search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு இடைத்தேர்தல்"

    • காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரசாரம் செய்யப்பட்ட போது பல்வேறு விதிமீறல்கள் நடந்தது.

    காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
    • தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசும் போட்டியிட்டனர்.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருந்தது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10,156 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.

    குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்காக லேப்டாப், சைக்கிள் திட்டங்களை கொண்டு வந்தார். தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற முதல் அ.தி.மு.க திட்டங்களை நிறுத்தி வருகிறது.

    தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் 42 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுக்களை நாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

    அவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே தி.மு.க.வினர் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பா.ஜனதாவுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து வரும் கட்சியாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரசார கூட்டத்தில் சீமான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக புகார் செய்யப்பட்டது.
    • சீமானுக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் 13-ந் தேதி பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பிரிவினர் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து சீமானுக்கு எதிராக குறிப்பிட்ட பிரிவினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். மேலும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையமும் நாம் தமிழர் வேட்பாளருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் குறிப்பிட்ட சமுதாயத்தின் சார்பில் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பிரசார கூட்டத்தில் சீமான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியதாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோவை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டு ஏன் சீமான் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதலாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பற்றி அவதூறாக பேசியதாகவும், அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது கூடுதலாக இன்று கருங்கல்பாளையம் போலீசார் 153 (பி), (1சி), 505 (1சி), 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பண்ணை வீடுகளில் தங்கியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • தொகுதி முழுவதும் சொகுசு கார்களின் அணிவகுப்பும் அதிக அளவில் இருந்தது.

    ஈரோடு கிழக்கு தொகுதி...

    தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பரவலாக பேசப்பட்ட இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

    இவ்வளவு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் காங்கிரஸ்-அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் பிரசார களத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் கடந்த 40 நாட்களாக ஈரோட்டிலேயே தங்கி தேர்தல் பணியாற்றி வந்தனர். இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு கவுரவ பிரச்சனையாக இருந்தது. இதே போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அவர்களும் கடுமையாக போராடினர். அரசியல் கட்சியினருக்கு அங்கீகாரம் பெறும் தேர்தலாக அமைந்தாலும் இந்த தொகுதி வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாகவே மாறியது. தேர்தல் தேதி ஜனவரி மாதம் 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அன்று முதல் ஈரோடு தொகுதியில் பணமழை கொட்டத்தொடங்கியது.

    பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பண்ணை வீடுகளில் தங்கியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் தொகுதி முழுவதும் சொகுசு கார்களின் அணிவகுப்பும் அதிக அளவில் இருந்தது.

    தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்வதை விட்டு விட்டு கடந்த 40 நாட்களாக பிரசாரத்தில் குதித்தனர். தினமும் அவர்கள் பிரசாரத்துக்கு சென்று ரூ.1000 வரை சம்பாதித்தனர். இதனால் மதுகடைகள், ஓட்டல்களில் 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டாகவே இருந்தது. இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.

    அதோடு இல்லாமல் பிரியாணி, மது, ஓட்டுக்கு பணம், சேலை, லுங்கி, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் என ஏராளமான பரிசுபொருட்கள் அரசியல் கட்சியினர் வாரி வழங்கினர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீது அனைவருக்குமே பொறாமை ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ், நகைச்சுவை வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டது. சாதாரணமாக 4 பேர் உள்ள ஒரு குடும்பத்தில் பணம், பரிசு பொருட்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் ஒரு குடும்பத்துக்கு கிடைத்தது. தேர்தல்நேரம் நெருங்க நெருங்க வாக்காளர்கள் இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர்.

