search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்?: 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
    X

    அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்?: 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

    • 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கியுள்ளன.
    • நாமக்கல் மாவட்டத்தில் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    சென்னை :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது.

    இதற்கு கல்வித்துறை, சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. அந்த எச்சரிக்கையையும் மீறி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. இதன்படி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்த இந்த வேலைநிறுத்தத்தில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாக்குதலை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.

    இந்நிலையில் அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அளித்தது ஏன்? என்று 987 தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    முன்னதாக தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரத்து 335 தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்து 348 பள்ளிகள் நேற்று வழக்கம்போல் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டுள்ளன. அதாவது 91 சதவீதம் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம்போல் இயங்கி இருப்பது கல்வித்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    இதில் 11 மாவட்டங்களில் 100 சதவீதம் தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளன. பள்ளி சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட 92 சதவீதம் பள்ளிகள் இயங்கி இருப்பதாக கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 32 சதவீதம் பள்ளிகள் மட்டுமே இயங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×