என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்குவாரா?- காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த ஆதரவு
    X

    தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறங்குவாரா?- காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த ஆதரவு

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டு உள்ளது.

    சூரம்பட்டி:

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா. எம்.எல்.ஏ. கடந்த 1 1/2 ஆண்டுகளாக பொதுமக்கள் பாராட்டும் வகையில் அவர்களது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் திடீரென்று கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் இறந்து 15 நாட்களுக்குள் இடைதேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.

    வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியலில் ஆர்வம் உள்ள பொதுமக்களிடையேயும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தாலும் வேட்பாளர் யார்? என்பதை தி.மு.க. உற்று கவனிக்கிறது. மறைந்த திருமகனின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதை தி.மு.க. விரும்புகிறது.

    அனுதாபம் மற்றும் அந்த தொகுதியின் செல்வாக்கு காரணமாக இளங்கோவன் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தி.மு.க.-காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏற்கனவே கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல கோபி எம்.பி. தொகுதியில் 2004-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணைய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    இதன் பிறகு ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டு உள்ளது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா? அப்படி காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று கேட்டபோது, இது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்று மழுப்பலாக கூறினார்.

    காங்கிரசில் வேட்பாளரை முடிவு செய்வதை இளங்கோவனிடமே விட்டுள்ளனர். அவரை போட்டியிடுமாறு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தி வருகிறார்கள்.

    இளங்கோவனோ அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே போட்டியிட விரும்பாத நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மக்கள் நேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×