    அதே போல் வாக்குப்பதிவு அன்றும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் கொடுத்த டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் காத்து கிடக்கின்றனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் இரவு நேரங்களில் மட்டுமே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டது. அதே போல் தற்போதும் இரவில் யாராவது பரிசு பொருட்களுடன் வருவார்களா என்று பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர். தேர்தல் முடிந்து 8 நாட்களாகியும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசியல் கட்சியினர் கொடுத்த பணத்தை வைத்து தாராளமாக செலவு செய்து வருகிறார்கள். தேர்தல் அலை ஓய்ந்தும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வசதியாகவே உள்ளனர். தொடந்து பொதுமக்களிடம் பணபுழக்கம் அதிகமாகவே உள்ளது. டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்று தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகளை தினமும் கேட்டு வருகிறார்கள்.

    தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கிழக்கு தொகுதி மக்கள் அதற்குள் தேர்தல் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

    • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வியாபாரிகள் ஈரோட்டுக்கு வர தயக்கம் காட்டி வந்தனர். ஒரு சிலர் மட்டுமே வந்து வியாபாரம் செய்து வந்தனர்.
    • ஜவுளி மற்றும் மஞ்சள் வியாபாரம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மந்தமாகவே காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி இறந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என ஜனவரி 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தது. இதனால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி பணம் கொண்டு செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுபாடுகளை தேர்தல் அதிகாரிகள் விதித்தனர்.

    இதையடுத்து கிழக்கு தொகுதி முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு ஜவுளி மற்றும் மஞ்சள் தொழில் நகரமாக திகழ்வதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஈரோடு வந்து ஜவுளி மற்றும் மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் வியாபாரிகள் ஈரோட்டுக்கு வர தயக்கம் காட்டி வந்தனர். ஒரு சிலர் மட்டுமே வந்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜவுளி மற்றும் மஞ்சள் வியாபாரம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மந்தமாகவே காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி தேர்தல் முடிவுகள அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று தேர்தல் விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது.

    இதையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் இன்று வியாபாரிகள் பலர் வழக்கம் போல் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான ஜவுளி வகைகளை வாங்கி சென்றனர். இதே போல் மஞ்சள் வியாபாரிகளும் எப்போதும் போல் வெளிமாவட்ட மற்றும் வெளி மாவட்டங்களுக்கு மஞ்சள் வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

    இதனால் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள மற்றும் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று 8,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • மறைந்த இளம் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. தொகுதியில் ஒரு வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக வலம் வந்திருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளார். மொத்தம் பதிவான வாக்குகள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 அதாவது 74.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் இளங்கோவன் பெற்றிருக்கும் வாக்குகள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 அதாவது 64.58 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். எப்படி சாத்தியமாயிற்று இவ்வளவு பெரிய வெற்றி?

    அ.தி.மு.க. எப்படி இவ்வளவு சரிவை சந்தித்தது? என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நிச்சயம் எண்ணி பார்த்திருக்கும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த வகையில் இளங்கோவன் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி 2011-ம் ஆண்டு உருவானது. அப்போதிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2011, 2016, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் 4 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

    2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று 10 ஆயிரத்து 644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்று 7,794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று 8,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    கொங்கு மண்டலம் என்றாலே அ.தி.மு.க. வலுவான பகுதி என்ற பெயர் உண்டு. அது தவறும் அல்ல. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க. தோற்றுப்போனது என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவும் இடம்பெற்று இருந்தது. இந்த 2 கட்சிகளின் வாக்குகளும் எங்கே போனது? என்ற ஆச்சரியமும் வருகிறது.

    இந்த வெற்றிக்கு காரணம் ஆளும் கட்சியின் நல்லாட்சி மற்றும் மக்கள் தி.மு.க. கூட்டணி மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்றெல்லாம் ஆளும் கட்சி தரப்பில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சி தரப்பில் ஜனநாயகம், பணநாயகத்தால் தோற்கடிக்கப்பட்டது என்றும் பேசப்படுகிறது.

    இவையெல்லாம் மேம்போக்கான வாதமாகத்தான் இருக்கும். உண்மையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதியில் என்னதான் நடந்திருக்கிறது என்று அலசிப்பார்க்கும் போது பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.

