search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy seeds"

    • பாரம்பரிய நெல் விதைகள் ஒரு கிலோ ரூ.25-க்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திககுறிப்பில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் விதைகளின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் படி நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுணி, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் ஒரு கிலோ ரூ.25-க்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்த விதை அளவில் 80 சதவீதம் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 20 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

    ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைகள் மட்டுமே வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று சாகுபடி செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • உரிமம் பெறாத விதை விற்பனையாளா்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது.
    • தகவல் பலகையில் விவசாயிகளுக்கு தெரியும்படி விதை இருப்பு விலை விவரங்களை எழுதி வைக்க வேண்டும்.

    காங்கயம்:

    நெல் விதைகளை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.இது குறித்து, ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் பி.சுமதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கீழ்பவானி வாய்க்கால் பாசனம் பெறும் காங்கயம் தாலுகா பகுதிக்கு உட்பட்ட நத்தக்காடையூா், முத்தூா் பகுதிகளில் தற்போது சம்பா பருவத்தில் நெல் பயிரிட ஏற்ற சூழ்நிலை உள்ளது.

    எனவே சான்று பெற்ற நெல் விதைகளை லேபிளுடன் கூடிய பேக்குகளில் வாங்க வேண்டும். விதைகளை உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியாா் விதை விற்பனையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அத்துடன் வாங்கும் தேதி, காலாவதி தேதி ஆகியன குறிப்பிட்டு இருக்கிறதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    விதைக்கான ரசீதில் விற்பனையாளா், வாங்குவோா் கையொப்பமிட்டு ரசீது பெற வேண்டும். உரிமம் பெறாத விதை விற்பனையாளா்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது.

    அத்துடன் விதை விற்பனையாளா்கள் இருப்பில் உள்ள விதைகளுக்கான இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்புத்திறன் அறிக்கை பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். தகவல் பலகையில் விவசாயிகளுக்கு தெரியும்படி விதை இருப்பு விலை விவரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விதை விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையில் ஆய்வு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சான்று பெற்ற நெல் விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மேலும் உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது முளைப்புத்திறன் அறிக்கை மற்றும் கொள்முதல் பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உள்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு உரிய பதிவேடுகள் பராமரிக்கப்–பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் தாராபுரத்தில் சில நெல் விதை நிலையங்களில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விவரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பதிவேடுகள், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அதில் விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடு உள்ள விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பராமரிக்கப்படாத சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 1 லட்சத்து 66 ஆயிரத்து 730 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    மேலும் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்–பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும் என ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச்சட்டம்-1966, விதை விதிகள்- 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை-1983 ஆகியவற்றின்படி விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வட்டாரத்தி ல் வரும் கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். நெல் சாகுபடி செய்யும் வேளாண் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சான்று பெற்ற நெல் விதைகளை வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு கார் நெல் சாகுபடிக்காக செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆர். 50 மற்றும் அம்பை-16 நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசு இந்த ஆண்டும் நெல் விதைகளை மானியத்தில் வழங்கலாம் என உத்தர விட்டுள்ளதன்படி, தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின்படி, தென்காசி மாவட்ட மத்திய மாநில திட்டங்களின் துணை இயக்குனர் ஊமத்துரை மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு ஆலோசனையின் பேரில் செங்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதுபற்றி வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு கூறுகையில், செங்கோட்டை வட்டாரம் புளியரை, தெற்குமேடு, புதூர், கற்குடி, செங்கோட்டை மேலூர், கீழூர், டவுன், சீவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கார் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி விதை கிராம திட்டத்தில் பயன்பெறும் பொருட்டு இணையத்தில் பதிவு செய்யலாம் எனவும், மேலும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அசோ ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதனையும் பெற்று விதை நேர்த்தி செய்தல் நாற்றங்காலில் இடுதல், நடவு வயல்களில் இடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கலாம் என கூறியுள்ளார்.

    நெல் விதை விநியோகத்தி ற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார் , அருணாசலம், முகமது ஜலால் மைதீன் செய்தனர்.

    • தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
    • புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

     தாராபுரம் :

    விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் விதை நெல் உற்பத்தியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடமை உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் அங்ககச் சான்று மற்றும் அங்கக விவசாயம் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் தரப்பில் துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். தாராபுரம் பகுதிக்கு புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். மேலும் சான்றுபணிக்கு தேவையான சான்று அட்டைகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விதை உற்பத்தியாளர்கள், விதை சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விதை சான்று அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

    ×