என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி- அண்ணாமலை இரங்கல்
- அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே, அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதும், நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதும், பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும், உயரிய சிகிச்சை அளிக்க, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும், விரைவில் நலம்பெற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் சமீபகாலமாக, தொடர்ந்து பேருந்து விபத்துகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