    மறைந்த இளம் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. அந்த தொகுதியில் ஒரு வித்தியாசமான மக்கள் பிரதிநிதியாக வலம் வந்திருக்கிறார். எல்லா தரப்பினரிடமும், குறிப்பாக சிறுபான்மையினரிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்து உள்ளார். இதன் மூலம் இந்த தேர்தலில் களம் இறங்கியது அவரது தந்தை என்பதும், அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பொறுத்தவரை ஒரு தலைவர் அந்தஸ்தில் இருப்பவர் அவர் மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்ற எதுவும் வந்ததில்லை.

    இதனால் மறைந்த எம்.எல்.ஏ.வின் அனுதாபம், இளங்கோவன் மீதுள்ள மரியாதை இந்த இரண்டும் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

    எல்லாவற்றையும் விட முக்கியம் தி.மு.க. கூட்டணி வகுத்த தேர்தல் வியூகம். களத்தில் போட்டியிட்டது காங்கிரசாக இருந்தாலும், இந்த தேர்தல் முடிவு 21 மாத கால ஆட்சிக்கு ஒரு அங்கீகாரமாகவும், அடுத்து வர போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவும் அமையும் என்பதால் இந்த தேர்தலை தி.மு.க. இடைத்தேர்தலாக கருதவில்லை. தங்களுக்கான எடைத்தேர்தலாகவே நினைத்து பணியாற்றியது.

    இதனை ஒரு கவுரவ பிரச்சினையாகவும் எடுத்ததன் விளைவு, தி.மு.க.வே போட்டியிடுவது போன்ற எண்ணத்தில் அந்த கட்சியினர் களம் இறங்கி பணியாற்றினார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தி.மு.க.வினர் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்கள். ஒரு யுத்த களத்தில் எப்படி வியூகங்கள் வகுக்க வேண்டுமோ அதே போல் வியூகத்தை அமைத்தார்கள். மொத்தம் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 746 வாக்காளர்களில் எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்பதை முதலில் பிரித்து வகுத்து வைத்தார்கள்.

    முதலியார்கள் 80 ஆயிரத்து 142 பேர். அதாவது 35 சதவீதம் பேர். அடுத்ததாக இஸ்லாமியர்கள் 62 ஆயிரத்து 126 பேர். அதாவது 27.15 சதவீதம். அடுத்ததாக பிள்ளைமார் 19 ஆயிரத்து 166 பேர். அதாவது 8.37 சதவீதம். தலித்துக்கள் 14 ஆயிரத்து 360 பேர். அதாவது 6.28 சதவீதம். கிறிஸ்தவர்கள் 12 ஆயிரத்து 650 பேர். அதாவது 5.53 சதவீதம், வெள்ளாள கவுண்டர்கள் 9 ஆயிரத்து 450 பேர் அதாவது 4.13 சதவீதம். நாயக்கர் 8 ஆயிரத்து 620 பேர். அதாவது 3.77 சதவீதம். இவர்களுக்கு அடுத்தப்படியாக வட இந்தியர்கள், பிராமணர்கள், நாடார்கள், தேவர்கள், போயர், வன்னியர், விஸ்வகர்மா, செட்டியார்கள் ஆகிய சமூகத்தினர் சராசரியாக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் வரை இருக்கிறார்கள்.

    இந்த சதவீதத்தை அடிப்படையாக வைத்து முதலியார்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் ஆகிய 4 சமூகத்தினர் 73.99 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இந்த 73 சதவீதத்தில் 60 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பது தி.மு.க.வினருக்கு கட்சி மேலிடத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. இந்த இலக்கை எட்டுவதற்குதான் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று திட்டமிட்டு தேர்தல் களத்தில் கையாண்டு இருக்கிறார்கள். முதலில் 11 அமைச்சர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியாக பகுதியை பிரித்து இருக்கிறார்கள். 3 முதல் 4 வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் தேர்தல் பணியை கையில் எடுத்துள்ளார்கள்.

