முறை கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் கொள்கைக்கு விரோதமானது.

    அரசியல் என்பது ஜனநாயகம் தொடர்புடையது. உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூற முடியாது. கட்சி ஒன்றும் கிளப் அல்லது சங்கம் இல்லை. இது ஜனநாயக கொள்கை தொடர்பானது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் ஏதேச்சை அதிகாரமானது.

    எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். பொதுக்குழுவின் அதிகாரம் கட்சியின் விதிகளின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒற்றை தலைமையை மக்கள் விரும்புகின்றனர், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எம்.ஜி.ஆரின் விருப்பம் தொண்டர்களின் முடிவின்படி செயல்பட வேண்டும் என்பதுதான். பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமை பதவியை ஒழிக்க முடியாது.

    6.12.21 அன்று முதல் 5 ஆண்டு பதவி காலம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் இருக்கும் போது அதற்கு இணையாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி உள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து விட்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களின் செல்வாக்கு உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

    அந்த விதிகளை திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளார். நிபந்தனைகளை நீக்கினால் வழக்கையும் வாபஸ் பெற தயார்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    தொடர்ந்து வக்கீல்கள் வாதம் நடந்தது.

    Next Story
    ×