search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild elephant"

    • ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது.
    • கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவையில் இருந்து நேற்று நீலகிரி மாவட்டம் மஞ்சூர் நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அப்போது கோவை- மஞ்சூர் சாலை கெத்தை பகுதியில் 2 குட்டிகளுடன் வந்திருந்த 3 காட்டுயானைகள் அரசு பஸ்சை வழிமறித்தன. இதனால் அந்த பஸ்சில் பயணித்தவர்கள் அச்சத்தில் அலறினர். மேலும் கோவை-மஞ்சூர் சாலையில் இருமார்க்கங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்த தகவலின்பேரில் குந்தா வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கையடக்க சைரன் மூலம் பெரியஅளவில் ஒலி எழுப்பி, நடுரோட்டில் முகாமிட்டு நின்ற காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சாலையில் முகாமிட்டு நின்ற யானைகள், அடர்ந்த காட்டுக்கு திரும்ப தொடங்கின.

    இதற்கிடையே ஒரு காட்டு யானை மட்டும் திடீரென வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆவேசமாக பிளிறியபடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக தங்களின் வாகனங்களை பின்னோக்கி இயக்கினர்.

    மேலும் தொடர்ந்து சைரன் ஒலியை எழுப்பி வந்ததால், ஊழியர்களை விரட்டி வந்த காட்டு யானை பின்னர் ஒருவழியாக அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    • ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அன்னியாலம், தாசரிப்பள்ளி பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தல்.

    ஓசூர்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்நிலையில், ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒரே நாளில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அன்னியாலம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தம்மா தோட்டம் வழியாக நடந்து சென்றபோது காட்டு யானை தாக்கி பலியானார்.

    தாசரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வதம்மாவும் யனை தாக்கியதில் உயிரிழந்தார்.

    இதையடுத்து, அன்னியாலம், தாவரக்கரை, தாசரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் யானையை காட்டுக்குள் விரட்ட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • வரலாற்று பிரசித்தி பெற்ற மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
    • காட்டு யானை கோபால சாமி கோவில் வளாகத்துக்கு வந்து சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலு பேட்டில் அமைந்துள்ளது கோபால சாமி மலை கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று அவ்வப்போது, மலைமீது உள்ள கோபால சாமி கோவில் வளாகத்துக்கு வந்து சிறிது நேரம் தங்கிவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று வருகிறது. இந்த வீடியோ பல முறை சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் கோபால சாமி மலை கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காட்டு யானை வருமா என, ஆர்வத்துடன் எதிர பார்ப்பார்கள். இதுவரை அந்த யானையால், எந்த அசம்பாவிதமும் ஏற்பட வில்லை.

    இந்நிலையில் காலை நேரத்தில் கோவில் வளாகத்திற்க்கு திடீரென அந்த காட்டு யானை வந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் குஷியடைந்தனர். அவர்கள் யானையின் அருகில் சென்று போட்டோ, வீடியோ செல்பி எடுத்தனர். ஆனால் யானை யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், அங்கிருந்து சென்றது.

    • கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.
    • ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே உள்ள அர்த்தம் வலசா என்ற இடத்தில் தண்டவாளத்தில் 7 காட்டு யானைகள் நின்று அட்டகாசம் செய்தன.

    இந்த கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.

    அந்த யானையை காணாமல் மற்ற யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன. 7 யானைகளும் தண்டவாள பகுதிகளிலேயே நின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்ப குதிக்குள் விரட்டினர்.

    இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து சீரானது.

    • யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
    • யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம்.

    அருவங்காடு:

    குன்னூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் உணவுக்காக இடம் பெயர்ந்து குன்னூர் மலைப்பாதை, கொல க்கம்பை மற்றும் தூதர்ம ட்டம் பகுதியிலும் முகாமிட்டு வருகிறது.

