search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தொடங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹிம் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார், ஐவேந்திரன், கிருஷ்ண ராஜ், சுப்பிரமணியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
    • சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது,ரம்யா திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார் என விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள ஆய்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரம்யாவை சுரண்டை அருகே உள்ள ராஜ கோபாலபேரியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து கர்ப்பமான அவருக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் நேற்று பெற்றோர் வீட்டுக்கு சென்ற ரம்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ஆய்குடி போலீசார் ரம்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். ரம்யா குழந்தை பெற்றதில் இருந்து சற்று மனதளவில் பாதிப்படைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் இருந்தபோது, திடீரென மண்எண்ணையை குடித்துவிட்டார்.

    இதனால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பார்க்குமாறு கூறி அவரது கணவர் ரம்யாவை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். தொடர்ந்து ரம்யாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முடிவடையாத காரணத்தினால் தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட உள்ளது.

    • போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    தென்காசி:

    இடைகால் சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக பள்ளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சதுரங்க போட்டி சிவகிரி பாரத் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி, தரணி மெட்ரிகுலேஷன் பள்ளி,கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி , வாசுதேவநல்லூர் அகஸ்தியா பள்ளி, இடைகால் அரசினர் பள்ளி, ஏ.ஆர்.எஸ் மதார் குருகுலம் பள்ளி,ஆகிய பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    சதுரங்க போட்டியில் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக சாம்பியன் செஸ் அகாடமி சார்பாக நடக்கும் போட்டியில் ஆனந்தன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டுக்குள் தென்காசி மாவட்டத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் குழந்தைகளை உருவாக்குவோம், அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளின் சிந்தனை திறன்களை வளர்க்கும் விதமான புத்தகங்கள், பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராமப்புற குழந்தைகள் தங்களது அடுத்த கட்ட சிந்தனை சார்ந்த போட்டிகளுக்கு தயாராகவும் , மிகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

    போட்டியில் குழந்தை களும் , ஏராளமான பெற்றோர்களும் பொதுப் பிரிவில் ஆர்வமாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிக்காட்டி பரிசுகளை தட்டிச் சென்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ். எஸ். செண்பகவிநாயகம், விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் முருகேசன், ஐ.பி.எம். இந்திய தனியார் நிறுவனர் மாரிமுத்து, நடுவர்கள் பிரகாஷ்,சிவகணேஷ், மகாராஜன் உணவு பாதுகாப்பு வழங்கல், நெடுஞ்சாலை துறை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், சேகர் கிராமப்புற ஆய்வாளர், சிவராமன் ஸ்ரீ குமரன் குரூப் ஆப் கம்பெனி, மருத்துவர் ரம்யா, மிரில்லா, தேவி ஆசிரியை ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஒருங்கினைப்பாளர் இசக்கி முத்து ஏற்பாடு செய்திருந்தார்.

    போட்டி நடந்த இடத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான சிறு பிரசாரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட மக்கும் பைகள் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத முறையில் தேவிகா மகளிர் சுய உதவி குழு மூலம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்பு அவை மக்களுக்கு வழங்கப்பட்டது.

    • வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
    • தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரெயில்வே பயணிகள் ஆலோசனை குழு உறுப்பி னருமான ராஜா எம்.எல்.ஏ. சென்னை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    அதில் கூறியுள்ளதாவது:-

