search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passed away"

    சென்னை தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். #NelJayaraman #PassedAway #cancer #ApolloHospital
    திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்த அவர், புற்று நோயால் பாதிக்கப்பட்டுவந்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார்.

    சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

    அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

    முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.  

    இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இறந்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #NelJayaraman #PassedAway #cancer
    புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று அவரது இல்லத்தில் காலமானார். #IravathamMahadevan
    சென்னை:

    சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தவர் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88). கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது. 2009ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஐராவதம் மகாதேவன் இன்று அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

    திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர்  கடந்த 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #IravathamMahadevan
    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ. சந்தானம் இன்று மரணம் அடைந்தார்.
    மதுரை:

    பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் எல்.சந்தானம் (வயது 80). தமிழ் மாநில தலைவராக பதவி வகித்த சந்தானம் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார்.

    சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம், உசிலம் பட்டி அருகே மேலப்பெருமாள் பட்டியில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    சந்தானம் உடல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேலப்பெருமாள் பட்டியில் அடக்கம் செய்யப்படுகிறது. மரணமடைந்த சந்தானத்துக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
    உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் முன்னாள் முதல்வரும், ஆந்திராவின் முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். #NDTiwari #RIPNDTiwari
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான என்.டி.திவாரி என அழைக்கப்படும் நாராயண் தத் திவாரி தனது 92-வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்வை துவங்கிய இவர், பிரஜா சோசியலிஸ்ட் கட்சியை துவங்கி பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான என்.டி.திவாரி, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 2 மாநிலங்களுக்கு முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.

    1925-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி பிறந்த இவர், தனது பிறந்த நாளான இன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். #NDTiwari  #RIPNDTiwari
    முகையூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சேவல் கோ.கோதண்டராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த முகையூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ சேவல் கோ.கோதண்டராமன். இவரது சொந்த ஊர் முகையூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமம்.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சேவல் கோ.கோதண்டராமன் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் பொன்முடியிடம் தோல்வி அடைந்தார்.

    கடந்த சில மாதங்களாக சேவல் கோ.கோதண்டராமன் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் சேவல் கோ.கோதண்டராமன் இறந்தார். இவருக்கு வயது 67 ஆகும். இவரது உடல் இன்று மாலை சொந்த ஊரான கொடுங்கால் கிராமத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    இறந்த சேவல் கோ.கோதண்டராமன் வக்கீலுக்கு படித்துள்ளார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை.

    தற்போது இவர் டி.டி.வி. தினகரன் தலைமையில் இயங்கி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முகையூர் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.

    சேவல் கோ.கோதண்ட ராமன் 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி உறுப்பினராக சேர்ந்தார். 1988-89-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அதன் பின்னர் 1993-ம் ஆண்டு முகையூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக கோதண்டராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2001-ம் ஆண்டு முகையூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    கோவா மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தாராம் நாயக் மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார்.
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தவர் சந்தாராம் நாயக். ராகுல் காந்தி அரசியலில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், இவர் தனது மாநிலத் தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில்,  இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் மார்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சந்தாராம் நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக, கோவா மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரடிமா கவுண்டிகோ தெரிவித்துள்ளார்.

    72 வயதான இவர் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மகாராஷ்டிர மாநிலத்தின் வேளாண் மந்திரி பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். #MHministerpassedaway #PandurangPundalikFundkar
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநிலத்தின் வேளாண் மந்திரியுமான பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பண்டுரங் புந்தலிக் பண்ட்கர் உயிரிழந்தார். 67 வயதான இவர் தற்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசில் வேளாண் மந்திரியாக பதவி வகிக்கிறார்.

    இவர், அகோலா மக்களவை தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவர் என்பதும், பா.ஜ.க.வின் மகாராஷ்டிரா மாநில தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #MHministerpassedaway #PandurangPundalikFundkar
    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் மரணமடைந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

    அவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Tamilnews
    வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பா.ம.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குரு உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-



    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:- பா.ம.க.வின் முன்னணித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ.குரு உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். காடுவெட்டி குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    காடுவெட்டி குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பா.ம.க.வினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

    மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- பா.ம.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குருவின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவரின் துயரில் பங்குகொள்கிறேன். அவரது ஆன்மா நற்கதியடைய எல்லாம்வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெ.குரு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மறைந்ததை கண்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். அவரது மறைவை நேரில் கண்டும், மறைந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது மறைவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

    குருவின் மறைவுச் செய்தியை பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொண்டர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை நான் அறிவேன். எனது அதிர்ச்சி, வேதனை, சோகம் ஆகியவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். குருவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 
    காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து 9 மாவட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #PMK #KaduvettiGurudeath

    சென்னை:

    பா.ம.க. முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவருக்கு நீண்ட நாட்களாகவே நுரையீரல் பாதிப்பு இருந்தது. கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. நாளை உடல் தகனம் நடக்கிறது.