    குன்னூர் மலைப்பாதையில் குட்டியுடன் கூடிய 10 யானைகள் மலைப்பாதை மற்றும் மலை ரெயில் பாதைகளில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். இந்த யானை கூட்டத்தை விரட்ட குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் தலைமையில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு யானை கூட்டத்தை மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதியில் 2 குட்டி களுடன் மேலும் 5 யானைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போகும் நிலை உருவாகியுள்ளது. தூதர்மட்டம் பகுதியில் அந்த யானை கூட்டம் அங்குள்ள மேரக்காய், பீன்ஸ், கேரட் பயிரிடப்பட்ட விளைநிலங்களை சேதப்படுத்தியதுடன் அருகே உள்ள காய்கறி சேமிப்பு குடோன்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவறை களை முற்றிலுமாக சூறை யாடியது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த யானை கூட்டத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய் இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும் யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு ள்ளதால் வனத்துறையினர் தகரங்களைக் கொண்டு சத்தம் எழுப்பி விரட்டி அடிக்கும் பணியில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறுகையில் யானைகள் நடமாட்டம் குறித்து வன குழுவினர் ஆங்காங்கே இரவும், பகலுமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே யானைகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறியதை வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

    • எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.
    • தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிங்கோனா எஸ்டேட் பகுதியில் அந்த யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் சுற்றி திரிகிறது. அவற்றை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு குட்டிகளுடன் ரோட்டில் சுற்றி திரிந்து வருகிறது.

    அதிலும் குறிப்பாக ஒற்றை காட்டுயானை கடந்த சில நாட்களாக சின்கோனா பகுதியில் சுற்றி திரிகிறது. அது இரவுநேரத்தில் பஸ்சை வழிமறிப்பதும், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவதுமாக அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் சின்கோனா- பெரியகல்லார் சாலையில் நேற்று மதியம் ஒற்றை காட்டுயானை பட்டப்பகலில் உலா வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேயிலை பறிக்கும் தொழி லாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் பாதுகாப்பான இடம் தேடி தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே காட்டு யானை நடமாட்டம் பற்றி தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    வால்பாறை சின்கோனா ரோட்டில் ஒற்றை காட்டு யானை பட்டப்பகலில் நடந்துசென்ற சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
    • யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.

    வால்பாறையில் இருந்து நேற்று மாலை சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை பென்னட் என்பவர் இயக்கி வந்தார். பயணிகள் 15 பேர் பயணித்தனர்.

    சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.

    சாலையில் யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை சில அடி தூரத்தில் நிறுத்தி விட்டார்.

    யானை அங்கிருந்து நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    அப்போது பஸ்சில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பஸ்சை விட்டு கீழே இறங்கி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பயணிகளும் இணைந்து யானையை விரட்ட முயன்றனர்.

    ஆனால் யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் ஓடி சென்று பஸ்சில் ஏறி கொண்டார்.

    இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து சத்தம் எழுப்பினர். இதனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, கடந்த சில தினங்களாக இங்கு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன.
    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம்.

    வால்பாறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறை வனப்பகுதிக்கு திரண்டு வருவது வழக்கம்.

    இங்கு அவை 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும். மேலும் கேரளாவில் இருந்து காட்டு யானைகளின் இடப்பெயர்வு தொடர்ந்து 3 மாதம்வரை நீடிக்கும்.

    இந்நிலையில் கேரளாவில் இருந்து காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வால்பாறைக்கு வந்தபடி உள்ளன. அவை தற்போது கேரள மாநில வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சின்கோனா, மூடிஸ், நல்லமுடி, ஷேக்கல்முடி எஸ்டேட்டுகள் வழியாக வால்பாறைக்கு வந்து கொண்டு உள்ளன.

    இதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்து உள்ள 20 காட்டு யானைகள் தற்போது வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உலா வருகின்றன. மேலும் அங்குள்ள விளைநிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

    வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தேயிலை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக முகாமிட்டு நிற்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம், அப்படியே வெளியில் செல்வதாக இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலமங்கலம் அடுத்த விருப்பாச்சி நகரை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது45).

    இவரது மனைவி திம்மக்கா. கூலி வேலை செய்து வரும் சாக்கப்பாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். சாக்கப்பா இன்று விருப்பாச்சி நகரிலிருந்து சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாக்கப்பாவை தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

    பலத்த காயமடைந்த சாக்கப்பாவை பொது மக்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து ஓசூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிகிரிப் பள்ளி பகுதியில் ஒற்றை காட்டு யானையும் சான மாவு வனப்பகுதியில் 5 காட்டு யானைகளும் சுற்றித் திரிவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கேசி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் தாண்டிக்குடி முருகன் கோவில் கடுகுதடி பகுதியில், கடந்த 5 நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது. இந்த காட்சி, போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் பிறகு கல்லார் காப்பு காட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்து வத்தலகுண்டு வனவர் முத்துக்குமரன் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×