search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ரம்யா - கைது செய்யப்பட்ட விஜயகுமார்
    X
    கொலை செய்யப்பட்ட ரம்யா - கைது செய்யப்பட்ட விஜயகுமார்

    திருநாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் படுகொலை - 2 வாலிபர்கள் கைது

    திருநாவலூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பண்ருட்டி பெண் படுகொலையில் போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மகள் ரம்யா (வயது 23). இவருக்கும் நல்லூர் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் வைத்து நடைபெற இருந்தது. இதற்காக 2 குடும்பத்தினரும் பத்திரிகை கொடுப்பது உள்ளிட்ட திருமண வேலைகளில் மும்முரமாக இருந்தனர்.

    நேற்று முன்தினம் விஜயகுமார் , ரம்யாவை வெளியே அழைத்து சென்றார். அதன்பின் 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் பல இடங்களில் விஜயகுமாரையும், ரம்யாவையும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து ரம்யாவின் தந்தை கோதண்டபாணி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயகுமார் மற்றும் ரம்யாவை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருநாவலூர் அருகே உள்ள இருந்தை கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் ஒரு இளம்பெண் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருநாவலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றுக்குள் பிணமாக மிதந்தவர் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான பண்ருட்டி ரம்யா என்பது தெரியவந்தது.

    இதுபற்றி ரம்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ரம்யா உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை வெளியே அழைத்து சென்ற விஜயகுமாரை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த விஜயகுமாரை பிடித்தனர். அவருடன் அவரது நண்பர் நல்லூர் பாளையத்தை சேர்ந்த பாண்டியனும் சிக்கினார். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    எனக்கும் ரம்யாவுக்கும் இன்னும் 4 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது. எனக்கு ரம்யாவை பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தேன். ஆனால் முடியவில்லை. இதையடுத்து நாம் வெளியே செல்லலாம் என்று கூறி ஏமாற்றி ரம்யாவை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். என்னுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எனது நண்பர் பாண்டியனையும் உடன் அழைத்து சென்றேன்.

    நாங்கள் 3 பேரும் திருநாவலூர் அருகே இருந்தையில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றோம். அங்கு நாங்கள் பேசி கொண்டிருந்தோம். எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்து என்று ரம்யாவிடம் கூறினேன். அதற்கு அவர் மறுத்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்தேன். பாண்டியனுடன் சேர்ந்து ஒரு துணியால் ரம்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் ரம்யாவின் பிணத்தை அங்குள்ள கிணற்றில் வீசி விட்டு தலைமறைவானோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து விஜயகுமார் மற்றும் பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.





    Next Story
    ×