    அதற்கு ஏற்றாற்போல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களை தங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வைத்துக் கொண்டார்கள். அமைச்சர்கள் மட்டுமல்லாது எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என்று தெரு வாரியாக ஒரு பெரிய படை பலமே முகாமிட்டது. அப்படி முகாமிட்டவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் குறைந்த பட்சம் 100 முதல் 250 வாக்காளர்களை வைத்திருந்தார்கள். அவர்களை தினசரி சந்திப்பது, கவனிப்பது என்று தங்கள் கண் பார்வையிலேயே வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 20 நாட்களாக வேறு எதை பற்றியும் சிந்திக்க விடாத வகையில் ஒருவிதமான மூளை சலவைக்குள் கொண்டு செல்வது போல் கொண்டு சென்று விட்டார்கள்.

    அதில் முக்கியமாக எதிராளிகளை சந்திக்க முடியாத வகையில் அவர்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி வைத்துக்கொண்டார்கள். அடுத்ததாக பணத்துக்கு பஞ்சம் இல்லை. பரிசு பொருட்களுக்கும் குறைவு இல்லை. வாரி வழங்கப்பட்டது. 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் சம்பளம் என்ற அடிப்படையில் புதுவகையான வேலைத்திட்டமும் செயல்படுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட வாக்காளர்கள் ஒருவித மயக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்தார்கள். இவைகளால்தான் இந்த வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

    • தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 18-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான அன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையிட்டு வந்தனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக அளவில் ஜவுளி சார்ந்த தொழில்கள் நடைபெற்று வந்தன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஜவுளி சந்தை மந்த நிலையில் நடைபெற்று வந்தது. இதேப்போல் கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வியாபாரமும் பாதிப்பு ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 54 நாட்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவடைந்தது. தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவுபெறுகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    • அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 38.41 சதவீதம் இருந்தது.
    • இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 25.75 சதவீதமாக குறைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனது கையில் வைத்திருந்தது.

    பின்னர் கடந்த 2021-ம்ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கோபி செட்டிபாளையம், பவானிசாகர், பவானி, பெருந்துறை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், மொடக்குறிச்சியில் கூட்டணி கட்சியான பா.ஜனதாவும் வெற்றி பெற்றது. 8 தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி 5 இடங்களை கைப்பற்றியது.

    இதில் அந்தியூர், ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வும், கிழக்கில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசும் வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும் 38.41 சதவீத வாக்குகள் கிடைத்தது.

    இந்த நிலையில் திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இந்த தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 66 ஆயிரத்து 233 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    அ.தி.மு.க.வின் கோட்டையாக விளங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 38.41 சதவீதம் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் 25.75 சதவீதமாக குறைந்தது.

    தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 1432 வாக்குகள் பெற்றார். இது 0.84 சதவீதமாகும். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 110156 வாக்குகள் பெற்றார். இது 64.58 சதவீதமாகும். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43923 வாக்குகள் பெற்றார். இது 25.75 சதவீதமாகும். இதே போல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10827 வாக்குகள் பெற்றார். இது 6.35 சதவீதமாகும். கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் குறைந்தது கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கணிசமாக அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்து காணப்படும் இந்த தொகுதியில் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் பல்வேறு வியூகங்களும் அமைத்து அ.தி.மு.க.வின் ஓட்டுகளை காங்கிரசுக்கு விழ வைத்துள்ளனர். இதனால் கடந்த தேர்தலை விட அதிக ஓட்டு வித்யாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    • ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது.
    • தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் இந்த வெற்றியின் பெருமைகள் சேரும். அவரின் 20 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு அங்கீகாரமாக தான் மக்கள் இந்த வெற்றியை தந்திருக்கிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் ராகுல்காந்தி மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் அன்புக்கும், பாசத்துக்கும், ஆதரவுக்கும் எடுத்துக்காட்டாக இந்த வெற்றியை பார்க்கிறேன். ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் மூலமாக அவர் மீது தமிழக மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    ஈரோட்டில் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது. அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து முதல்-அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கிற சட்டப்பேரவையில் நானும் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அனுபவத்திலும், தியாகத்திலும், செயல் திறனிலும் பல மடங்கு உயர்ந்தவர். வருகிற நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    இன்றைக்கு சில பேர் தேர்தல் ஆணையம் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை, மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பேட்டி கொடுத்தபோது, தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதாக அவரே கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் நாகரிகமாக, நாணயமாக, சட்டப்படி நடந்து கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அனுமதியின்றி செயல்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் பணிமனைகள் மூடப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டது.

