search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநாவலூர்"

    உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இன்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை- திருவெண்ணைநல்லூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காலிகுடங்களுடன் பங்கேற்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் ஆதலிங்க கோஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விரைவில் ஆத்தூர் ஊராட்சிக்குப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். #Tamilnews
    திருநாவலூரில் விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 30). விவசாயி. இவரது மனைவி சாந்தி(23). இவர்கள் 2 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர்.

    இதைநோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்தநிலையில் திருவிழா முடிந்தவுடன் கர்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடு திரும்பினர். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதையும், வீட்டில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த 12 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சாந்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் சாந்தியின் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில் அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருநாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பண்ருட்டி பெண் படுகொலையில் போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (வயது 23). இவருக்கும் நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் வைத்து நடைபெற இருந்தது. இதற்காக 2 குடும்பத்தினரும் பத்திரிகை கொடுப்பது உள்ளிட்ட திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.

    நேற்று முன்தினம் விஜயகுமார் , ரம்யாவை வெளியே அழைத்து சென்றார். அதன்பின் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் விஜயகுமாரையும், ரம்யாவையும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து ரம்யாவின் தந்தை கோதண்டபாணி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயகுமார் மற்றும் ரம்யாவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருநாவலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்குள் பிணமாக மிதந்தவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான பண்ருட்டி ரம்யா என்பது தெரியவந்தது.

    இதுபற்றி ரம்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ரம்யா உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை வெளியே அழைத்து சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை பிடித்தனர். அவருடன் அவரது நண்பர் நல்லூர் பாளையத்தை சேர்ந்த பாண்டியனும் சிக்கினார். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    எனக்கும் ரம்யாவுக்கும் இன்னும் 4 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. எனக்கு ரம்யாவை பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. இதையடுத்து நாம் வெளியே செல்லலாம் என்று கூறி ஏமாற்றி ரம்யாவை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். என்னுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எனது நண்பர் பாண்டியனையும் உடன் அழைத்து சென்றேன்.

    நாங்கள் 3 பேரும் திருநாவலூர் அருகே இருந்தையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் பேசி கொண்டிருந்தோம். எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்து என்று ரம்யாவிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்தேன். பாண்டியனுடன் சேர்ந்து ஒரு துணியால் ரம்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் ரம்யாவின் பிணத்தை அங்குள்ள கிணற்றில் வீசி விட்டு தலைமறைவானோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து விஜயகுமார் மற்றும் பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.





    ×