search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navratri"

    • திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி-திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மீனாட்சி-சொக்கநாதர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற 20-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினால் திருமண பாக்கியம், குழந்தை பேறு, தொழில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளுமாறு கோவில் தக்கார் சக்கரையம்மாள், நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    நவராத்திரி விழாவில் தினமும் மாலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவையும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    • ஸ்ரீகாளஹஸ்தியில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
    • மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பல்வேறு கோவில்களில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உற்சவர் அம்மன், பிரம்மசாரினிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பங்காரம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முத்தியாலம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    • நவராத்திரி கொலுப்படிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
    • புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது.

    தஞ்சாவூர்:

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரையும் போற்றி வணங்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது. நவராத்திரி கொண்டாடும் ஒன்பது நாட்களுக்கும் அம்பாளை அழைக்கும் விதமாக கொலு வைக்கும் வைபவம் கோயில்கள் மற்றும் வீடுகளில் நடக்கும்.

    இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை அழைத்தும் , இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறவும் போற்றி வழிபடுகின்றனர்.

    அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. வரும் 23-ம் தேதி சரஸ்வதி பூஜையும், 24-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி கொலுப்ப டிகள் அமைக்கும் பணி தொடங்கியது.

    தஞ்சை -நாகை சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில், மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய கலை, கலாச்சாரம் ,வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும், விநாயகர், பார்வதி தேவியுடன் சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், துர்க்கை, நடராஜர் ,கருப்பசாமி, தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.

    இதேபோல் பல்வேறு வீடுகளிலும் பெண்கள் விரதம் இருந்து கொலு வைக்க தொடங்கியுள்ளனர். அஷ்டலட்சுமி ,ஆண்டாள், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி என பல்வேறு வகையாக பொம்மைகள் வைத்து அலங்கரித்து மங்களப் பொருட்கள் வைத்து அம்பாளை சிறப்பு பூஜை செய்து வீடுகளுக்கு அழைக்கின்றனர்.

    • அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • வருகிற 24-ந் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதநாயகி அம்மன்- வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. முன்னதாக மூல ஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், எழுந்தருளும் அம்மனுக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்தி அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலெட்சுமி அம்மன் கேடயத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    தொடர்ந்து, 10 நாட்களும் அம்மனுக்கு வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி சுந்தரமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று தோப்புத்துறை ரெயில்வே கேட் அருகில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, பணியாளா்கள், உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவா சைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலைப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனவீதி உலாவுக்கு முன்னதாக கோலாட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    • விழாவை முன்னிட்டு ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது
    • 24-ந் தேதி வரை மாலை அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதி அருகில் எல்லையம்மன் என்கிற ரேணுகாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூரில் ரேணுகாதேவி அம்மன் என உள்ள ஒரே கோவிலாகும்.

    இன்று நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவர் ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில் இன்று முதல் வரும் 24-ம்தேதி வரை மாலையில் வெகுவிமரிசையாக ரேணுகாதேவி அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    மேலும் இசைக்கச்சேரி நடக்கிறது.

    • திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில்
    • நவராத்திரி விழா தொடக்கம்


    திருச்சி


    பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். ஆண்டுதோறும் இங்கு நவராத்திரி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


    இந்தாண்டு நவராத்திரி விழா இன்று 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று மாலை அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் 2ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலுமண்டபத்தில் எழுந்தருளுகிறார்.


    2, 3ம்நாட்களில் அம்மன் ஏகாந்த காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 4ம்நாளான 18-ந்தேதி ராஜஅலங்காரத்திலும், 19-ந்தேதி தாம்பூலம் தரித்தல் அலங்காரத்திலும், 20-ந்தேதி ஜெபம் வழிபாடு அலங்காரத்திலும், 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 22-ந்தேதி சிவலிங்கம் வழிபாடு அலங்காரத்திலும், 23-ந்தேதி மகிஷாசூரன் வதை அலங்காரத்திலும், 24-ந் தேதி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் அம்மன் எழுந்தருளி 4ம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.


    இவ்விழாவையொட்டி நவராத்திரி மண்டபத்தில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.




    • பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது.
    • வருகிற 23-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஏழுமலையான் கோவிலில் அங்குரார் பனம் நடந்தது.

    இன்று இரவு 7 மணி அளவில் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரமோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயது குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது. இதனால் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருகிற 18-ந் தேதி மாலை முதல் 20-ந் தேதி காலை வரை மலைப்பாதைகளில் பைக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன. வருகிற 23-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பதியில் நேற்று 67, 785 பேர் தரிசனம் செய்தனர்.21, 284 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகின்றன.
    • அம்மனுக்கு காலை அபிஷேக ஆராதனையும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலைவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    அன்றைய தினம் பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படுகிறது.

