search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூதுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தகவல்- ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பதில் அ.தி.மு.க.வுக்குள் மாறுபட்ட கருத்துக்கள்
    X

    தூதுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தகவல்- ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பதில் அ.தி.மு.க.வுக்குள் மாறுபட்ட கருத்துக்கள்

    • ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
    • தொண்டர்களை திரட்டி மோதி பார்க்க ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகளும் தோற்றுப்போனது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு திரும்பி வர ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

    ஓமலூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும் போது அவருக்கு எதிராக போட்டியிட்ட நபருக்கு உதவியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் 3 முறை முதல்-அமைச்சர் என்று கூறிக்கொள்கிறார். கலெக்டர் விடுமுறையில் சென்று விட்டால் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு. அதுபோல் பொறுப்பாக இருந்தார்.

    என்னிடம் கட்சிக்கு வந்துவிடுகிறேன் என்று தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

    கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு அவரது மகனை பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற செய்தார். மற்ற இடங்களுக்கு சென்று கட்சிப்பணிகளை அவர் ஆற்றவில்லை.

    அவர் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க. பகடைக்காயாக வைத்து கொண்டுள்ளது. இதனை கட்சி நிர்வாகிகள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யுத்தத்தை தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். தொண்டர்களை திரட்டி மோதி பார்க்க அவர் எடுத்த முயற்சிகளும் தோற்றுப்போனது.

    சட்ட ரீதியாக அவர் தொடுத்த அத்தனை கணைகளையும் எடப்பாடி பழனிசாமியும் சட்ட ரீதியாக எதிர்கொண்டு வீழ்த்தினார். கட்சி முற்றிலுமாக எடப்பாடி பழனிசாமி வசமாகி விட்டது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஒன்று மீண்டும் அ.தி.மு.க.வில் சேருவது அல்லது வேறு கட்சியில் இணைவது, இல்லாவிட்டால் தனிக்கட்சி தொடங்குவது ஆகிய 3 வழிகள் தான் உள்ளன.

    இதில் தனிக்கட்சி தொடங்குவதும், வேறு கட்சிகளில் இணைவதும் சரிபட்டு வராது என்று ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் அ.தி.மு.க.வுக்குள் திரும்பி செல்லும் முயற்சியை அவர் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கு அ.தி.மு.க.வுக்குள் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேல்மட்ட தலைவர்களை பொறுத்தவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வது சரியாக இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள் வருமாறு:-

    தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கட்சிக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பல்வேறு சட்ட நெருக்கடிகளை கொடுத்து வந்தார். மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தியே கட்சியை ஒன்றுபடுத்தி இருக்கிறோம்.

    மீண்டும் கட்சிக்குள் வந்தால் தனது தலைமையில் தனித்தே செயல்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல அவரது ஆதரவு வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு பதவிகள் பெற்றுத்தர முயற்சிப்பார். அது கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும்.

    சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை சந்திக்கவும் தயங்காதவர். வருங்காலத்தில் அவரது கையை பலப்படுத்த தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தினால் சமாளிக்க வேண்டியது வரும்.

    முக்கியமான முடிவுகளை தலைமை எடுக்கும் போது அவரும் அதை ஒருமனதாக ஆதரிப்பாரா? இப்படி பல்வேறு காரணங்களை அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரம் தொண்டர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்களையும் கூறுகிறார்கள். தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட அதிகார போட்டியால் தான் பிரச்சினை ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வமும் கட்சி விசுவாசிதான். அவருக்கென்றும் குறிப்பிட்ட ஆதரவை வைத்துள்ளார். கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு கூடுதல் பலம் தான் தேவை.

    பொதுச்செயலாளர் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியும் முன்பு போல் இருக்கமாட்டார். ஓ.பி.எஸ்.சால் கட்சிக்குள் பிரச்சினை என்றால் அதை அவரால் நிச்சயம் எதிர்கொள்ள முடியும். அந்த வகையில் ஓ.பி.எஸ்.சை சேர்ப்பதும் பலமாகத்தான் இருக்கும்.

    பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏதாவது ஒரு பதவியை கொடுத்து அமர வைக்கலாம்.

    நாம் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜனதாவும், ஓ.பன்னீர்செல்வம் இணைவதை விரும்புகிறது. அதனால் தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களை தவிர்க்க முடியாது என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்தார்.

    ஒன்று பா.ஜனதாவுடன் இணைந்து தி.மு.க. எதிர்ப்பில் தீவிரம்காட்ட வேண்டும். அல்லது தைரியமாக முடிவெடுக்க வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. செய்ய வேண்டியதை இப்போது பா.ஜனதா செய்கிறது.

    தி.மு.க. அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்தவில்லை. இதற்கெல்லாம் கட்சி பிரச்சினைதான் காரணம்.

    எனவே எல்லா வழிகளிலும் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும். ஓ.பி.எஸ்.சை நிபந்தனைகளின் பேரில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். தேர்தல் வருவதற்குள் கட்சி முழு பலம்பெற வேண்டும் என்கிறார்கள்.

    Next Story
    ×