search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villupuram"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.130 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    விழுப்புரம்:

    பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்து அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 90 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கான ஒரு ஆண்டு கட்டணத்தை லாரி உரிமையாளர் சங்கம் செலுத்துவதை ஏற்றுக் கொண்டு சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் சரக்குகளை இறக்கப்பட்டதும் தொடர்ந்து இயக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் லாரிகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் லாரிகள் ஸ்டிரைக்கால் சில லாரிகள் மட்டுமே சென்றன.

    விழுப்புரம் மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் இயக்கப்படாததால் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து பொருட்கள் ஏற்றி செல்லும் 800 சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

    இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சரக்குகள் தேங்கி கிடக்கிறது.

    கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தொழிற்சாலைகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பண்ருட்டியில் இருந்து தினமும் கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கு 100-க்கணக்கான லாரிகளில் முந்திரி பருப்பு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    இன்று லாரிகள் ஓடாததால் முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளரும், உற்பத்தியாளர் சங்க தலைவருமான ரமேஷ் தெரிவித்தார். #LorryStrike
    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது அலுவலகம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதியில் உள்ளது. இதன் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு 24 மணிநேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

    அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தில் அவரது தனி உதவியாளர் தரணிதரன் தினமும் வந்து பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று அதனை அமைச்சரிடம் வழங்கி வருவார்.

    நேற்று இரவு அமைச்சர் அலுவலகத்தில் வலதுபுறத்தில் உள்ள கண்ணாடி மீது யாரோ? மர்ம மனிதர்கள் கல்வீசி சென்றுள்ளனர். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கி சிதறியது. இன்று காலை அமைச்சரின் தனி உதவியாளர் தரணிதரன் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது கண்ணாடி உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அமைச்சர் அலுவலகத்தில் உள்ள கண்ணாடியை உடைத்தவர்கள் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    விழுப்புரத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
    விழுப்புரம்:

    உலக போதை பொருள் ஒழிப்பு தினமான நேற்று, விழுப்புரத்தில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை ஆகியன இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

    விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்குமுனை சந்திப்பில் முடிவடைந்தது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார், பயிற்சி காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோர் கலந்துகொண்டு போதை பொருள் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, ஊர்காவல் படை மண்டல தளபதி ஸ்ரீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 55). மாற்றுத்திறனாளி. கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அய்யக்காண்ணு- தேவகி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அய்யாக்கண்ணு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவர் எப்போதும் தனது சட்டைப்பையில் பணம் அதிகம் வைத்திருப்பார்.

    அவர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, அய்யாக்கண்ணு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, மார்பில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

    இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் பிணமாக கிடந்த அய்யாக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அய்யாக்கண்ணுவை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். நிலத்தகராறு காரணமாக யாராவது கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.

    இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.

    அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 19). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பரமசிவம்(19) இவர்கள் 2 பேரும் ஏ.சி.மெக்கானிக் படித்து விட்டு வேலை பார்த்து வந்தனர்.

    விக்னேஷ், பரமசிவம் இருவரும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் கண்டமங்கலத்தில் இருந்து மேல்மலையனூர் நோக்கி புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டி சென்றார். பரமசிவம் பின்னால் அமர்ந்திருந்தார். விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் லட்சுமிபுரம் கூட்டுசாலை வளைவில் விக்னேஷ் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீரென்று விக்னேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பரமசிவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஷ், பரமசிவம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை- திருவெண்ணைநல்லூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காலிகுடங்களுடன் பங்கேற்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதலிங்க கோஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #Tamilnews
    திருவெண்ணைநல்லூர் அருகே மனைவி சமையல் செய்யாததால் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கண்ணராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45), விவசாயி. இவருக்கு ஜெயந்தி (40) என்ற மனைவியும், 3 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

    இந்தநிலையில் கண்ணன் நேற்று மாலை வழக்கம்போல் விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவி ஜெயந்தியிடம் சாப்பாடு தருமாறு கேட்டார். அதற்கு ஜெயந்தி தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால் சமையல் செய்யவில்லை என்று கூறினார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏறபட்டது. இதில் மனமுடைந்த கண்ணன் வீட்டில்இருந்து வெளியே சென்றார்.

    பின்னர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்தார். திருவெண்ணைநல்லூர் சுடுகாட்டு பகுதிக்கு சென்று படுத்துக்கொண்டார். இரவு நீண்டநேரமாகியும் கண்ணன் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கண்ணன் அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    விழுப்புரத்தில் நள்ளிரவு டெய்லர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு குமார் (வயது 45) என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார்.

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி இவரது கடைக்கு புதிய துணிகளை தைக்க ஏராளமானவர்கள் கொடுத்திருந்தனர்.

    நேற்று இரவு 12 மணி அளவில் குமார் தைத்த துணிகளை அயன் பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தார். துணிகளை தேய்த்து முடித்த அவர் அயன் பாக்சை ஆப் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் அந்த அயன்பாக்ஸ் சூடேறி அருகில் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென்று தீப்பிடித்தது.

    டெய்லர் கடையில் இருந்து புகை வெளியே வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    நிலைய அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் டெய்லர் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

    மற்றொரு சம்பவம்...

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 8.30 மணிக்கு மீட்டர் பாக்சில் திடீரென்று தீப்பிடித்தது.

    இதையறிந்ததும் அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் என்பவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் பட்டு இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் சென்னையில் டைல்ஸ் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக சென்னையில் தங்கியிருந்து விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து சென்றார். இவரது மனைவி ரீனா (31). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ரமேசுக்கு தனது மனைவி ரீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னையில் இருந்து மேட்டுச்சேரிக்கு வந்தார். நீ நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இனிமேல் ஒழுங்காக இரு என ரீனாவிடம் கூறினார். அதற்கு ரீனா, நீங்கள் தான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகம் படுகிறீர்கள் என்றார். இதில் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி ரமேஷ் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து ரீனாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று ரீனா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ரீனாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இரவு ரீனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒகையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம்(வயது 45). இவரது மகன் செல்வக்குமார்(19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் தர்மலிங்கம் ஒகையூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தின் ஆதார் கார்டு கொண்டு வரும்படி செல்போன் மூலம் தர்மலிங்கத்தின் மகன் செல்வக்குமாரிடம் கூறினர்.

    இதனைத்தொடர்ந்து தர்மலிங்கத்தின் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு செல்வக்குமார் ஒகையூரில் இருந்து சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். நேற்று இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. செல்வக்குமார் அந்த ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்படத் தொடங்கியது. அப்போது ரெயில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த செல்வகுமார் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    விழுப்புரத்தில் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது47).

    இவர் கப்பியாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    ரஜினி நடித்து வெளியான காலா திரைபடத்தை பார்ப்பதற்காக கோபால் நேற்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோ இருந்த அறைக்கு சென்றனர்.

    பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    படம் பார்த்து விட்டு கோபால் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    பின்னர் இது குறித்து கோபால் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கபட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை .

    மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது:

    நாங்கள் வசித்து வரும் விவேகானந்தா நகர் பகுதியில் கடந்த 1 வருடமாகவே அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் நாங்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகிறோம்.

    எனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம மனிதர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள நகரில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×