    2-ம் நாளான 16-ந் தேதி மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகின்றன.

    இதேபோல் 3-ம் நாளான 17-ந் தேதி சதஸ் அலங்காரமும், 18-ந் தேதி காயத்ரி அலங்காரம், 19-ந் தேதி அன்னபூரணி அலங்காரம், 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 21-ந்தேதி சரஸ்வதி அலங்காரம், 22-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.

    நவராத்திரி விழாவின்போது தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகள்.
    • கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    * கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    • இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    *நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவிகளின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    * ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம் பெறச்செய்யவேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    • மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று நவராத்திரி.
    • சரஸ்வதி தேவிக்கு கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது.

    வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை போலவே, மிக பிரமாண்டமாக நடைபெறும் விழாக்களில் ஒன்று, நவராத்திரி. இந்த விழாவில் துர்க்கையை முன்னிறுத்தி அப்பகுதி மக்கள் வழிபாட்டை நடத்துவார்கள். தமிழ்நாட்டிலும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும், வட மாநிலங்களில் உள்ள ஆர்ப்பாட்டம் இங்கே இருக்காது என்றாலும், தெய்வீகமான வழிபாட்டு முறையை தமிழ் மக்கள் கையாளுவார்கள்.

    புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர் என்று அழைக்கப்படும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரை வழிபாடு செய்ய வேண்டும்.

    முதல் மூன்று நாட்கள் பார்வதி (துர்க்கை) வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் முறையாக நடத்தப்படும்.

    துர்கா தேவி

    நெருப்பின் ஒளி பொருளிய அழகும், ஆவேசப்பார்வையும் கொண்டு வீரத்தின் அடையாளமாகத் திகழும் தெய்வம் இவர். இச்சா சக்தியாக போற்றப்படும் இந்த துர்க்கையை, 'கொற்றவை', 'காளி' என்ற பெயர்களிலும் வழிபாடு செய்வார்கள். போர் வீரர்களின் தொடக்கம் மற்றும் முடிவின் வழிபாட்டுக்குரிய இந்த அன்னை, சிவ பிரியை ஆவார். இந்த அன்னை, மகிஷாசூரன் என்ற அரக்கனுடன் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக போரிட்டாள். இந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

    10-வது நாளில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நாளை நாம் 'விஜயதசமி' என்று வழிபடுகிறோம். வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜூவாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை. தீப துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் துர்க்கையின் அம்சங்கள். இவர்களை "நவ துர்க்கை' என்று அழைப்பார்கள்.

    லட்சுமி தேவி

    செல்வத்தின் தெய்வமாக விளங்கும் லட்சுமி தேவி. மலரின் அழகும், அருள் பார்வையும் கொண்டு அருள்பாலிப்பவர், கிரியா சக்தியாக இருந்து செயல்படுபவர். விஷ்ணு பிரியையான இந்த தேவி, திருப்பாற்கடலை கடைந்தபோது, அமிர்தம் தோன்றுவதற்கு முன்பாக வெளிப்பட்டவள். இந்த அன்னையும் அமிர்தம் போன்றவள் தான். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பார் இந்த தேவி.

    இந்த தேவியை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து. வறுமையை அகற்றும் சக்தி பெற்றவள். லட்சுமி தேவியின் அம்சமான ஆதி லட்சுமி, மகாலட்சுபி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் "அஷ்ட லட்சுமிகள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

    சரஸ்வதி தேவி

    கல்வியின் தெய்வமாக போற்றப்படும் சரஸ்வதி தேவி, அமைதியான பார்வையும், வைரத்தின் ஜொலிப்பும் கொண்டவர். ஞான சக்தியாக அருளும் இந்த தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் மட்டுமே தனிக்கோவில் அமைந்திருக்கிறது. பிரம்ம பிரியையான இந்த தேவியை, நவராத்திரி விழாவின் போது, மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும் நேரத்தில் வழிபாடு செய்வது முறையாகும்.

    நவராத்திரி நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வழிபடும் நாளை, 'சரஸ்வதி பூஜை' என்கிறோம். குழந்தைகளுக்கு இந்த நாளில் கல்வியை தொடங்குவதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நாளில் தொடங்கும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்த ரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் "அஷ்ட சரஸ்வதிகள்" என்று போற்றப்படுகின்றனர்.

    ×