search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private School"

    • தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.
    • திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் மழலைய பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    பள்ளி கட்டிடங்கள், அடிப்படை வசதிகளுடன் மாநகராட்சி பள்ளிகள் தன் பங்களிப்பை வழங்கி வருவதால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகளவில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகளும் உள்ளன.

    இந்நிலையில் சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இதனால் நிர்வாக ரீதியான பிரச்சினை உருவானது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கி இந்த பள்ளிகள் செயல்பட்ட வந்தன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இத்தகைய பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

    அந்த பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டு என மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன்படி 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டன.

    அந்த பள்ளிகள் "சென்னை பள்ளிகள்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

    மாநகராட்சி கல்வி துறை மூலம் இனி இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இப்பள்ளி களின் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும்.

    • வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள் . இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.
    • மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பம்மாள். இவர் பாகூர் திரவுபதி அம்மன் கோவில் அருகில் கடந்த 7ஆண்டுகளாக தனியார் பள்ளி நடத்தி வருகிறார்.

    இந்தப் பள்ளிக்கு அருகில் மணிமாறன்.என்பவர் வசித்து வருகிறார். இவர் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் பள்ளி வழக்கம் போல் செயல்பட்டிருந்த நிலையில் மணிமாறன் அத்துமீறி பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தாளாளரை தரக்குறைவாக திட்டினார்.

    மேலும் பள்ளியை மூடிவிட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் உங்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மணிமாறன் மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி தாளாளர் குப்பம்மாள் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் மணிமாறனை தேடி வருகின்றனர்.

    • தனியார் பள்ளிக்கு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    திருநின்றவூர் :

    ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனி பகுதியில் ஏஞ்சல் என்ற தனியார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியின் தாளாளரான வினோத் (வயது 34), பிளஸ்-2 படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பள்ளி தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகளின் பெற்றோரும், அந்த பகுதி பொதுமக்களும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடு பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலையில் நின்றிருந்த அனைவரையும் பள்ளி வளாகத்துக்குள் செல்ல வைத்தனர்.

    அப்போது அவர்கள், தாளாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறி பள்ளி வராண்டாவில் மாணவ-மாணவிகள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாணவர்கள், பெற்றோரிடம் போலீசார் பலமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராதாகிருஷ்ணன், ஆவடி தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர்.

    மாலை 3 மணிவரை பேச்சுவார்த்தை நீடித்தது. பள்ளி தாளாளர் மீது வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதி அளித்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பள்ளியில் இருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக திருநின்றவூர் போலீசார், பள்ளி தாளாளர் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மற்ற வகுப்பு மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அந்த தனியார் பள்ளிக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கட்கிழமை முதல் பள்ளி செயல்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களின் பெற்றோருக்கு 'வாட்ஸ் அப்' மூலம் தகவல் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

    • தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சிவா.
    • இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சிவா. கடந்த 31-ந்தேதி இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது பட்டாசை கொளுத்தி போடுமாறு சிவா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அனைவரும் பட்டாசை கொளுத்தி அந்த பஸ்சின் டயரில் வீசி உள்ளனர்.

    இந்த சம்பவங்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது.
    • ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,000 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது. இதனை அறிந்த அவர்களது பெற்றோர் அங்கு சென்று கேட்டபோது சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியில் உள்ள டைல்ஸ் தரையை உடைத்ததாகவும், அதற்காக ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு 100 ரூபாய் அபராத தொகையை கட்டி உள்ளனர். சிலர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அதன் பின்னரே மாணவர்களை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதித்தது. 

    • தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது.
    • தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் வள்ளலார் நகர் அருகே, தனியார் பள்ளி எதிரே, வாலிபர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற காரைக்கால் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷேக் பஹத்தை(வயது19) போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பிலான 40 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் போலகம் பகுதியில் புதுச்சேரி தொழில் வளர்ச்சி மையமான பிப்டிக் மையம் உள்ளது. இப்பகுதி பாதுகாப்பு அற்ற பகுதியாக, அடர்ந்த காடாக இருப்பதால், சமூகவிரோதிகள் பலர் அப்பகுதியில் தஞ்சம் புகுந்து, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் சிலர் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நேற்று நடைபெறுவதாக திரு.பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன் பேரில் திரு.பட்டினம் போலீசார் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையில் ரோந்து சென்ற பொழுது, பிப்டிக் மைய கருவேல மரங்களுக்கு இடையே இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திய பொழுது, காரைக்கால் மதகடி பகுதியை சேர்ந்த ராமானுஜன் ( வயது39), திருநள்ளார் பேட்டை பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பதும் தெரியவந்தது. பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    • சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வளையமாதேவி கிராமம் தெற்கு தெருவை ேசர்ந்தவர் பிரகாஷ் (வயது 24) ,கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்திரா நகர் சுப்பிரமணி செந்தமிழன் (27), சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த முரளி. இவர்கள் 3 பேரும் சின்னசேலம் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குற்றவாளிகள் கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது தொடர்பாக வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் இன்று கைது செய்து அவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

    • கனியாமூரில் கலவரம் நடந்த தனியார் பள்ளியில் வேளாண்துறையினர் இன்று ஆய்வு செய்தனர்.
    • டி.ஜி.பி. சைேலந்திரபாபு அதிரடி நடவடிக்கையின் பேரில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சம்பவத்தையொட்டி கடந்த 17-ந் தேதி கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளிக்குள் புகுந்த கும்பல் அங்கு உள்ள பொருட்களை சூறையாடி பஸ்களுக்கு தீ வைத்து எரித்தது. இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைேலந்திரபாபு அதிரடி நடவடிக்கையின் பேரில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. என்றாலும் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கலவரம் தொடர்பாக புலனாய்வு குழு, தடவியல் குழுவினர் நேரடியாக பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். இன்று காலை வேளாண்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கலவரத்தில் சேதம் அடைந்த மரம், செடி, அழகு சாதன புல்வெளி ஆகியவற்றை சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் வேளாண் துறை இணை இயக்குனர் வேல்விழி தலைமையில், உதவி இயக்குனர் சுந்தரம் முன்னிலையில், வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குனர், தோட்டக்கலை துறை முரளி, ஆகியோர் சேதங்களை குறித்து ஆய்வு நடத்தினர். 