    விஜயதசமி விடுமுறைகள், தீபாவளி விடுமுறையும் நெருங்கி வருகின்றன. எனவே அந்த நேரத்தில் தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க வருகிற 20, 21-ந் தேதி மற்றும் நவம்பர் 10,11-ந் தேதிகளில் தென்காசி வழியாக தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் தென்காசி வழியாக அக்டோபர் 24, 25 மற்றும் நவம்பர் 13,14, (திங்கள், செவ்வாய் )விடப்பட்டால் கூட்ட நெரிசலைக் குறைக்கும். மேலும் விஜயதசமி மற்றும் தீபாவளி விடுமுறைக்காக தென்காசி வழியாக பெங்களூரு - நெல்லை- சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும். இதேபோல் விஜயதசமி மற்றும் தீபாவளிக்கு தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரெயில்களிலும் தென் தமிழகத்தில் இருந்து காத்திருப்புப் பட்டியல்களின் எண்ணிக்கை 1500-க்கு மேல் உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் பயணிகளுக்கு பெரிதும் உதவும், எனவே இதை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய நெல் விதைகள் ஒரு கிலோ ரூ.25-க்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுணி, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.25-க்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த விதை அளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • சுப்பிரமணியபுரம், திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.
    • விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறி பீடிக்கடையை பெண்கள் முற்றுகையிட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் கிராமத்தில் தனியார் பீடி கம்பெனி இயங்கி வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான ராம சந்திரபட்டணம், வென்னியூர், சுப்பிரமணியபுரம், திருமலா புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பீடி கம்பெனி நிர்வாகம் விடுமுறை நாட்களுக்கான சம்பளம் மற்றும் போனஸ் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கவில்லை என கூறியும், தரமான பீடி இலைகள் மற்றும் தூள் வழங்கவில்லை என கூறியும் பெண்கள் கடையின் முன்பு திரண்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக முற்றுகை போராட்டம் நீடித்த நிலையில் பீடி தொழிலாளர்களுடன் பீடி சங்க மாநில குழு உறுப்பினர் கற்பகவல்லி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மணிகண்டன், பீடி சங்க மாவட்ட தலைவர் குருசாமி, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் தங்கம், பீடிசங்க மாவட்ட செயலாளர் மகாவிஷ்ணு, ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
    • கரன்,கனகராஜ் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை பகுதியில் இளைஞர்களுக்கு மர்ம நபர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தென்காசி போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் குத்துக்கல்வலசை ராமர் கோவில் தெருவை சேர்ந்த கரன் (வயது22), அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (43) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது கைது செய்து அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் ஏற்கனவே உரக்கிடங்கு உபயோகத்தில் இருந்த இடத்தில் தற்போது பயோமைனிங் முறையில் பழைய குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டு அந்த இடங்கள் தினசரி சந்தை, வாட்டர் டேங்க் என பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகளும் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது நகராட்சி பகுதியில் திறந்த வெளி வாறுகால்கள் சுமார் 75 கி.மீ நீளம் உள்ளது. அவற்றை தினமும் சுத்தம் செய்து அகற்றப்படும் வாறுகால் கழிவுகள் மற்றும் மண்ணையும் உரமாக்கிய பிறகு மீதமுள்ள மரக்கழிவுகள் போன்றவற்றை கொட்ட உரக்கிடங்கு தேவைப்படுகிறது. எனவே வாறுகால் கழிவுகள், மண்ணை கொட்டுவதற்கு தகுந்த இடத்தினை தேர்வு செய்து வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சங்கரன்கோவில் பகுதிகளில் தாமிரபரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.
    • மழை இல்லாத நேரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    சங்கரன்கோவில்:

    தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பேசுகையில், சங்கரன்கோவில் தொகுதியில் சங்கரன்கோ வில் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த மாதம் அமைச்சரால் தொடங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சங்கரன் கோவில் தொகுதி நிலத்தடி நீர் இல்லாத பகுதி ஆகும். எனவே சங்கரன்கோவில் தொகுதியில் குருவிகுளம், மேலநீலிதநல்லூர், மானூர், சங்கரன் கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் தாமிர பரணி ஆற்று நீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்யும் சூழ்நிலை அமைந்துள்ளது.

    மழை இல்லாத நேரங்களில் ஆற்றில் தண்ணீர் வற்றி போவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வலியுறுத்தி உள்ளார்கள்.

    அதன்படி மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அம்பாசமுத்தி ரத்தில் இருந்து கடைய நல்லூர் வரை பெரிய கிணறுகள் தோண்டப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுவையாக இருக்கும்.

    அந்த பணிகள் தொடங்குவதற்கு தற்போது ஆய்வுகள் நடந்து கொண்டி ருப்பதாகவும், கூடிய விரை வில் திட்டம் செயல்படுத் தப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாக் கப்படும் என தெரிவித்தார்.

    • நிகழ்ச்சியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவ, மாணவிகள் விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    தென்காசி:

    தேசிய வன விலங்குகள் வாரத்தினை முன்னிட்டு இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் ஒவ்வொரு நாளும் வன விலங்குகள் பாதுகாப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகள் குறித்து விளக்கம் அளித்தும், வன விலங்குகள் போல வேடமணிந்தும், விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    விலங்குகள் பற்றிய வினாடி-வினாவும் கேட்கபட்டது. மேலும் விலங்குகள் பாதுகாப்பதின் முக்கிய பங்கினை பற்றி கருத்துரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
    • கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 628 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

    நலத்திட்ட உதவிகள்

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலதிட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த 25 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 25 ஆயிரத்திற் கான காசோலை களையும், ஒரு பயனாளிக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9 ஆயிரத்திற்கான காசோலையினையும், 7 பேருக்கு ரூ. 9 ஆயிரம் கல்வி உதவித் தொகைக் கான காசோலைகளையும், ஒருவருக்கு ரூ. 1 லட்சம் விபத்து மரணம் நிதி உதவி தொகை என மொத்தம் ரூ. 5 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திற னாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 628 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி கமிஷனர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிர மணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் இணையதள குற்றங்கள் பற்றி பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணையதள குற்றங்கள் பற்றி ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர். முன்னதாக தலைமை ஆசிரியர் வரவேற்றார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவிப் பேராசிரியா ஆரிபா நன்றி கூறினார்.

    ×