    எனது மகன் விட்டு சென்ற பணியை நான் தொடர உள்ளேன். ஏற்கனவே என் மகன் இங்கு பல பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அதனை நான் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க.
    • நாலாம்தர ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல எடப்பாடி பழனிசாமி பேசியதாக முதல்வர் விமர்சனம்

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

    இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த இடைத்தேர்தல் களத்தைத் தனது இழிவான அரசியலுக்குப் பயன்படுத்தியது அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியை மறந்து, தன்னிலை இழந்து மிகமோசமான சொற்களைப் பயன்படுத்தி பரப்புரை செய்தார் பழனிசாமி.

    வேட்டி இருக்கிறதா - மீசை இருக்கிறதா ஆண்மை இருக்கிறதா என்றெல்லாம் நாலாம்தர ஐந்தாம்தர அ.தி.மு.க. பேச்சாளரைப் போல அவர் பேசினார்.

    நான்காண்டுகாலம் தனது கையில் பதவி இருந்தபோது மக்களுக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழனிசாமி. அதனை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய்நீளம் காட்டினார். பதவியேற்ற நாள் முதல் தினந்தோறும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் எங்களைப் பார்த்து, 'எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை' என்றார்.

    பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போல பழனிசாமி நினைத்தார். அவரது ஆட்சிக்காலம் இருண்டகாலம் என்பதை மீண்டும் ஒரு முறை அவருக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.

    இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், கழக முன்னணியினர், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! இந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    • வழக்கமான திமுகவின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 15 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

    இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

    அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் அதிமுக சார்பில் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமங்கலம் பார்முலா என்கிற பெயரில் மக்களின் வாக்குகளை விலைபேசியதைப் போல, ஈரோடு கிழக்கு பார்முலா என ஒன்றை உருவாக்கி, ஆடு மாடுகளை அடைப்பதைப்போல் வாக்காளர்களை அடைத்து வைத்து அருவருக்கத்தக்க ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது ஆளும் திமுக.

    'வாக்காளர் பட்டியலில் முறைகேடு, மக்களை அடைத்து வைத்தல், கட்டற்ற முறையில் பணம், மது, பரிசுப் பொருட்கள் விநியோகித்தல், மக்களை மிரட்டி அச்சமூட்டுதல், கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களை கோயில் முன்னால் நிறுத்தி எலுமிச்சை பழத்தின் மீது சத்தியம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தி வாக்கு கொள்ளை நடத்தல்' என்று திமுக நடத்திய வரலாறு காணாத அட்டூழியங்களை அதிமுக வெளிக்கொண்டு வந்தும், புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    ஜாதி, மத ரீதியாக மக்களை பிளந்து அதன்மூலமாக வாக்குகளைப் பெறும் வழக்கமான திமுகவின் பாணியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரங்கேற்றப்பட்டது.

    திமுகவினர் பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த வெற்றி குறித்து பெருமை கொள்வது திமுகவுக்கு அழகல்ல.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது இடைத்தேர்தலில் அவரை விட சுமார் 15,000 வாக்குகள் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு.

    • 2வது இடத்தை அதிமுக வேட்பாளரும், 3வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்றனர்
    • இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு வித்தியாசம் அதிகமாகிக்கொண்டே சென்றது. இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனும் பின்தங்கினர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

    இறுதிச் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 7,984 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,115 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக, வேட்பாளர்களைத் தவிர யாரும் டெபாசிட் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

    ×