    • 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • நாமக்கல் மாவட்டத்தில் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது.

    இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

    இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 348 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டுள்ளன. அதாவது 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கி இருப்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    இதில் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன. பள்ளி சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கி இருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    • பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்
    • பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஸ்காட் சர்வதேச பள்ளி 10.08.2012 ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா திறந்து வைத்தார். இப்பள்ளியில் தொடக்கத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுடன் இயங்கி வந்தது. அதன் பின்னர் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியை தொடர்ந்து நடத்த இயலாது அதனால் இன்று முதல் பள்ளி செயல்படாது என்று நேற்று மாலை பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மணிமுத்து உள்ளிட்ட போலீசார் பெற்றோர் - பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்து கல்வி கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எங்களது குழந்தைகள் படித்து வந்த ஸ்காட் பள்ளியை உடனடியாக மூடுவதாக அந்த நிர்வாகம் கூறுகிறது. எங்களது குழந்தைகளை வேறு நல்ல பள்ளியில் உடனே சேர்க்க இயலாது. நடப்பு கல்வி ஆண்டு மட்டும் இப்பள்ளியை இயக்கி அதன் பின்னர் பள்ளியை மூடினால் நாங்கள் வேறு நல்ல பள்ளியை தேர்வு செய்து அதில் அடுத்த கல்வியாண்டில் எங்களது குழந்தைகளை சேர்க்க இயலும்.

    பள்ளியை மூடுவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுப்பதோடு உரிய கால அவகாசமும் அளிக்க வேண்டும். உடனே பள்ளி மூடுவது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பும், எதிர்காலமும் கேள்வி குறியாகும். எங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தான் நாங்கள் கல்விக்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறோம். குழந்தைகளின் நலனுக்காக நாங்கள் போராடவும் தயங்க மாட்டோம் என்றனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து பள்ளியை 2 நாள் நடத்துவதாகவும், 2 நாட்களுக்குள் தலைமை நிர்வாகத்திடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர் .இதையடுத்து சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

    தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்து, இனி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டிடங்களின் உறுதித்தன்மை சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று, தடையில்லா சான்று ஆகியவற்றின் அடிப்படையில் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 94 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிரந்தர அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் பரிந்துரைத்தது.

    மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் பரிந்துரையை ஏற்று, 1994-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வழங்கப்பட்ட அரசாணையின்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படுகிறது.

    மேலும் இனி அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் 3 ஆண்டு காலத்துக்கு அல்லது கட்டமைப்பு ஸ்திரத்தன்மை சான்றிதழ் அல்லது கட்டிட உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இதில் எது முந்தையதோ அதன்படி அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.

    ஏற்கனவே 1994-ம் ஆண்டின் அரசாணையின்படி, நிரந்தர அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் தொடரும்.

    அதே சமயம் அந்த பள்ளிகள் தமிழ்நாடு கட்டிடச் சட்டம் 1965-ன் கீழ் பள்ளிக் கட்டிடத்தை பொது கட்டிடமாக பயன்படுத்த அனுமதியளித்த சான்றிதழ், பள்ளி கட்டிடத்துக்கான கட்டமைப்பு உறுதித்தன்மை சான்றிதழ், உள்ளூர் சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழ், பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

    சான்றிதழ்களை சமர்ப்பிக்க தவறினால் அந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நிரந்தர அங்கீகாரம் திரும்ப பெறப்படும்.

    இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
    ஊட்டி தனியார் பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு மட்டுமின்றி மராட்டியம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் உள்ளனர்.

    சர்வதேச அளவில் இயங்குவதால் பள்ளியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பள்ளியில் தங்கியிருந்து படிக்கும் தங்களது குழந்தைகளை மாதத்தில் ஒருமுறை மட்டுமே பெற்றோர் பார்க்க முடியும். இந்த நிலையில் அந்த பள்ளியில் புனேவை சேர்ந்த ஆனந்த் என்பவரது மகள் சாவ்லி சர்மிளா(வயது 16) தங்கியிருந்து, பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு விடுதியில் உள்ள தனது அறையில் இருந்து உணவு சாப்பிட சாவ்லி சர்மிளா வெளியே வரவில்லை. இதனால் சக மாணவிகள் அவளது அறைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அறையிலும் அவள் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் தேடினர். மேலும் பள்ளி நிர்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே விடுதியில் உள்ள குளியல் அறையில் மாணவி சாவ்லி சர்மிளா துப்பட்டா மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் ஊட்டி ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மாணவி சாவ்லி சர்மிளா தனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததும், படிப்புக்காக நீண்ட தொலைவில் உள்ள பள்ளியில் சேர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஊட்டி ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×