search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quarterly exam"

    • எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டலம் ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆரம்ப பள்ளியிலும் காலாண்டு தேர்வானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு எழுத்து முறையில் தேர்வை வைக்காமல் செல்போன் வழியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்களுக்கு எழுத்து திறன் குறைவதோடு, செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படுவதாக கூறி இன்று மாணவர்களின் பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் குழந்தைகள் படிப்பது என்பது வேறு. ஆனால் தற்போது சாதாரண காலகட்டத்திலும் அதாவது இந்த காலாண்டு தேர்வின் போது, எழுதும் வகையில் தேர்வை நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகிறார்கள். இதனால் இணையதளம் முடக்கம் ஏற்படும்போது ஒரே தேர்வை 2 முதல் 3 நாட்கள் வரை மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய நிலை உள்ளது. மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபடும்.

    எனவே எழுத்து முறையில் காலாண்டு தேர்வு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.

    6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நாளை தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முன்னதாக கடந்த 15-ந்தேதி 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுகிறது.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது.

    அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை பின்பற்றி தேர்வு எழுதினால் ஏற்றத்தாழ்வு ஏற்படாது என்று கருதி மீண்டும் பொதுவான வினாத்தாள் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    அரசு தேர்வுத்துறையால் தயாரிக்கப்படும் இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து தேர்வு நாளில் வினியோகிக்க வேண்டும். தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தொடர்புடைய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் நாளை நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெறுகிறது.

    ஏற்கனவே இருந்த இந்த தேர்வு முறையால் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்து பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது அதுபோன்ற தவறுகள் எதுவும் எங்கும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் வினாத்தாள்களை கையாள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

    • வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.
    • விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாகவும், இதர நாட்களில் வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.

    அந்த வகையில், ராமேசுவரத்திற்கு விடுமுறை நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இருக்கும். இதனால் வியாபாரம் அதிகளவில் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.

    இந்நிலையில், தமிழகத்தில் காலாண்டு தேர்வு வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் மிகுவும் குறைந்தே காணப்பட்டது.

    அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்று எதுவும் இல்லாமல் காணப்பட்டது. அதிலும் இன்று வந்த அதிக அளவிலான பக்தர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகவும், தேர்வு முடிந்த பின்னரே பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும் என தெரிவித்தார். மேலும் பூஜை பொருட்கள், கலைப்பொருட்கள் விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

    • பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

    சென்னை:

    6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் முறையை பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, நடைபெற உள்ள காலாண்டுத்தேர்வில் அமல்படுத்த இருக்கிறது.

    அதற்கேற்றாற்போல், தற்போது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    பிளஸ்-1 வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரைக்கும், பிளஸ்-2 வகுப்புக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரைக்கும் நடக்கிறது. 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற செப்டம்பர் 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.

    அதிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வருகிற 22-ந்தேதி உடற்கல்வி தேர்வு புதிதாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன.
    • அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன.

    திருப்பூர்:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் சில தனியார் பள்ளிகளில் கடந்த மாதம் 24 ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்ததை அடுத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்க உள்ளன. மாணவர்களின் எழுத்து திறன் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் அக்.13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி சென்ற மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர்.

    • சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது.
    • ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,000 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது. இதனை அறிந்த அவர்களது பெற்றோர் அங்கு சென்று கேட்டபோது சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியில் உள்ள டைல்ஸ் தரையை உடைத்ததாகவும், அதற்காக ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு 100 ரூபாய் அபராத தொகையை கட்டி உள்ளனர். சிலர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அதன் பின்னரே மாணவர்களை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதித்தது. 

    ×