search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரங்கல்"

    • காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
    • லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது.

    லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

    மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    • வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
    • அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில், கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் சுற்றுப்பயணம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.

    வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

    சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
    • மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    • எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.
    • கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன்.

    சென்னை:

    தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தை கட்டிக் காத்த தீரர் அருமை சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயர செய்தி கேட்டுத் துடி துடித்து போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.

    இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்க் கொண்டு சிறை ஏகிய போராளி அவர். மிசா சிறை வாசத்தில் என்னோடும், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கலைஞரோடும் சிறையில் வாடியவர் அவர்.

    கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

    பரந்து விரிந்த ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட கழகத்தின் செயலாளராக அவர் இருந்தபோது, அந்த மாவட்டத்தை முழுவதுமாக வலம் வரவே ஓரிரு நாட்களாகும். அந்த மாவட்டத்தில் இருந்த ஒவ்வொரு ஊரிலும்-வீட்டிலும் தனது காலடித் தடத்தை பதிய வைத்து விட்டே வீடு திரும்புவார் அவர்.

    இப்படி கழகப் பணிகளே தன் உயிர் மூச்சென வாழ்ந்த அவர், உடல் நலிவுற்று இருந்த போதும் என்னைக் காண அண்ணா அறிவாலயம் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை மருத்துவமனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, ஓய்வெடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவரோ, தான் விரைவில் நலம்பெற்று அடுத்த கழக நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்றார். இப்படி எந்நேரமும் கழகமே அவரது சிந்தையில் நிறைந்திருந்தது.

    இத்தகைய அர்ப்பணிப் புணர்வாலும் ஆற்றல்மிக்க அவரது செயல்பாடுகளாலும், கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றிய கழக செயலாளராக, மாவட்ட கழக செயலாளராக, இரு முறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக என முத்திரை பதித்த அவரது உழைப்பும் தியாகமும் கழகத்தின் வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துகளால் நிரம்பியிருக்கும்.

    கடந்த 2021-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்கு கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவை தலைமை தாங்கி நடத்தி வைத்து பேசினேன். அதற்குள் அவரது மறைவுக்கு இரங்கல் சொல்லும் நாள் வந்துவிட்டதை எண்ணி மனம் வாடுகிறேன்.

    கும்மிடிப்பூண்டி வேணுவின் பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும், கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ் மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்ள முயல்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு என்றும் நம் நினைவுகளிலும் நெஞ்சங்களிலும் வாழ்வார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.
    • ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.
    • 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடாவை சேர்ந்தவர் இன்னசென்ட்.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இன்னசென்ட். 1972-ம் ஆண்டு ஷோபனா பரமேஸ்வரன் நாயர் தயாரிப்பில் ஏ.பி.ராஜ் இயக்கிய நிருதசாலா படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

    அதன்பின்பு குணச்சித்திர வேடங்களிலும், நகை ச்சுவை நடிப்பிலும் கொடிகட்டி பறந்தார். 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.

    இன்னசென்டிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மெல்ல, மெல்ல நோயில் இருந்து மீண்டார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இன்னசென்டை உறவினர்கள் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்னசென்டுக்கு நேற்றிரவு சுவாச பிரச்சினையும், மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் இன்னசென்ட் மரணம் அடைந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வயது 75.

    இன்னசென்ட் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்றனர். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் இன்னசென்ட் உடல் இன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான நடிகர், நடிகைகள், ரசிகர்கள், சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்பு இன்னசென்ட் உடல் அவரது சொந்த ஊரான இரிஞ்சாலகுடாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணிக்கு தாமஸ் பேராலயத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    மரணம் அடைந்த நடிகர் இன்னசென்ட் சாலக்குடி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆவார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    அப்போது தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

    நடிகர் இன்னசென்ட் மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் இன்னசென்டின் மறைவு கேரளாவுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்னசென்ட் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இன்னசென்ட் இறந்தாலும் அவர் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என மோகன்லால் கூறியுள்ளார். 

    • பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.
    • கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் உபய துல்லா.

    தஞ்சாவூா்:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    தி.மு.க. முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த உபயதுல்லா, என் மீது மிகுந்த அன்புக் கொண்டிருந்தவர்.

    1962-ம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் தலைவர் கலைஞரின் தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர்.

    மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர்.

    1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா. 4 முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய உபயதுல்லா 2006-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் வணிக வரித்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்தார்.

    கலைஞர்மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா 30 ஆண்டு களுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.

    இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் "கலைஞர் விருதினையும்", இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அர சின் "பேரறிஞர் அண்ணா விருதினையும்" எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன்.

    கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் உபய துல்லா. கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய உபயதுல்லாவின் மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும்.

    உபயதுல்லாவை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
    • என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராகவும், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் என்று முதலமைச்சர் கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத் தலைவருமான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    டாக்டர் மஸ்தான் உடல் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது.

    தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஸ்தான் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

    சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.

    அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறு பான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேரடியாக சென்று உரிய முறையில் முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர்.
    • ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்

    தருமபுரி,

    அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயலாளர் தர்மபுரி மணிவண்ணன் மறைவுக்கு மாநில தலைவர் சேலம் ஜங்சன் அண்ணாதுரை இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கார் மக்கள் இயக்கத்தை பட்டி தொட்டி எல்லாம் கால் ஊன்ற செய்த தர்மபுரி மணிவண்ணன் அவர்கள் இறந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனை அடைந்தேன். அவர் அம்பேத்கார் மீதும், டாக்டர் வை.பா அவர்கள் மீதும் அதிக பற்று கொண்டவர். தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், வாழ்வதற்கு வசதியின்றி,வழி இன்றி தவித்த ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் உழைத்தவர்

    .மக்கள் பிரச்சனைகளை ஆட்சியாளர்களிடமும், அரசு அதிகாரியிடமும் நேரடியாக சென்று உரிய முறையில் முறையிட்டு அவர்களுக்கு நீதி பெற்று கொடுத்தவர். 1977 -ம் ஆண்டு அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரை தன் இறுதி மூச்சு வரை அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் போர்வாளாக திகழ்ந்த தர்மபுரி மணிவண்ணன் இறப்பு அம்பேத்கார் மக்கள் இயக்கத்திற்கு மிகுந்த பேரிழப்பு.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்துவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறூ அவர் கூறியுள்ளார்.

    கேரளாவில் கனமழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #EdappadiPalanisamy
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 
    கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள நிவாரனங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
    ×