    ஜெ.குரு 2001-ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் 2 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கடைகளும் அடைக்கப்பட்டன.

     


    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இங்கு 3 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

    பண்ருட்டி, புதுநகர், முதுநகர், ரெட்டிச்சாவடி, சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீதும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 16 பஸ்கள் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் என்ற இடத்தில் நெய்வேலியில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்சும், திருவண்ணாமலையில் இருந்து சிதம்பரம் சென்ற பஸ்சும், சிதம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை சென்ற பஸ்சும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது.

    திண்டிவனத்தை அடுத்த காளை பகுதியில் சென்ற சென்ற பஸ் நள்ளிரவில் கல்வீசி உடைக்கப்பட்டது. செஞ்சியில் 3 பஸ்கள் கல்வீசி சேதப்படுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பஸ்கள் சேதம் அடைந்தது.

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அரியலூர், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பகுவிக்கப்பட்டனர்.

    பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன.

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பத்தில் நேற்று இரவு 9 மணியளவில் தனியார் கம்பெனியில் இருந்து ஆட்கள் ஏற்றிச் சென்ற 3 பஸ்கள் மீது 6 பேர் கும்பல் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கின. அருகில் இருந்த 2 பேக்கரி கடைகள் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    சேலம் சீல நாயக்கன்பட்டி பைபாசில் சென்னையில் இருந்து கோவை சென்ற பஸ் உடைக்கப்பட்டது. டால்மியா அருகே பெங்களூர் சென்ற ஆம்னி பஸ்சும் கல்வீசி தாக்கப்பட்டது.

    மேச்சேரி, காடையாம்பட்டி, தீவட்டிபட்டி, ஆத்தூர் பகுதியில் 7 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது. மொத்தம் 9 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் 9 பஸ்கள் உடைக்கப்பட்டன. காட்பாடியை அடுத்த லத்தேரி வழியாக சென்ற 2 பஸ்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

     


    வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு சென்ற அரசு பஸ் மீது மேல்விஷாரத்தில் கல்வீசப்பட்டது. ஆற்காட்டில் மட்டும் 3 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டது.

    வாலாஜாவில் ஒரு பஸ்சும் அரக்கோணத்தில் ஒரு பஸ்சும் உடைக்கப்பட்டது. விரிஞ்சிபுரத்தில் ஒரு அரசு பஸ் மீது கல்வீசியதில் கண்ணாடி உடைந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 பஸ்கள் மீது கல் வீசி உடைக்கப்பட்டது. கலசப்பாக்கத்தில் ஒரு பஸ், வந்தவாசி மற்றும் அதனருகே உள்ள பொன்னூரில் 5 பஸ்கள், மங்கலத்தில் ஒரு பஸ், போளூரில் 1 பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    வேலூரில் இருந்து ஆரணி சென்ற தனியார் பஸ் அடுக்கம்பாறை அருகே கல்வீசி உடைக்கப்பட்டது. போளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு பஸ்சை மடக்கி சிலர் தாக்க முற்பட்டனர். போலீசார், அவர்களை சமரசம் செய்து தாக்குதலை தடுத்தனர்.

    வந்தவாசி பஜார் வீதி, மேல்மருவத்தூர் ரோட்டில் கடைகளை அடைக்குமாறு பா.ம.க.வினர் திரண்டு வந்து வியாபாரிகளிடம் கூறினர். இதையடுத்து வந்தவாசி நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆரணியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர் அருகே பத்தகப்பட்டி என்ற இடத்தில் அரசு டவுன் பஸ் கல்வீசி உடைக்கப்பட்டது.

    மயிலாடுதுறையில் வள்ளாலகாம் சிவபிரியா நகரில் இன்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தி ஓடி விட்டனர்.

    கும்பகோணம் சுவாமி மலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. திருவையாறு மெயின் ரோடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்தப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #PMK #KaduvettiGurudeath

    பாமக எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மரணத்தின் எதிரொலியாக, 20க்கு மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #PMK #KaduvettiGuru
    விழுப்புரம்:

    சென்னையில் நீரிழிவு நோயால் சிகிச்சை பெற்று வந்த பாமக தலைவர் காடு வெட்டி குரு, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதன் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேற்று இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூரில் இயங்கி வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகள் சேதமாகின.

    இதனால் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே, அந்தந்த மாவட்டங்களில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து கண்ணாடிகள் உடைத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews 
    வன்னியர் சங்க தலைவரும், பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குரு உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று இரவு காலமானார். #PMK #KaduvettiGuru
    சென்னை:

    பாமகவின் முன்னாள் எம் எல் ஏவாக இருந்தவர் குரு (57). இவர் வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இவரது சொந்த ஊர் காடுவெட்டி. சொந்த ஊரின் பெயரால் இவர் காடு வெட்டி குரு என அழைக்கப்பட்டார். 

    நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரை பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

    இவரது மறைவுக்கு பாமக தலைவர் ராமதாஸ், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பாமக சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #PMK #KaduvettiGuru
    ×